Thursday, March 31, 2016

பெரியோர்கள் வாழ்விலே



: கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார், ஒருமுறை கேரளாவுக்கு செல்லும் போது, வழியில், கோவையில், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் இல்லத்தில் தங்கினார். அப்போது, தன் தமிழ் ஆசிரியரான பலராம ஐயர், அவ்வூரில் வாழ்ந்து வரும் தகவலை அறிந்தார்.
உடனே, ஆசிரியரை சந்திக்க விரும்பி, கைப்பட கடிதம் எழுதி, தன் ஊழியரிடம் கொடுத்து, அவரை அழைத்து வரச் சொல்லி, தன் காரை அவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
கடிதத்தை வாங்கி படித்த ஆசிரியர், உடனே பதில் கடிதம் தந்தார். அதில், தன் மாணவன் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு தன் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் தெரிவித்து, மூன்று காரணங்களால், அவரை சந்திக்க வருவது, சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அது, 'முதலாவதாக, நான் வயோதிகன்; நீ இளைஞன். இரண்டாவதாக, நான் ஆசிரியன்; நீ மாணவன். மூன்றாவதாக, நான் வறியவன்; நீ செல்வந்தன். எனவே, நான் வந்து உன்னை பார்ப்பது பெருமையல்ல...' என்ற, பொருள்பட ஆசிரியரின் கடிதம் இருந்தது.
அதைப் பார்த்ததும், பதறி, ஆசிரியரை பார்க்க, தானே அவர் இல்லத்திற்கு புறப்பட்டார் அழகப்ப செட்டியார்.
பூ மற்றும் பழங்கள் வாங்கி சென்ற அழகப்பர், கையில் தயாராக வைத்திருந்த மாலையை ஆசிரியருக்கு அணிவித்து வணங்கி, 'இங்கிதம் அறியாமல், தங்களை அழைத்து வருமாறு கூறி விட்டேன்...' என்று வருத்தம் தெரிவித்தார். ஆசிரியரும் மனம் நெகிழ்ந்து, தன் மாணவரோடு மனம் விட்டு அளவளாவினார்.
அழகப்பர் விடை பெறும்போது, ஒரு வெள்ளி தட்டில், 100 ரூபாய் கட்டுகளை வைத்து, அதை ஏற்று கொள்ளுமாறு ஆசிரியர் முன் சமர்ப்பித்தார்.
ஆசிரியரோ, புன்சிரிப்பை உதிர்த்து, 'உன் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி; ஆனால், இந்த பணத்தால், பலனடையும் வயதை தாண்டி விட்டேன். எனவே, என்னை வற்புறுத்தாமல் நீயே இதை எடுத்துக் கொள்...' என்றார்.
ஆசிரியருக்கு அவரும், மாணவருக்கு இவரும் உதாரணம்!

No comments:

Post a Comment