Wednesday, March 8, 2017

நவராத்திரியில் சஹஸ்ரநாமமும் தேவி உபாஸனை வழிபாடு நீண்ட சிறப்பு பதிவு :-

நவராத்திரியில் சஹஸ்ரநாமமும் தேவி உபாஸனை வழிபாடு நீண்ட சிறப்பு பதிவு :-
அம்பாளை ஆராதிப்பதற்கு ரொம்ப உத்க்ருஷ்டமான சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிற சம்ப்ரதாயத்தை அனுசரித்து எல்லோரும் அனுஷ்டானம் செய்து கொண்டு வருகிறோம். அம்பாளை நாம் சாதாரணமாக ஸஹஸ்ர நாமங்கள் சொல்லி ஆராதிப்பது உண்டு. ஸஹஸ்ர நாமங்கள் என்று சொன்னால் நாம் சொல்லி வருவது சாதாரணமாக லலிதா ஸஹஸ்ர நாமம்தான். அந்த லலிதா ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லி நாம் அம்பாளை ஆராதிப்போம். நிஜமாக அந்த ஸஹஸ்ர நாமத்தினுடைய அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டால் அது ஒரு ரொம்பப் பெரிய விஷயம். அது புரிந்து கொண்டு அதன்படி நாம் நடந்துகொண்டால் நாம் அம்பாளுடைய பரிபூரண க்ருபைக்குப் பாத்ரமாவோம். ஸஹஸ்ர நாமங்களில் அம்பாளுடைய மகிமை எவ்வளவு? என்பதைச் சொல்லியிருக்கிறது. அம்பாளுடைய பூஜை பண்ணக் கூடியவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறது.
வேதாந்தத்து சித்தாந்தம் என்ன என்பதையும் இங்கு சொல்லியிருக்கிறது. எல்லாமே சொல்லி இருக்கிறது. அம்பாளுடைய மகிமை என்ன என்பதன் விஷயம் வரும்போது “பவதாவ ஸூதா வ்ருஷ்டி: பாபாரண்ய தவானனா
தௌர்பாக்ய தூல வாதூனா
ஜராக் வாந்த ரவிப்ரபா
பாக்யாப்தி சந்த்ரிகா
பந்த சித்த கேகி கனாகனா
போக பர்வத தம்தூளி;
ம்ருத்யு தாரு குடாரிகா
என்று சொல்லியிருக்கிறது. அவளை (அம்பாளை) பூஜித்தால் என்ன வெல்லாம் கிடைக்கும்? என்றால் கிடைக்காதது ஒண்ணுமில்லை. “பவதாவ ஸுதா வ்ருஷ்டி; ‘பவம்’ என்று சொன்னால் இந்த ஒரு சம்சார சக்கரம். சம்சார சக்ரம் என்று சொன்னால் ஜனன மரணாத்மக ஒரு ப்ரவாகம். பிறக்கிறோம். கொஞ்சம் வருஷம் இந்தப் பூமண்டலத்தில் இருக்கிறோம். திரும்ப இந்த சரீரத்தை விட்டு விடுகிறோம். இன்னொரு சரீரம் வருகிறது. அந்த சரீரத்துலே கொஞ்சம் சுகமோ, துக்கமோ அனுபவிக்கிறோம். போய் விடுகிறோம். திரும்ப இன்னொரு சரீரம். இந்த ஒரு சக்ரம், இது தான் சம்சார சக்ரம் என்பது. எத்தனை காலம் இந்த சக்ரத்தில் சுற்றிக் கொண்டு இருப்பது? இதில் என்ன சௌக்யம் இருக்கிறது? பார்த்தால் இதில் ஒரு சௌக்யமும் இல்லை. இந்த சக்ரத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அம்பாளுடைய தயவு வேண்டும். அதிலிருந்து விடுதலை கொடுக்கக் கூடியவள் அம்பாள். “பவதாவ ஸூதா வ்ருஷ்டி;” அதாவது அந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காட்டிலே தீப்பிடித்து விட்டால் அந்தத் தீ அணைய வேண்டும் என்று சொன்னால் நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் அது ஒண்ணும் அணையாது. ஆனால் ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை)வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் என்று சொன்னால் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள்.
இரண்டாவதாக “பாபாரண்ய தாவன லா” என்று சொல்லி இருக்கிறது. பாபங்கள், பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். பாபங்கள் செய்யாதவன் யார்? என்று கேட்டால் யாருமே இல்லை. எல்லாரும் ஏதோ ஒரு விதமாக பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். சிலர் சொல்வார்கள். நான் ஒரு பாபமும் செய்யவில்லை என்று சொல்வார்கள். அது சும்மா நீங்கள் சொல்வதோடு சரி. செய்கையிலே உங்களுக்கு அப்படி இருக்க முடியாது. அது தான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே, மனிதன் பிறந்த அன்றிலிருந்து சாகிற வரையிலும் ஒரு விதமான பாபமும் செய்யவில்லை என்று நெஞ்சு தட்டிக் கொண்டு சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.
“வாசா’ ஜன்ம ப்ராயண யோஹோ
அந்த ராளே காம்ய ப்ரதி ஸித்த போஹோ
ஸர்வாத் மனா வர்ஜனம்
கேனி சித் ப்ரதிக்ஞாதம் அசக்யம்”
பகவத் பாதருடைய வாக்யம் இது. “ஸ்வநிபுணானாம் அபி ஸுஷ்மா பராத தர்சனா”
அதாவது சம்ஸ்க்ருதத்துலே அவருடைய வார்த்தைக்கு அர்த்தம். எவனுமே பிறவியிலிருந்து சாவதற்குள்ளே அந்த சமயத்துலே எந்த விதமான ஒரு காம்ய கர்மத்தையோ, நிஷித்த கர்மத்தையோ அதாவது பாபத்தையோ செய்யவில்லை என்று “ப்ரதிக்ஞா’ செய்ய முடியாது. எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொள்ளும் நபர்களுக்கும், தனக்குத் தெரியாமலே சில தப்பிதங்கள் நடந்து போய் விடும். அதனாலே நம்மால் பாபங்கள் நடக்கவில்லை என்று நாம் சொல்லவே முடியாது. பின்பு என்ன சொல்லலாம்? நான் தெரிந்து ஒரு தப்பிதமும் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தெரியாமல் எவ்வளவு தப்பிதங்கள் நடக்கிறதோ தெரியாது. தெரியாமல் தப்பிதம் நடந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமோ என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனென்றால்
“அனிச்ச யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ
தஹத்யே விஹி பாவத:
நெருப்பு இருக்கிறது. ஒரு சின்னக் குழந்தை நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது தெரியாது. நெருப்பைத் தொட்டு விட்டது. அப்போது அந்த நெருப்பு அந்தக் குழந்தையின் கையில் சுடாமல் விடுமா? சுடும். அப்போது நாம் போய் அதுகிட்ட “என்ன குழந்தை தெரியாமல் தொட்டு விட்டால் அதையே நீ சுட்டு விட்டாயே!” என்று நாம் யாராவது அந்த நெருப்பை சத்தம் போடலாமா?
அதே போல் நாம் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாபத்துக்குப் பலன் இருக்கவே இருக்கிறது. அதேபோல் புண்யத்துக்கும் பலன் இருக்கிறது.
ஒருவனுக்குத் தெரியவில்லை. அது புண்யம் என்று சொல்லி பண்ணி விட்டான். ஆனாலும் அந்த புண்யத்துடைய பலன் கிடைக்கத்தான் செய்யும்.
அதாவது ஓர் இடத்துலே இந்த மாதிரி ஒரு  ஸத்காலட்சேபம் நடந்து கொண்டு இருந்தது. ஒருவன் வந்தான். இங்கு காலட்சேபம் நடக்கிறது என்பதே தெரியாது. அந்த இடத்துலே உட்கார்ந்தான். ஸ்வாமிதர்சனம் பண்ணினான். போய் விட்டான். அவனுக்கு அந்த பலன் இருக்கவே இருக்கும். பஜனை நடந்து கொண்டு இருந்தது. அவனும் அவர்களோடு சேர்ந்து அந்த பஜனை நாமத்தை உச்சரித்தான். அதனுடைய பெருமை என்ன என்பது தெரியாது. எல்லாரும் பகவான் நாமா சொல்கிறார்கள். அவனும் சொல்லிவிட்டான். அந்த பலன் அவனுக்கு இருக்கவே இருக்கும். அதுதான் பூர்வார்த்தத்துலே சொன்னார், “தஹரர் ஹரதி பாபானே
திஷ்ட தித்மதர விஸ்ம்ருத:
என்று சொன்னார். அதனால் நாம் பாபங்கள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாபம் பாபம்தான். அதற்கு பலனை அனுபவிக்க வேண்டியது உண்டு. அப்போது எத்தனையோ பாபங்கள் நடக்கிறதே இந்த எல்லாப் பாபங்களுக்கும் நாம் ப்ராயச்சித்தத்துக்கு  எங்கே போவது? அந்த ப்ராயச்சித்தங்கள் நமக்குத் தெரியவும் தெரியாது. அதனால் இந்த இத்தனை பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் தேவியினுடைய நாமத்தை உச்சாரணம் செய்தால், தேவியினுடைய மகிமையைச் சொல்லும் போது ஏகஸ்ய நாம்ணே
ஞான  சக்தி:
பாப கானான் நிவர்த்தயே
தன் நிவர்த்ய மதே கர்த்தம்
மானன் லோகாய் ஸதுர்தசே”
இந்தப் பதினான்கு லோகங்களிலே இருக்கக் கூடிய ஜனங்கள் அத்தனை பேரும் செய்த பாபங்கள் எல்லாவற்றையும் தேவியுடைய ஒரு நாமமே போக்கும் என்று அதற்கு அர்த்தம். அப்பேர்ப்பட்ட மகிமை பகவன் நாமாவுக்கு இருக்கிறது. அதெல்லாம் வெறும் கதை. நாம் எப்படி நம்ப முடியும் என்று சொன்னால் நாம் எப்படி நம்ப முடியும் என்று சொல்லிக் கொண்டு இருப்பவன் அப்படியே உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டியதுதான். வந்து இவன் விஞ்ஞானம் ரொம்ப வராத சந்தர்ப்பத்துலே இந்த காலத்திலே ரேடியோ என்று ஒரு கருவி இருக்கிறதாமே! அதிலே பேச்சு வந்து கொண்டிருப்பதைப் பார்த்துட்டு அந்த பழைய காலத்து ஆட்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்களாம், ஏய்! அதிலே எவனோ உட்கார்ந்து கொண்டு பேசறாண்டா! இல்லாவிட்டால் எப்படி சப்தம் கேட்கும்? இல்லை ஓய்! அது எங்கேயோ டெல்லியிலோ எங்கோ என்றால் டேய்! டெல்லியிலே பேசுவது இதற்குள் எப்படி கேட்கமுடியும்? அதற்குள்ளே எவனோ உட்கார்ந்து பேசுகிறான். நீ நம்பா விட்டால் நான் என்ன பண்ணுவது ஐயா! அது விஷயம் அப்படித்தான். என்று இவன் சொல்கிறான். அதே போல் சாஸ்த்ரம் சொல்கிறது.அதில் நமக்கு சந்தேக ப்ரவிருத்தி இருந்தால் நமக்குத்தான் அதனுடைய பலத்தை அடைய முடியாதே தவிர சாஸ்த்ரத்தினுடைய தப்பு ஒண்ணும் இல்லை.
அதனால் பகவன் நாமத்துக்கு இவ்வளவு மகிமை இருக்கு என்று சாஸ்த்ரம் சொல்கிறது. இருக்கிறது வாஸ்தவம்தான். நாம் தினமும் பூஜை எல்லாம் செய்து முடித்தபிறகு கடைசிலே ஒரு ஸ்லோகம் சொல்கிறோம். ஏதோ அவர்கள் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நாம் சொல்கிறோம் என்பதைத் தவிர அர்த்தத்தை யாரும் கவனிப்பது கிடையாது.
“யஸ்ய ஸ்ம்ருத்யாச நாமோத்யா
தபப் பூஜா க்ரியா திஹு
மோனம் சம்பூர்ணதாம்
யாதி சத்ய வந்தே தவஸ்யதம்
அந்த பரமாத்மாவின் ஸ்மரண மந்திரத்திலேயும் எந்த பரமாத்மாவின் நாமத்தை உச்சாரணம் செய்த மாத்திரத்திலேயே நாம் செய்யக் கூடிய கர்மாவில் ஏதோவகையில் ஒரு சிறிய கம்மி இருந்தாலும் அதாவது மந்த்ரம் சரியாக சொல்லவில்லை, அல்லது சரியாக அந்த தந்த்ரம் செய்யவில்லை. அல்லது பதார்த்தங்கள் சரியாகக் கொண்டுவரவில்லை. அல்லது தப்புத் தப்பாக நடந்து விட்டது, என்று எந்த ஒரு குறை இருந்தாலும், அந்தக் குறை அவ்வளவும் எந்த பரமாத்மாவின், நாமோச்சாரணத்தினாலேயே எந்த பரமாத்மாவின் ஸ்மரணத்தினாலேயே நீங்குமோ அப்பேர்ப்பட்ட பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன் என்று அந்த ஸ்லோகத்தில் இருக்கிறது. “ஸ்ம்ருதி:” என்றால் ஸ்ரேணம் = நினைவு, பரமாத்மாவின் நாமத்தை உச்சரிப்பு = நாமோத்யா, நாமோத்தி: என்பதற்கு, உச்சரிப்பினாலேயும், தபப் பூஜா க்ரியா திஷு = நாம் செய்யக் கூடிய பூஜையிலே நாம் செய்யக் கூடிய இன்னும் எல்லா ஸத்கர்மாக்களிலேயும் ஊனம், அதில் என்னவெல்லாம் குறைவு வருகிறதோ அது எல்லாம் சம்பூர்ணமாகிறது. அது எப்போது? சத்ய = உடனே. தவச்சிதம் வந்தே = அந்தப் பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன்.
பகவானுடைய மகிமையைச் சொல்வதற்கு இப்பேர்ப்பட்ட ஸ்லோகங்களை முன்னோர்கள் நமக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த அர்த்தத்தை நாம் அனுசந்தானம் செய்வதில்லை. அப்பேர்ப்பட்ட மகிமை பகவானுடைய நாமோச்சாரணத்துக்கு இருக்கிறது என்பதைச் சொல்கிறபோது இனி நாம் அதில் சந்தேகப்பட்டால் என்ன ப்ரயோஜனம்? ‘ஸம்சயாத்மா வினஸ்ய தி’ என்று பகவான் சொன்னார். சந்தேகம், சந்தேகம் என்று இருப்பவனுக்கு நாசம் தான். அவனுக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம் தானே!
“நாயம் லோபோஸ்தி
நபரோ ஸம்சயா த் மன”
அந்த ஸம்சயாத்மா ஆனவனுக்கு இக பரலோகத்துலேயும் சுகம் கிடையாது. பரலோகத்துலேயும் சுகம் கிடையாது. இனி எதற்கெடுத்தாலும் அவனுக்கு சந்தேகம் ஆனதினாலே நீ சாப்பிடு! சாப்பிட்டால் வயிறு நிறையும் என்றால் நிறையுமோ, நிறையாதோ நான் எப்படி சாப்பிடுவது? இதில் என்ன போட்டிருக்குகிறார்களோ என்னவோ? நான் எப்படி சாப்பிடுவது? பால் கொண்டு கொடுத்தால் பாலில் என்ன சேர்த்திருக்கிறார்களோ? நான் எப்படி சாப்பிடுவது? நீ ஸ்கூலுக்கு போ! ஸ்கூலில் அங்கே பாடம் சொல்லிக் கொடுப்பார்களோ, மாட்டார்களோ, நான் ஏன் போகணும்? இந்த மாதிரி ஆரம்பித்துவிட்டால் அவனுக்கு இங்கேயும் சுகமில்லை. ஜன்மாந்தரத்திலேயும் சுகமில்லை என்பது தீர்மானம். அதனாலே நாம் இந்த விஷயத்துலே பகவானுடைய நாமத்துக்கு அபாரமான மகிமை உண்டு என்கிற விஷயத்துலே சந்தேகப்படக் கூடாது. அதற்காகத்தான் அங்கே தேவியைச் சொல்கிற போது,”பாபாரண்ய தவானலா” எப்படி காட்டுக்கு ஒரு தீ பிடித்து விட்டால் அந்தக் காட்டை முழுவதும் பஸ்பமாக்கி விடுமோ, அதேபோல் நம்முடைய பாபங்கள் எல்லாவற்றையும் பஸ்மமாக்கக் கூடிய பவித்ரமான நாமம் தேவியினுடையது. அதேபோல் “தௌர்பாக்ய தூல வாதூலா” நம்முடைய தாரித்ரியத்தை மரணம் பண்ணக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. “ஜராத்ராந்த ரவிப்ரபா” வயசு ஆகி ரொம்ப முடியாத நிலைமை இருந்து அந்த அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிற சமயத்துலே அந்த தேவியுடைய ஸ்மரணம் அந்த தேவியுடைய நாமோச்சாரணம் மனத்திற்கு வந்தால் நாம் சௌக்யமாக இருக்க முடியும். “பாக்யாப்த சந்த்ரிகா” = சகல சௌபாக்யங்களும் அவருடைய தயவினாலே ப்ராப்த்திக்கும். ‘பக்தி சித்த கேகி கனா கனா” = பக்தர்களுடைய மனத்திற்கு அந்த தேவியினுடைய ஸ்வரூபம் வந்தால் அத்யந்த ஆனந்தமாக இருக்கும்.
“ரோக பர்வததம் போளிர் மீருத்யு” தாரு குடாரிகா = சகல ரோகங்களையும் தேவி நிவர்த்தி ஆக்குவாள். எந்த விதமான அப ம்ருத்யுக்களும் தேவி உபாசகர்களுக்கு வராது.
இப்பேர்ப்பட்ட மகிமை பரதேவதைக்கு இருப்பதனாலே நாம் அந்தப் பரதேவதையை ஆராதிக்கிறோம். அதேபோல் அவளைப் பூஜிக்கிறவருடைய விஷயத்தைச் சொல்கிறபோது ஓர் இடத்திலே அதே சஹஸ்ர நாமத்திலே சொல்கிறது, “அந்தர்முக சமாராத்யா பஹிர் முக ஸுதுர் லபா”
அந்தர் முகன், பஹிர் முகன் என்று சொன்னால் எவனுடைய மனத்திலே அந்தப் பரதேவதையைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இல்லையோ அவன் உத்தமன் = அந்தர் முகன். எவனுக்கு பூஜைக்கு உட்கார்ந்தாலும் மனது அங்கே இல்லையோ அவன் பஹிர்முகன். நமக்கு உட்கார்ந்தோம் என்ற பெயரே தவிர அங்கே டெலிபோன் வந்திருக்கிறதே அதை அட்டென்ட் பண்ணனும், இங்கே இன்று ரேடியோவில் (ஸீமீஷ்s) செய்தி என்ன வருகிறது? அதைக் கேட்கணும். ஏனென்றால் சரியாக பூஜைக்கு உட்கார்ந்த போதுதான் அது வருமாம். அதனால் அதையும் விட முடியாது. அதனால் அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். ஒருபக்கம் டெலிபோன், மறுபக்கம் ரேடியோ நடுவிலே பூஜை. அப்பேர்ப்பட்ட பஹிர்முகர்களுக்கு தேவி அத்யந்த துர்லபமானவள். நமக்கு பூஜை என்று சொன்னால் மனசு அங்கே லயித்திருக்கிறதா இல்லையா என்பது நமக்கு அத்யந்த அவச்யகமானது.
“அந்தர்முக சமாராத்யா”
அதனால்தான் அப்பேர்ப்பட்ட அந்தர்முகமானவன், அதாவது பகவத் விஷயத்துலே மனசு லயித்திருப்பவன் அவன் பூஜை செய்ய வேண்டும்.
அதேபோல் இன்னோர் இடத்திலே சொல்லியிருக்கிறது. “பௌத்ரியாதி வாசனா லப்யா” என்று சொல்லியிருக்கிறது. சில வாசனைகள் வாசனை என்றால் புஷ்பத்தினுடைய வாசனை என்று அர்த்தம் இல்லை. சில ஸம்ஸ்காரங்கள். என்ன என்றால் மத்ரி, கருணா, மோதித, உபேக்ஷா, சுக, துக்க, புண்யா புண்ய விஈயானாம் பாவானாத: சித்தப் ப்ரஸாதனம்” என்று வேத சாஸ்த்ரத்திலே சொல்லியிருக்கிறது. அதாவது உலகத்துலே சிலருக்கு ரொம்ப சுகம் கிடைக்கிறது. சிலருக்கு ரொம்ப துக்கம். சிலர் எப்போதும் நல்ல கார்யங்கள் பண்ணுகிறார்கள். சிலர் கெட்ட கார்யங்கள் பண்ணுகிறார்கள். அப்பேர்ப்பட்ட ஆட்களைப் பார்க்கும்போது நம்முடைய மனசுலே எப்படி இருக்கணும் என்கிற ஒரு ப்ரச்னை, நமக்கு சாதாரணமாக எப்படி வருகிறது என்று கேட்டால் மனுஷ்யனுக்கு இயற்கையாக ஒருத்தன் ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் அவனைப் பார்த்தால் வயிற்றெரிச்சல்! என்ன சௌக்யமாக இருக்கிறான் என்று கேட்டால் “சார்! அவன் எப்படி வந்தான் என்று தெரியும் ஓய்! எல்லாம் கள்ளப் பணம் தானே! (உடனே) சௌக்யமாக இருக்கான். புண்யம் பண்ணியிருக்கிறான், ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் போதாதா? அது இல்லை, ஒருத்தன் ரொம்பக் கஷ்டப் படுகிறான். படட்டும். இன்னும் கஷ்டப் படட்டும். அதைப் பார்த்தால் ஒரு கருணை உண்டாக வேண்டாமா? அது கிடையாது. ஒருத்தன் ரொம்ப நல்ல கார்யங்கள் பண்ணுகிறான். அதைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாதா? ஒருத்தன் நல்ல கார்யங்களைச் செய்கிறான் என்று சொன்னால் அங்கே ஏதாவது ஒரு குற்றம் கண்டு பிடிக்கிறதே தவிர அங்கே சந்தோஷப்படுவது என்பதே கிடையாது. அதேபோல் ஒருத்தன் தப்பிதம் பண்ணுகிறான் என்று சொன்னால் நமக்கு முடிந்தால் அவனுக்கு புத்திமதி சொல்லுவது இல்லை என்றாலும் பேசாமல் இருக்கலாம். அது போதும். எப்போதும் அவனைப்பற்றித் திட்டிக் கொண்டே இருப்பது அது எதற்கு? அதுவும் கூடாது. அதுதான் அங்கே சொல்லியிருக்கிறது. மைத்ரி, கருணை, முதிதா உபேக்ஷா. ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் அவன் விஷயத்துலே வயித்தெரிச்சல் பட வேண்டாம். ஸ்நேகத்தோடு இரு. ரொம்ப சந்தோஷம் ஓய்! சௌக்யமாக இருக்கிறீர்கள். சந்தோஷம். ஒருத்தன் ரொம்ப கஷ்டத்துலே இருக்கிறான் என்று கேட்டால் அவன் விஷயத்துலே கருணையோடு இரு. துக்கத்திலே இருக்கான் என்று சொன்னால் அவன் விஷயத்துலே ஒரு கருணை வேணும். கருணை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய துக்கத்தை நீக்க வேண்டும் என்ற விருப்பம் மனத்திலே உண்டாவது. அப்படிப்பட்ட ‘தயை’ என்பது உனக்கு வரவேண்டும். “என்னப்பா! ரொம்ப கஷ்டப் படுகிறாய். எனக்கு முடிந்த அளவுக்கு நான் உனக்கு உதவி செய்கிறான்.”
ஒரு ‘ஜீவித வாகனன்’ என்கிற ஒரு வித்யாதரனுடைய கதை இருக்கிறது. அது ஸம்ஸ்க்ருதத்துலே’ நாகானந்தம்’ என்கிற ஒரு நாடகத்துலே எழுதியிருக்கிறார்கள். ஒரு கருணருசிப்ரதானமான கதை. அதைப் படித்தால் கண்ணிலே ஜலம் வராதவனே கிடையாது. அப்பேர்ப்பட்ட ‘கருணாரசம்’ ரொம்ப இருக்கும் அந்த நாடகத்துலே. அதாவது இந்த கருடன் வந்து சர்பங்களை, தினமும் ஒரு சர்பத்தை சாப்பிடுவேன் என்று ப்ரதிக்ஞை பண்ணிக் கொண்டான். இல்லாவிட்டால் சர்ப குலத்தையே நாசம் பண்ணுவேன் என்று சொல்லி விட்டான். அப்போது அவர்கள் எல்லாரும் என்ன பண்ணினார்கள் என்று கேட்டால் “நாங்களே உனக்கு தினம் ஒரு சர்ப்பத்தை (பாம்பை) அனுப்புகிறோம். நீ எங்கள் குலத்தை நாசம் செய்யாதே” என்று சொன்னார்கள். அதே போல் தினமும் ஒரு சர்ப்பம் வரவேண்டியது, அதை கருடன் சாப்பிட்டு விட்டுப் போவது என்று இருந்தது. இந்த ஜீவித வாகன்’ என்ற வித்யாதரன்  ஒருதடவை அந்தப் பக்கத்துக்கு வந்தான். அங்கே வந்து பார்க்கும் போது அன்று ஒரு பாம்பு “சங்கசூடன்’ என்று பெயர். அன்று அதனுடைய சர்த்தை. கருடன் அங்கே வரணும் அந்த ‘சங்க சூடனை’ சாப்பிட வேண்டும். அப்போது அந்த வித்யாதரன் ‘ஜீவித வாகனன்’ கேட்டார். “என்னப்பா இங்கு வந்திருக்கிறாய்? இன்று என்னைத் தான் கருடனுக்கு ஆஹாரமாக எங்கள் வாசுகி அனுப்பியிருக்கிறார். வந்திருக்கிறேன். அது என்னப்பா? உன்னை கருடன் சாப்பிடவேண்டுமா? ஆமாம்!  சரி இன்று என்னைச் சாப்பிடட்டும். கருடன் நீ உயிரோடு இருந்து கொள். “என்றானாம், சாத்யமில்லையே சாத்யமில்லை. நான்தான் இன்று கருடனுக்கு ஆஹாரம். அதுதான் அங்கே என்ன ஒரு திட்டம் பண்ணியிருக்கிறார்கள் என்று கேட்டால் ஒரு சிவப்பு துணியை மாலை போட்டுக் கொள்ள வேண்டியது. மேலே போட்டுக் கொண்டு அங்கே ஒரு சில ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல்லில் உட்கார வேண்டியது. உடனே அந்த கருடன் வருவான். அந்தத் துணியை எடுத்து விட்டு அந்தப் பாம்பை சாப்பிட்டு விட்டுப் போய் விடுவான். இந்த ஜீவித வாகனன் கேட்டான் “அந்த சிவப்புத் துணியை எனக்குக் கொடு. நான் மேலே போட்டுக் கொண்டு உட்காருகிறேன். இதற்கு வத்தி சிலை என்றுபெயர். அந்த ‘வத்தி சிலை மேல் உட்காருகிறேன்” சாத்யமே இல்லை என்று அந்தப் பாம்பு சொன்னதாம். “இல்லை நான் உன்னைக் காப்பாற்ற வேண்டும். ஏய் எனக்காக நீ உயிரை விட்டால் என்ன ப்ரயோஜனம்?” என்று பாம்பு கேட்டதற்கு ஜீவித வாகனன் சொல்கிறான், “இந்த உயிரைக் கொடுத்தால் ஒருவனைக் காப்பாற்ற முடியும் என்று சொன்னால் அவச்யம் அதைக் கொடுக்க நான் தயார். இதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது?” அவன் அப்படியே அந்த ஜீவித வாகனன் அந்த வத்தி சிலையிலே உட்கார்ந்தான் கருடன் வந்தான். வரும்போது இவனுக்கு சந்தோஷம். முதல்நாள்வரை அந்த பாம்புகள் நடுங்கிக் கொண்டு இருந்தன (கருடன் வரும்போது) இன்று இவன் மிக சந்தோஷத்துடன் வாருங்கள் என்னுடைய புண்யத்தினால நீங்கள் வந்திருக்கிறீர்கள் சாப்பிடுங்கள் என்னை” என்றானாம். அதைக்கேட்டு கருடனுக்கு அபரிமிதமான ஆச்சர்யம். இன்று வரை யாரும் இந்த வார்த்தை சொல்லவில்லையே! நான் வரும்போது நடுங்கிக் கொண்டு இருந்தார்களே இவன் வந்து என்னை சாப்பிடுங்கள் என்று சொல்கிறானே! என்று நினைத்துக் கொண்டு “என்ன யோசனை பண்ணுகிறீர்கள்.? என்ன! என்னை சாப்பிட உங்களுக்கு பிடிக்கவில்லையா? தாராளமாக சாப்பிடுங்கள்” என்றானாம். பின்பு கடைசியிலே கருடனுக்கு “ஏய்! இப்படிப்பட்ட ஒரு பவித்ர ஆத்மா இருக்கிறானே! தன்னுடைய உயிரைக் கொடுத்து இன்னொருவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு இருந்தானே! அப்போது இத்தனை நாள்கள் நான் என்ன பாவம் பண்ணினேன்?” என்று கருடனுக்கு பச்சாதாபம் வந்து விட்டது என்று சொல்வார்கள்.
அதாவது கருணை என்று சொன்னால் இன்னொருத்தனுக்கு எப்படியாவது நாம் உதவி செய்ய வேண்டும் என்கிற ஒரு பாவம். அந்த பாவத்தை விட்டு விட்டு அவன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று சொன்னால், இருக்கட்டும் என்று சொன்னால் அது என்ன குணம்? அதேபோல் ஒருத்தன் புண்யம் பண்ணுகிறான் என்று சொன்னால் அங்கு சந்தோஷத்தைக் காட்ட வேண்டும். ஓ! பெரிய கார்யம் பண்ணுகிறீர்கள். இன்னும் பண்ணுங்கள். சந்தோஷம். உங்கள் மாதிரி தர்மிஷ்டங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லவேண்டாமா? அதை விட்டு விட்டு அவர் எப்படி பண்ணுகிறார் எனக்கு தெரியாதா? என்று சொல்லவேண்டுமா? அவர் எந்த பக்கத்திலிருந்து வருகிறார் என்று தெரியுமா? எந்த பக்கத்திலிருந்து வந்தால் என்ன? அவன் செய்கிற நல்லகாரியத்தைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டாமா? இன்று ஒருவர் என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
ஸ்வாமிஜி! உலகத்துலே ஒரு பெரிய ஆச்சர்யம் என்ன பார்க்கிறோம் என்று கேட்டால் (சாதாரணமான மனிதர்கள் சொல்வது தான்) பெரிய, பெரிய தணிகர்கள் அதாவது ஒரு நாளுக்கு பத்து லட்க்ஷம், இருபது லட்க்ஷம் வியாபாரம் பண்ணிக் கொண்டு இருக்கக் கூடிய தணிகர்கள் (பணக்காரர்கள்) இருக்கிறார்களே! அவர்களுக்கு வருஷத்துக்கு ஒரு லக்ஷம் ரூபாய் தர்மம் பண்ண வேண்டும் என்று கூட மனசு வர மாட்டேன் என்கிறது. அந்த விஷயம் (தர்மம்) வரும்போது நான் கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லி விடுகிறார்கள். ஒரு நாளுக்கு 10,20 லக்ஷம் ரூபாய் வியாபாரம் நடந்து கொண்டு இருக்கிறது என்பது சரி. என்றைக்காவது ஒரு நாள் ஒரு பெரிய காரியம் பண்ணவேண்டும் என்று யாராவது போனால் நீங்கள் மன்னிக்க வேண்டும். கஷ்டத்தில் இருக்கிறேன். இதோ 100 ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காரியத்தை முடித்து விடுங்கள் என்று சொல்லி விடுகிறார்கள்.  உலகத்துலே இது ஒரு பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது என்று சொன்னார்.
அப்படி நாம் இல்லாமல் ஒருத்தன் வந்து அந்த விஷயத்துலே நல்ல மனசோடு தர்மத்தைச் செய்கிறான் என்று சொன்னால் அவன் விஷயத்தில் நம் சந்தோஷத்தைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அதை விட்டு விட்டு அவன் விஷயத்துலே கேவலம் ஆட்ஷேபத்தையே நாம் தெரிவித்தோமானால் அது அர்த்தம் இல்லாத கார்யம். அதேபோல் ஒருத்தன் ரொம்ப தப்பிதம் பண்ணுகிறான் என்று சொன்னால் அவனுக்கு புத்திமதி சொல்லலாம். நீ இந்த மாதிரி இருக்கக் கூடாது. இன்னும் என்னவென்றுகேட்டால் அது அவனுடைய ப்ராப்தம் என்று சொல்லி விட்டு விடுகிறோமே தவிர, அவனைப் போய் வார்த்தைக்கு வார்த்தை, திட்டிக் கொண்டே இருந்தால் என்ன ப்ரயோஜனம்?
அதனால் உனக்கு ஒண்ணும் நல்லது ஆகாது. அவனுக்கும் ஆவது இல்லை. இனி உனக்கு ஸ்ரமம் ஒண்ணுதான் பலன். அதனால் இந்த ஒரு நான்கு வாசனை? என்ன வாசனை? ஸம்ஸ்காரங்கள். என்ன ஸம்ஸ்காரம்? சுகத்துலே இருக்கிறவன் விஷயத்துலே ஸ்நேகத்தோடு இருக்கிறதும், துக்கத்துலே இருக்கிறவனோட விஷயத்துலே. கருணையோடு இருக்கிறதும், புண்யம் செய்கிறவன் விஷயத்துலே சந்தோஷமாக இருக்கிறதும், பாபி விஷயத்துலே உபேக்ஷையாக இருக்கிறதும், இந்த ஸம்ஸ்காரங்கள் எவனுக்கு இருக்கிறதோ அவன் உத்தமமானவன். அவன் தேவி பூஜை செய்வதற்குத் தகுதியானவன் என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது நாம் அப்பேர்ப்பட்ட ஓர் உத்தமமான ஸம்ஸ்காரங்களை சம்பாதிக்கனும் என்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர எனக்கு அதெல்லாம் கிடையாது நான் ஒண்ணும் தேவி பூஜை செய்ய வேண்டியதில்லை என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. நாம் அந்த ஸம்ஸ்காரங்களை சம்பாதிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதேபோல் தேவி “ஸதாசார ப்ரவர்த்திகா” ஸதாசாரத்தை அவள் ஸர்வத்ரா தினங்களுக்கு ப்ரேரணையை, ஸதாசாரத்தில் இருப்பதற்கு ஒரு ப்ரேரணையைக் கொடுப்பாள். “துராசாரசமனீ” துராசாரங்களை நாசமாக்கக் கூடியவள்.
நம்முடைய முக்யமான ஒரு விஷயம், ஒரு ‘ஸதாசாரம்’ = பவித்ரமான ஆசரணம் என்பது நமக்கு வேண்டும். ஆசரணத்துலே ஒரு பாவித்ரியம் இல்லா விட்டால் இனி நாம் என்ன செய்தாலும் என்ன ப்ரயோஜனம்? அநேகம் பேருக்கு வேதங்கள் விஷயத்துலே ஓர் அபாரமான மதிப்பு, உண்டு. ஆனால் வேதத்துலே இருக்கக் கூடிய ஒரு ‘வைசிஷ்டம்’ ஓர் இடத்துலே சொல்லி இருக்கிறது. “ஆசாரஹீனம் நபினந்தி வேதா: ஆசாரமே இல்லாவனுக்கு அவனை வேதங்கள் கூட பவித்ரம் ஆக்காது. அதனால் ஆசாரம் என்பது ரொம்பவும் முக்யம். ஆசாரம் என்று சொன்னால் அது ஸதாசாரம். துராசாரம் அல்ல. அப்பேர்ப்பட்ட ஸதாசாரத்துலே நாம் இருக்கணும் என்று சொன்னால் நமக்கு தேவியினுடைய அருள் வேண்டும். ஏனெனில் அவள்தான் “ஸதாசார ப்ரவ்ருத்திகா” நமக்கு இருக்கிற துராசாரங்கள் தூரமாகனும் என்று சொன்னால் அவளுடைய அருள்தான் வேணும். அவள்தான் “துராசார சமனி” இப்பேர்ப்பட்ட மகிமை தேவிக்கும் அபாரமாக சொல்லியிருக்கிறது. அதே ஸஹஸ்ர நாமங்களிலே. அது மட்டும் இல்லை. அவளை நாம் ஸ்ரத்தையோடு ஆராதித்தால் “ஸத்ய ப்ரஸாதினீ” = உடனே அனுக்ரஹம் செய்வாள். அது ஒண்ணும் தாமதமே இருக்காது. ஆனால் நம்முடைய பக்தி என்பதை மட்டும் அவள் ரொம்பவும் எதிர் பார்ப்பாள். “பக்தி ப்ரியா பக்தி கம்யா பக்தி வச்யா பயா பஹா” பக்தியை அவள் ரொம்பவும் எதிர் பார்ப்பாள். அதுதான் பகவான் கீதையிலே சொல்கிற போது “ஏமே பக்த்யா ப்ரயச்சதி” நாம் பகவானுக்குக் கொடுக்கக்கூடிய பதார்த்தம் பெரிசா என்பது ப்ரச்னை அல்ல. நாம் அதை பக்தியோடு கொடுக்கிறோமா இல்லையா என்பது தான் ப்ரச்னை. பக்தியோடு நாம் எதைக் கொடுத்தாலும் பகவான் ஸ்வீகரிப்பான்.
அதேதான் பகவத் பாதாள் சொல்கிறபோது
“பக்தி கின்ன துரோத்யஹோ
வனசரோ பக்தா வதம் சாயதே”
ஏய்! பக்தி ஒண்ணுதான் முக்யம். பக்தி வேண்டுமே தவிர பெரிய பண்டிதர்கள் பூஜை பண்ணினால் தான் பகவான் ஏற்றுக் கொள்வார். பெரிய பணக்காரர்கள் பூஜை பண்ணினால்தான் பகவான் ஏற்றுக் கொள்வார் என்கிற அர்த்தம் இல்லை. ப்ரச்னை இல்லை. வெறும் பக்தி என்கிற ஒண்ணு இருந்தால் அது ஒரு காட்டு மனுஷன் ஆனாலும் அவனுடைய பூஜையை பகவான் பஹூஸந்தோஷத்தோடு ஸ்வீகரிப்பான் என்று சொல்லியிருக்கிறது. அதனால் தான் ஸம்ஸ்கிருதத்துலே ஒரு ஸ்லோகம் இருக்கிறது “ ஒரு பண்டிதர் தினமும் பகவான் சந்நிதிக்குப் போய்” விஷ்ணவேநம: என்று சொன்னார். இன்னொருத்தனுக்கு பாவம் ஒரு ‘ராமசப்தம்’ தவிர வேறு எந்த சப்தமும் தெரியாது. விஷ்ணாய நம: என்றான். இந்த பண்டிதருக்கு வந்து என்னடா இவன் தினம் வந்து “அபசப்த ப்ரயோகம்’ பண்ணுகிறான் என்று தோன்றும். விஷ்ணாய நம: இந்த இருவருக்கும் பக்தி ரொம்ப உண்டு. ஆனால் அவன் அபசப்தம் பண்ணுகிறானே இப்படி ப்ரயோகம் பண்ணுகிறவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது? என்று தோன்றும். கடைசியிலே இவரும் பகவத் சாகித்யத்துக்குப் போனார். அவனும் அங்கே தயாராகி விட்டான். “ஏய் நீ எப்படி யடா வந்தாய் இங்கே! என்று கேட்டால் பகவானுக்கு விஷ்ணாயா! சொன்னால் என்ன விஷ்ணவே சொன்னால் என்பது ப்ரச்னை இல்லை. இரண்டு பேருடைய மனசுலே பக்தி இருந்ததா என்று பார்த்தார். இரண்டு பேருக்கும் பக்தி இருந்தது. இரண்டு பேருக்கும் சாயித்யம் கொடுத்து விட்டான். “மூர்க்கோவததி விஷ்ணாயா”
“ வித்வான் வததி விஷ்ணவே
உபயோ சதுர்சம் புண்யம்
பாவக்ராஹி ஜனார்த்தன:”
அதனால் நம்முடைய பக்திக்குத்தான் பகவான் மதிப்பு கொடுப்பானே தவிர இவன்பெரிய பண்டிதனா? இவன் பெரிய பணக்காரனா? இவன் பெரிய அதிகாரியா? என்று பகவான் பார்க்க மாட்டான். அதனால் நாம் எல்லாரும் பக்தியோடு பகவானைப் பூஜித்தால் ஸ்ரேயஸை அடைய முடியும். அப்பேர்ப்பட்ட மகிமை தேவிக்கு இருக்கிறது. அந்த தேவியை பக்தியோடு நாம் உபாஸிக்க வேண்டும். சமீபத்திலே யாரோ என்னிடம் கேட்டார்கள். ஸ்வாமிகளே! அம்பாள் பூஜை செய்ய வேண்டும் என்றால் எல்லாருக்கும் எப்படி முடியும்? எல்லாருக்கும் சாத்யமில்லையே என்ன சாத்யம் இல்லையப்பா! என்ன வேணும்? அம்பாளுக்கு வேண்டியது, உன்னுடைய பக்தி ஒண்ணுதான் வேணும். அந்த பக்தி இருந்தால் வேறு ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை அம்பாளுடைய உருவம் வைத்துக் கொண்டு நாமத்தைச் சொல்லிக் கொண்டு வா. போதும். அதிலேயே நீ ஸ்ரேயஸை அடைய முடியும். அதனால் அம்பாளை பூஜை செய்வதற்கு பூஜிப்பதற்கு எல்லோருக்கும் யோக்யதை இல்லை என்று மட்டும் நினைத்துக் கொள்ளவே வேண்டாம். எல்லாருக்கும் யோக்யதை இருக்கிறது. அதனால் அப்பேர்ப்பட்ட பக்திப் பாவத்தோடு நாம் தேவியை ஆராதித்து ஸ்ரேயஸை அடைய வேண்டிய ஒரு பவித்ரமான சமயம் இது. இந்த சமயத்தை நாம் வ்யர்த்தமாக்கக்கூடாது. வீணாக்கக் கூடாது. இந்த சமயத்தை சார்த்தகப் படுத்த வேண்டும்.
எங்க சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் (பரமேஷ்டி குருநாதர்) தேவியை அநேக விதமாக ஸ்துதித்திருக்கிறார். பகவத் பாதாள் எப்படி தேவீஸ்தோத்ரங்கள் அநேக ஸ்தோத்ரங்கள் செய்தாரோ அதே போல் எங்க சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகளும் அம்பாளை அநேக விதமாக ஸ்துதித்து இருக்கிறார். அவர் அம்பாள் சந்நிதியிலே ஒரு ப்ரார்த்தனை நாம் எல்லோரும் பண்ணவேண்டும் என்று சொன்னார்.
“வித்யாம் சுத்தாம் ச புத்திம்
கமல ஜதயிதே ஸத்வரம்
தேஹி விஸ்யம்
(கமலஜதியிதா அஷ்டகம்).
முக்கியமாக நமக்கு வேண்டியது. வித்யையும், பரிசுத்தமான புத்தியும். நம்முடைய மனசுலே கல்மிஷம் இருந்து விட்டால் நாம் எவ்வளவு படித்தாலும் சுகம் இல்லை. மனசு நிர்மலமாய் இருக்க வேண்டும். அந்த ஒரு நிர்மலமான மனசு இருந்தால் நம்முடைய ஜென்மம் க்ருதார்த்மாகி விடும். அதே போல் இந்த சம்சார பந்த நிவர்த்தகமான ஞானத்தையும் தாயே! நமக்கு கொடு என்று சொன்னார் அவர். அதேபோல்.
“பாபம் ஹம்ஸயித்வா
பஹூ ஜனி ரஜிதம்
கிம்ஜதே அணி மாராத் சம்பாத்யா
அஸ்திக்ய வித்யம்”
ஸ்ருதி குரு வசனஷ்வாகரம் பக்தி தாட்யம்
பாபத்தைப் போக்க வேண்டும். அநேக ஜென்மங்களில் பாபத்தைச் செய்திருக்கிறோம். ‘பஹுஜனிரசிதம் பாப விஹம் தம் யித்வா” இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் எத்தனையோ ஜென்மங்களிலே பாபம் நடந்திருக்கிறது. அதெல்லாம் நீதான் போக்க முடியும் என்று “பாபாரண்ய தவானலா” என்று வேண்டினார். அதனால் நீ இந்த பாபத்தைப் போக்கி. புண்யத்தை எனக்கு வரும்படி செய்து ஆஸ்திக்யத்தை உண்டாக்கி ஆசார்யாள் விஷய (குரு) பேச்சுலேயும் சாஸ்த்ரத்தின் வாக்கிலேயும் விஸ்வாசத்தை உண்டாக்கி என்னைக் காப்பாற்ற வேண்டும். ஆஸ்திக்யம் வேணும் என்று அங்கே சொல்லிஇருக்கிறார். அந்த ஆஸ்திக்யம் இல்லாமல் கேவலம் நாஸ்திகன் மாதிரி நாம் வாழ்க்கை நடத்தினால் இந்த வாழ்க்கையும் அந்த நாஸ்திகர்கள் வாழ்க்கைக்கும் நாலுகால் ப்ராணிகள் வாழ்க்கைக்கும் வித்யாஸம் இல்லை. அப்பேர்ப்பட்ட வாழ்க்கையை நாம் நடத்தக் கூடாது. அதனால் அங்கே ஆஸ்திக்யத்தை உண்டாக்கும் என்று தாயாரை (தேவியை) வேண்டிக் கொண்டார் அவர். அப்பேர்ப்பட்ட மகான்கள் எல்லாரும் அதிஸ்ரத்தையோடு இந்த பவித்ரமான சமயத்தில் தேவியை ஆராதித்தார்கள் என்கிறபோது அதே மகான்களுடைய பரம்பரையில் வந்து இருக்கிற நாம் எல்லோரும் கூட அந்த தேவியை அதே பக்தி ஸ்ரத்தைகளோடு ஆராதித்து ஸ்ரேயஸை அடைய வேண்டியது கர்தவ்யம் (கடமை)

No comments:

Post a Comment