Friday, December 18, 2020

நம் எல்லோருக்கும் பட்டினத்தார் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்.

 


அதிக நேரம் உங்கள் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கையில் இருக்கும் நேரம் எல்லாம் மூன்று ஒலிகளுக்குள் அடங்கிவிடும் என்கிறார். மூன்று முறை சங்குகள் ஒலிக்குமாம்; பிறகு நாம் இருக்க மாட்டோமாம். புரியவில்லையா?

நான்கே வரிகளில் அவர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்று கேளுங்கள்:

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள். இது நமக்கு இறைவன் விட்ட முதல் எச்சரிக்கை. ஆங்கிலத்தில் வினா விடை போட்டி நடத்துவோர் ஒவ்வொரு குழுவுக்கும் குறித்தநேரம் கொடுப்பர். விளையாட்டு துவங்கும் போது YOUR TIME STARTS NOW ‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ எனபர். கடிகாரம் ஒவ்வொரு வினடி ‘டிக்,டிக்’ என்று அடிக்கும்போது நம் இருதயம்— நேரம் முடிந்துவிடுமே– என்று ‘டக், டக்’ என்று அடிக்கும். அதுபோல உன் வாழ்நாள் கடிகாரம் இதோ துவங்கிவிட்டது (Your Clock is Ticking) என்று கடவுள் எச்சரிக்கிறார் முதல் சங்கில்!

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர். அதாவது அது ஒரு மங்கல வாத்தியம். ஆண்டாள் கூட வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

பட்டினத்தார் என்ன சொல்கிறார்? திருமணத்தன்று நமக்கு விலங்கு பூட்டப்படுகிறது என்பார். பேச்சுத் தமிழிலும் கூட அவன் திமிர் பிடித்த காளை போலத் திரிகிறான். எல்லாம் ‘கால் கட்டு’ போட்டால் சரியாகி விடும் என்று தானே பெரியோர் அங்கலாய்க்கிறார்கள்! சம்ஸ்கிருதத்திலும் இதற்கு சம்சார ‘பந்தம்’ (கட்டு) என்றே பெயர். ஆண்டவன் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது!

மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆகையால், மெய்யன்பர்களே!

ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!!

என்பது இறைவன் விடுத்த செய்தி ஆகும்.

நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!

பூமியில் இருக்கும் வரை நல்லதையே  செய்யுங்கள்... 

No comments:

Post a Comment