Monday, April 18, 2016

"துர்முகி" வர்ஷ அனுக்ரஹம்...


'வாழைமரம்' பற்றி நம் பெரியவா திருவாக்கு... 'துர்முகி' வர்ஷத்துக்கான உபதேஸமாகவும் ஆஸிர்வாதமாகவும் கொள்வோம்!
"வாழை ஒண்ணுதான்.... அதோட, பூ, பழம், காய், தண்டு, எலை, நார்-ன்னு அத்தனையும் பொறத்தியார் உபயோஹத்துக்கு போறது! அதே மாதிரி... நாமளும் எல்லா வகைலயும் பொறத்தியாருக்கும், இந்த லோகத்துக்கும் உபயோஹமா இருக்கணும்....அதோட.... வாழைமரத்ல..பாத்தாக்க.... அதோட வேர்லயே, குட்டி வாழைமரம் 'வாழையடி வாழை'ன்னு வளரும்... அதே மாதிரி... நம்ம குடும்பத்லயும் கொழந்தேள் பொறந்து.... வம்ஸம் வ்ருத்தியாகும்.... அதுக்குத்தான் எந்த விஸேஷம்-னாலும், வீடுகள்ள... வாழைமரம் கட்றது!..."
[வாழவைக்கும், நன்கு வாழ வாழ்த்தும் மரமாகவும் இருப்பதாலும்தான்! ]
ஸ்ரீமடத்தில், தமிழ்வர்ஷப் பிறப்புக்கு முதல் நாள் ராத்ரி, ஆள் உயர கண்ணாடியைக் கொண்டு வந்து வைத்து, அதற்கு வாழைமரத்தை தோரணமாகக் கட்டி அலங்காரம் செய்யப்படும். எல்லாவகைப் பழங்கள், காய்கள், வெத்தலை, பாக்கு, பலவிதப் புஷ்பங்கள், வாழைப்பூ, மாம்பூ, சரக்கொன்றை இவற்றை வாழை இலையில் பரப்பி கண்ணாடி முன்னால்  வைக்கப்படும்.
கண்ணாடியின் ரெண்டு பக்கமும் தங்கச் சங்கிலிகளால் அலங்காரம் பண்ணப்பட்டிருக்கும். தங்கத்தில் ஶ்ரீமஹாலக்ஷ்மி வாஸம் செய்வதால், தங்கம் ஒரு மங்கலமான வஸ்து! கண்ணாடிக்கு சந்தன-குங்குமப் பொட்டு வைத்து, அதன்முன், அழகாக முத்துமுத்தாக ஐந்து முகம் விளக்கேற்றி வைக்கப்பட்டு ஒளிரும். 1008 ஒரு-ரூபாய் காஸும் ஒரு தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
உள்ளூர்-வெளியூரில் இருந்தெல்லாம், பெரிய பெரிய வித்வான்கள் எல்லாரும், முந்தின நாளே.... ஸ்ரீமடத்தில் வந்து தங்கிவிடுவார்கள்..... தங்கள் வாத்யங்களுடன்!
விடியக்காலை 3 மணிக்கே எழுந்து குளித்து, அந்த மஹா ஜ்யோதிஸ்ஸின் விஶ்வரூப தர்ஶனத்துக்காக, எல்லாரும் காத்திருப்பார்கள். ஸ்ரீமடம் வாஸலிலும், பெரியவாளுடைய ஸயன அறையின் வாஸலிலும் பெரிய பெரிய கோலங்கள் போடப்பட்டு, செம்மண் பூஸப்பட்டிருக்கும். கோலத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு ஜ்வலிக்கும்.
நம்முடைய பெரியவா ஸயனத்திலிருந்து எழுந்து வரும் ஸமயம், மங்கள வாத்யங்களும், வித்வான்களின் கைவண்ணத்தில் பலவித வாத்யங்களும் ஸுஸ்வரமாக ஒலிக்க.... ஆஹா! ஸ்ரீபுரத்தில் அம்பிகைக்கு நடக்கும் மங்கள உபசாரமாகவே இருக்கும்!
பெரியவா வெளியில் வரும்போது..... கண்களை மூடிக் கொண்டுதான் வருவார்! குழந்தைகள் தங்கள் ப்ரியத்தை எல்லாம் கொட்டி, அம்மா, அப்பாவுக்காக 'surprise' என்று ஏதோ செய்து வைத்துவிட்டு, அவர்களுடைய கண்களை கட்டிவிட்டு கூட்டிக் கொண்டு வருவது போலிருக்கும்!
அலங்காரம் செய்துவைத்த கண்ணாடி முன் நின்று கொண்டு, தன் நயனங்களைத் திறப்பார் பெரியவா!
ஸாக்ஷாத்  பரமேஶ்வரன் தன் கல்யாணக் கோலத்தை கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டு....'ஸுந்தரா! வா!...." என்று இப்படித்தான் அழைத்திருப்பானோ!
பெரியவா தன் முன்னால் உள்ள கண்ணாடியைப் பார்க்கும்போது, பக்கத்தில் நிற்கும் தன்னுடைய அத்யந்த பாரிஷதர்களை பார்த்து.....
"டேய்! நீ கூட.... கண்ணாடில தெரியறியேடா.....!"
சிரித்துக் கொண்டே சொல்லுவார். அந்த ஒரு க்ஷணம் போறுமே! மோக்ஷமெல்லாம் ரெண்டாம்பக்ஷமே!
அங்கு தன்னுடைய பாரிஷதர்களும், பக்தர்களும் தனக்காக பண்ணி வைத்திருக்கும் அலங்காரங்களை அன்போடு பார்த்து ரஸிப்பார். எல்லாருடனும் உரையாடுவார். புது வர்ஷ ஆரம்பத்தில்.. பெரியவாளுடன் பேசியதை எண்ணியெண்ணி ஆனந்தமாக வாழ்க்கையை நடத்துவார்களே!
அன்று அங்கு தர்ஶனத்துக்கு வந்திருக்கும் அத்தனை பக்தர்களுக்கும், பாரிஷதர்களுக்கும் நம்முடைய பெரியவா, தன் திருக்கரத்தால் மஹா அனுக்ரஹமாக 'ஒரு ரூபாய் காஸு' தருவார். வித்வான்கள் எல்லாருக்கும், ஸ்ரீமடத்தின் ஸார்பாக, ஸால்வை வழங்கப்படும்.
நாமும் நம்முடைய பெரியவாளுடைய ஸ்ரீபாதகமலத்தை ஸதா த்யானம் செய்தவண்ணம்..... இந்த புது வர்ஷத்தையும் ஆனந்தமாக ஆரம்பிப்போம்!

No comments:

Post a Comment