நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை - 28

பெரியவாளிடம் பக்திபூண்டு பணிசெய்து வந்தவர்களில் ஒருவர் பெயர் ஆஞ்ஜநேயர் – குடும்ப வாழ்க்கை நடத்தியவர்.
அவருடைய பெற்றோர்கள் காலமாகிவிட்டார்கள்; மனைவியும் போய்விட்டார். ஒரே மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தாகிவிட்டது.
உலகக் கடமைகள் இனி ஏதுமில்லை.
”எனக்கு சந்யாசம் கொடுக்கணும்“ என்று பெரியவாளிடம் பலதடவை விண்ணப்பித்துக் கொண்டார். அவர் கோரிக்கையை, பெரியவா தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்கள்.
ஆஞ்ஜநேயருக்குப் பொறுக்கவில்லை.
“எனக்குக் கடமை – பொறுப்பு என்று எதுவும் மிச்சமில்லை. எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டேன்.”
“உனக்கு இன்னும் ஒரு பொறுப்பு இருக்கு…”
என்ன பொறுப்போ? எப்படிக் கேட்பது? யாரைக் கேட்பது?
ஆஞ்ஜநேயருக்கு ஒரு சகோதரர். அவர் பிரும்மசாரி, உஞ்சவிருத்தி எடுத்து, பாகவதோத்தமராக, புனிதமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.
பகவன்நாமாவை சொல்லிக்கொண்டே, ஒருநாள், உடலை நீத்தார் அவர்.கர்மாக்களை யார் செய்வது? ஆஞ்ஜநேயரைத் தவிர வேறு உறவினர் இல்லை.
தகவல் கிடைத்ததும், ஆஞ்ஜநேயர் சென்று, அந்திமக் கிரியைகளைச் செய்துவிட்டு வந்தார்.
பின்னர் ஒருநாள், “உன் கடமையெல்லாம் முடிஞ்சு போச்சு. சந்யாஸம் வாங்கிக்கலாமே?” என்றார்கள் பெரியவாள்.
பெரியவாள், தன் கோரிக்கையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததன் காரணம் அப்போதுதான் ஆஞ்ஜநேயருக்குப் புரிந்தது!
சில நாட்களுக்குள்ளேயே, அவர், அனந்தானந்த ஸ்வாமிகள் ஆனார்!
பெரியவாளுடன் கூடவே இருந்து, அவர்கள் சொன்னதையெல்லாம் எழுதி வைத்து, பின்னர், ‘தெய்வத்தின் குரலு’க்கு ஏராளமான விஷயங்களைக் கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment