எல்லாம் கிடைத்தாலும், எதையாவது ஒன்றை நினைத்து ஏங்குவதே 
மனதின் சுபாவம். 
அதிலிருந்து, சுலபத்தில் விடுபட முடியாது. உலகம் முழுவதும் நம்மை 
பாராட்டினாலும், ‘ச்சே என்னய்யா இது… எல்லாரும் என்னை பாராட்டுகின்றனர்; 
இந்த ஆள் மட்டும் ஒரு வார்த்தை கூறவில்லையே… முத்தா உதிர்ந்து விடும்…’ 
என்று அங்கலாய்க்கும். மனம். இதிலிருந்து விடுபட என்ன வழி…
ஒருமுறை, கடுந்தவம் புரிந்தார் விசுவாமித்திரர். உலகினர், அவரது, தவத்தை 
வியந்து,
 ‘இவரல்லவா பிரம்மரிஷி…’ என்று பாராட்டினர்; அதைக் கேட்டு 
விசுவாமித்திரரும் மகிழ்ந்தார். இருப்பினும், அவர் உள்ளத்தில், ‘எல்லாரும் 
பாராட்டுகின்றனர்; ஆனால், வசிஷ்டர் என்னை பாராட்டவில்லையே… 
அவர்
 வாயால், பிரம்மரிஷி பட்டம் பெற்றால் அல்லவா பெருமை…’ என நினைத்தவர், ‘நாம்
 சென்று வசிஷ்டரை வணங்கலாம்; பதிலுக்கு அவரும் வணங்கினால், நாம் 
பிரம்மரிஷி; மாறாக, அவர் நம்மை ஆசீர்வதித்தால், நாம் பிரம்மரிஷி அல்ல…’ என 
தீர்மானித்தார்.
உயர்நிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கினால், இருவரும் சமம்; 
ஒருவர் வணங்கும்போது, அடுத்தவர் அவருக்கு ஆசி கூறினால், வணங்கியவர் 
இன்னும் பக்குவம் பெற வேண்டும் என்பது பொருள்.
விசுவாமித்திரர், வசிஷ்டரை வணங்கிய போது, அவர் தன் இரு கரங்களையும் 
தூக்கி அவரை ஆசீர்வதித்தார். இதனால், மனம் நொந்து, மறுபடியும் தவம் செய்ய 
துவங்கினார்
 விசுவாமித்திரர். சிறிது காலம் ஆனது; விசுவாமித்திரரின் இஷ்டதெய்வம் அவர் 
முன் தோன்றி, ‘விசுவாமித்திரா… நீ இப்போது சென்று வசிஷ்டரை வணங்கு; 
பதிலுக்கு அவர் உன்னை வணங்கா விட்டால், அவர் தலை வெடிக்கட்டும் என்று, 
சாபம் கொடுத்து விடு…’ என்றது!
உடனே
 சென்று வசிஷ்டரை வணங்கினார் விசுவாமித்திரர். அவரோ, முன் போலவே, இரு 
கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார்; இதனால், சாபம் கொடுக்கத் தயாரானார் 
விசுவாமித்திரர். 
ஆனால், அவர் செய்த தவத்தின் 
காரணமாக மனதில் நல்ல எண்ணங்களே எழுந்தன. ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது! 
இவர் என்னை பிரம்மரிஷி என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன… நான் 
கோபத்திற்கு இடம் கொடுத்து, அறிவிழந்து 
இவரைச் சபிக்க எண்ணி விட்டேனே… 
‘இவ்வளவு
 காலம் தவம் செய்தும், எனக்குள் இருக்கும் கெட்ட எண்ணம் நீங்கவில்லையே… 
இவருக்குச் சாபம் கொடுக்க நினைத்ததன் மூலம், என் தவசக்தி எல்லாம் வீணாகி 
விட்டது. எல்லா ஜீவராசிகளிலும் ஒரே ஆன்மா தானே குடிகொண்டுள்ளது. 
அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட தவறை இனி செய்யக் கூடாது…’ என நினைத்து 
தலைகுனிந்து திரும்பினார் விசுவாமித்திரர்.
அப்போது, ‘முனிவரே… நில்லுங்கள்; நான் உங்களை வணங்க வேண்டாமா…’ 
என்றார் வசிஷ்டர்.
சட்டென்று
 திரும்பினார் விசுவாமித்திரர். வசிஷ்டர் கைகளை கூப்பி வணங்கி, 
‘பிரம்மஞானம் அடைந்த உங்களை வணங்கி, உங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்…’
 என்று கூறி, விசுவாமித்திரரை தழுவிக் கொண்டார்.
மனம்
 நெகிழ்ந்தார் விசுவாமித்திரர். ‘முனிவரே… முன்பு உங்களிடம் இருந்த கோபம் 
முதலான எல்லா தீய குணங்களும் நீங்கி, அனைத்தையும் பிரம்ம மயமாக பார்க்கும் 
தன்மை, வந்து விட்டது. அதனால், இப்போது நீங்கள் பிரம்ம ஞானி, பிரம்ம 
ரிஷியாகி விட்டீர்கள்…’ என்று பாராட்டினார் வசிஷ்டர்.
நற்குணங்களே நிலையான உயர்வைத் தரும்; 
தீய குணங்கள் உயர்வைத் தருவது போலத் தோன்றினாலும், 
முடிவில் நம்மைக் கீழே வீழ்த்தி விடும்.
அருமை... அருமை...👍👍👍
ReplyDelete