Friday, December 18, 2020

கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்

 கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்


வானவனை வலிவலமும் மறைக் காடானை மதிசூடும் பெருமானை  
மறையோன் தன்னை ஏனவனை இமவான்தன் பேதை யோடும் இனிதிருந்த  
பெருமானை ஏத்து வார்க்குத் தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத்  
தீதிலா மறையோனைத் தேவர் போற்றும் கானவனைக் கஞ்சனூர் ஆண்ட  
கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்த் தேனே.

-திருநாவுக்கரசர்

*தல வரலாறு*

முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர்.

வைணவக்குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது.

திருநீறு, உருத்திராக்கதாரியாக திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து “சிவமே பரம்பொருள்’ என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர்.

இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர்சன்னதியிலும் உள்ளது.

பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

ஹரதத்தருக்கு உபதேசித்து அருள்செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது.

இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர்.

ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்துவந்தார்.

அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை.

காரணம் புரியாது அவர் விழித்தார்.

விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார்.

இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன.

ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்குநோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.

சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார்.

இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்துவந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது.

அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அவர் செய்வதறியாது திகைத்தார்.

அதிதிகளுக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணி கலங்கினார்.

அப்போது இறைவன் அசரீரியாக “ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு’ என்று அருளிச்செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

*கல்நந்தி*

பிராமணர் ஒருவர் புல் கட்டை தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக்கன்று ஒன்று இறந்தது.

இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது என்று பிராமணர்கள் அவரை தங்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டனர்.

அவர் செய்வதறியாமல்ஹரதத்தரிடம் முறையிட்டார்.

அவ்வாறு முறையிடும்போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார்.

அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர்.

ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்துவந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார்.

அப்பிராமணரும் அவ்வாறே செய்து, “கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்” என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டதாக வரலாறு.


No comments:

Post a Comment