Wednesday, March 8, 2017

​​​திருவாதிரைக்கு ஒருவாய் களி

​​​திருவாதிரைக்கு ஒருவாய் களி
சேந்தனார் என்ற சிவபக்தர், சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வசித்தார். சிவனடியார்களை மனம் கோணாமல் உணவளிப்பார். ஒருமுறை, பலத்த மழை பெய்து விறகு நனைந்து விட்டது. இந்த நேரத்தில், யாராவது அடியவர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு உணவளிப்பது எப்படி என்ற கவலையில் இருந்த போது, அவர் எதிர்பார்த்தபடியே ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். அவர் தேஜசாக, ஜடாமுடி தரித்து காணப்பட்டார். தம்பதிகளுக்கு கை, கால் உதறியது. அரிசி சாதம் செய்வது இந்த ஈர விறகால் ஆகாது எனக்கருதிய சேந்தனாரின் மனைவி, அரிசி, உளுந்து மாவுடன், வெல்லமும், நெய்யும் கலந்து ஈர விறகை ஒருவாறாக பற்றவைத்து ஊதி, குறைந்த அளவு தீயிலேயே களி தயாரித்து விட்டார். அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி, திருவாதிரை நட்சத்திர நேரம்.
வந்தவர் அதைச் சாப்பிட்டு விட்டு, தினமும் தயிர்ச்சாதமும், புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் சாப்பிட்டு பழகிப் போன எனக்கு, தாங்கள் அளித்த இந்த இனிய களி பிரமாதமாக இருந்தது, என பாராட்டினார். ஒரு எளிய உணவை தேனினும் இனிமையானது என பாராட்டியதால், மனம் மகிழ்ந்தனர் தம்பதியர்.மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரை தரிசிக்க சென்றனர். நடையெல்லாம் தாங்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜப் பெருமானின் வாயில் களி சிறிதளவு ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியது நடராஜப் பெருமான் என்பதை உணர்ந்த தம்பதியர் உடல் புல்லரிக்க, அவரது பாதத்தில் வீழ்ந்தனர்.இதனால் தான் திருவாதிரைக்கு ஒருவாய் களி என்ற சுலவடை ஏற்பட்டது. அன்று நடராஜருக்கு களி நிவேதனம் செய்யப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்.

---------------------
-​கிருஷ்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?*

🍂தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.
எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.
ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.
என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

No comments:

Post a Comment