Tuesday, July 28, 2015

கேள்வி-பதில் பதில் சொல்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

 



திருமணப் பத்திரிகைகளில், 'சாலங் க்ருத கன்னிகாதானம் செய்வதை...' என்றொரு வரி வரும். இதில், 'சாலங்க்ருத' என்ற சொல்லுக்கு பொருள் என்ன? திருமணம், குறிப்பிட்ட வயதைத் தாண்டி நடைபெறும் சூழலிலும் கன்னிகாதானம் எனும் வார்த்தை பொருந்துமா?
- கிரிதரன், கொத்தாம்பாடி
அணிகலன்களை அணிவித்து கன்னிப் பெண்ணை மணமகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம் (ஆச்சாந்த்யாலங்கிருதாம்...).
இதை, திருமணப் பத்திரிகைகளில் குறிப்பிடுவதும் குறிப்பிடாததும் அவரவர் விருப்பம். 'அவள் பெண் மணி. அவளை மூளியாக ஒப்படைக்காதே. அவள் அழகு மிளிர அலங்காரம் உதவும்' என்பதுதான் பொருள். தலையிலும், கழுத்திலும், கையிலும், இடுப்பிலும், கால்களிலும், கால் விரல்களிலும் அலங்கார அணிகலன்களை சுமப் பதை இன்றைய கன்னிப் பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.
தற்கால புதிய அலங்கார முறையே அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இளைஞர்களும் பழைமையை விரும்புவதில்லை. அவர்கள் விரும்பும் அலங்காரத்துடன் பெண்ணை அளிப்பது சிறப்பு. அதே நேரம், சாஸ்திரத்தைக் காரணம் கட்டி பொருளாதார சுமையைத் திணிக்கக் கூடாது.
முற்காலத்தில் நிகழ்ந்தது போல் தற்போது இல்லை. 'குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகே திருமணம் நிகழ வேண்டும்' என்று அரசு ஆணை உள்ளது. அரசாணையை மதிக்க வேண்டும் என் கிறது தர்மசாஸ்திரம். இதன் பொருட்டு காலம் கடந்து திருமணம் நிகழ்ந்தாலும்... கன்யகா தானத்தில் குறை இல்லை!
கன்னி எனும் தகுதி, தம்பதியாக மாறி இல்லறத் தில் இணைந்த பிறகே மாறும். பெண்ணானவள், திருமணம் முடியும் வரை கன்யகையாகவே திகழ் கிறாள்.
திருமணம் காலதாமதம் ஆக வேறு சில குறைபாடுகளும் உண்டு. இவற்றை அகற்ற பரிகாரங்களும் உண்டு. இன்றைக்கும் சில திருமணங்கள் காலம் கடந்து, பரிகாரங்களுடன் நிகழ்கின்றன.

திருமண வைபவங்களில் தாரை வார்த்துக் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் தம்பதி சமேதராக இருக்க வேண்டுமா? எனக்குத் தெரிந்த பையன் ஒருவனுக்கு தந்தை மட்டுமே உண்டு. அவன் தன் தந்தையே தாரை வாங்க வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறான். பெண் வீட்டார் சங்கடப்படுகிறார்கள். என்ன செய்வது?
- பூர்ணம், சென்னை
அளிக்கப்படுவது பெண். பெற்றுக் கொள்பவன் பையன். பெற்றோர் தம்பதியாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தாய்- தந்தையர் இல்லாத ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவது உண்டு! பெண் கொடுப்பது, வரனின் பெற்றோருக்கு அல்ல! ஆகையால், தேவையில்லாமல் மனதை வேதனைப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

அமாவாசை அன்று வாசலில் கோலம் போடுவதில்லையே... ஏன்?
- வி. ராணி, குடவாசல்
வீடு என்பது லட்சுமி வசிக்கும் இடம். இதனால் அவளுக்கு கிரகலட்சுமி என்றும் பெயர் உண்டு. வீட்டில், வாஸ்து புருஷனும் உறைந்திருக்கிறார். அதன் எட்டு மூலைகளிலும் (திசைகளிலும்) திக் பாலகர்கள் உண்டு. எண்ணற்ற இறையுருவங்களைக் கொண்ட பூஜையறையுடன் திகழும் வீடு, கோயிலுக்குச் சமம்!
கடவுளை வழிபடுவதுடன், அவருடன் சேர்ந்து வாழ்கிறோம். கடவுள் இருப்பிடமான வீட்டை, அனுதினமும் காலையில் சுத்தம் செய்து வாசலில் கோலம் போட வேண்டும். இது வழிபாட்டில் ஒன்று. பசுஞ்சாணியால் சுத்தம் செய்து கோலம் போட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம் (கோமயேனோபலிப்ய, ரங்கவல்யாத்யலம் கிருத்ய).
கோலத்துக்கு ரங்கவல்லீ என்று பெயர். வட நாட்டவர் அதை ரங்கோலி என்பர். வீட்டுக்குள் உறைந்திருக்கும் இறை பூஜையின் ஆரம்பமே கோலம்தான்! அடுக்குமாடிக் கட்டடத்தில் குடியிருக்கும் ஆசை வந்த பிறகு, குடியிருக்கும் வீட்டை (ஃபிளாட்), தங்கும் விடுதிகளுக்கு (போர்டிங் அன்டு லாட்ஜிங்) ஒப்பாகவே பார்க்கிறோம். வீட்டில் மிளிரும் தெய்வீகத்தை மறந்து விட்டோம்.
அமாவாசை- முன்னோர் ஆராதனை நாள். அது தினம் தினம் வராது. பூஜை என்பது தினம் தினம் உண்டு. இறை ஆராதனையும், முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லும். அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிப்பதால் கோலம் போடுவதை தள்ளிப்போட வேண்டும். இது, முன்னோருக்கு நாம் அளிக்கும் பெருமை!

தொடர்ந்து ராமநாமம் ஜபிக்கும் ஒருவர், அமாவாசை மற்றும் சிராத்தம்செய்யும் நாட்களில் நாம ஜபம் செய்வதை தவிர்க்க வேண்டுமா?
- வ. பெரியசாமி, சேலம்-10
அக்கறையுடன் தொடர்ந்து ராம நாமம் ஜபிக்கும் நிலை, நம்மில் பலருக்கு எளிதில் கைகூடாது. நம்மவர்களால் துருவனாகவோ, பிரஹலாதனாகவோ, வால்மீகியாகவோ செயல்பட இயலாது.
கலி யுகத்தில் பல ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அதை நிறைவேற்ற ராமனையும் நாராயணனையும் தியானிப்பவர்களே அதிகம்! மனதோடு இணையாத எதுவும் பலனளிக்காது. கிளிப்பிள்ளைபோல் அலுவல் களுக்கு இடையே ராம ராம என்று சொல்வது பொருந்தாது. 'வேதம், தர்மசாஸ்திரம் சொல்லும் நல்லுரைகள் எனது கட்டளைகள்; அவற்றை மீறுபவன் எனது பக்தனாக மாட்டான்' என்கிறான் கண்ணன் (ஸ்ருதி ஸ்மிருதீ மமை வாக்«க்ஷ...).
அன்றாடம் அலுவல்களைத் துவங்கும்போது... 'ராம ராம ராம' என்றும், 'கோவிந்த கோவிந்த கோவிந்த' என்றும் சங்கல்பத்தில் சொல்வது மரபு. அலுவல்களுக்கு இடையே ராம நாமாவையோ, கோவிந்த நாமாவையோ சொல்லுவதில்லை. அதனால் அவன் பக்தன் இல்லை என்று ஆகாது. வேதாக்ஷரங்கள் ஒவ்வொன்றும் ஹரி நாமாவுக்கு இணையானது என்று சாஸ் திரம் கூறும். இன்றைய சூழலில் பக்தி வழிபாடு மிக கடினம். நாரத பக்தி சூத்திரமும், சாண்டில்ய பக்தி சூத்திரமும் படிக்கும் போது அதன் தரம் விளங்கும்.
கடவுளிடம் எதிர்பார்ப்பில்லாத பற்று வேண்டும். குண்டூசியை காந்தம் இழுப்பதுபோல் இணைய வேண்டும். இது, உலக வாழ்க்கையில் பற்றற்றவனுக்கு எளிது! சாஸ்திரக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து, மனம் தெளிவான நிலையில் பகவான் நாமாவை உச்சரித்தால், அவனுடன் கலந்து விடலாம்.
படிப்படியாகத்தான் மனதை வழிக்குக் கொண்டு வர இயலும். கவனம் இல்லாமல் உதட்டளவில் உச்சரிக்கப்படும் ராம நாமம் மோட்சம் அளிக்கும்
என்று மிகைப்படுத்திக் கூறுவதை அப்படியே ஏற்கக் கூடாது. நாமஜபத்தில் மூழ்கியவனுக்கு அமாவாசையும் சிராத்தமும் நினைவில் வராது. அப்படி வந்தால், ஜபத்தில் ஈடுபாடு இன்னும் இறுகவில்லை என்றே பொருள்!
சாஸ்திரக் கோட்பாடுகளை மதித்து, பலனை எதிர்பார்க்காமல் கடமைகளை சிரத்தை யுடன் நிறைவேற்றி, மனம் தெளிவு பெற்றதும் ராம நாம ஜபம் மேற்கொண்டால், கேட்கா மலேயே விரும்பிய பலன் நம்மை அடையும்.
பக்தி மார்க்கத்தில் எல்.கே.ஜி. நிலையில் இருப்பவர்கள் அமாவாசை, சிராத்தம் போன்றவற்றைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் படிப்படியாக முன்னேற இயலும். எனவே, ராம நாமாவைத் தள்ளிப் போடுங்கள். அமாவாசை, சிராத்தம் முதலானவற்றை நிகழ்த்திவிட்டு, நாம ஜபம் தொடருங்கள்.

கோயிலில் அர்ச்சனைக்குக் கொடுக்கும்போது, நமது பெயர், நட்சத்திரம் ஆகியவற்றுடன்கோத்திரம் குறித்தும் கேட் கின்றனரே... கோத்திரம் என்றால் என்ன? நமது கோத்திரம் என்ன என்பதை எப்படி அறிவது?
- அ. யாழினி பர்வதம், சென்னை-78
கோத்திரம் என்றால் 'வம்சம்' என்று பொருள். குறிப்பிட்ட வம்சத் துக்கு (பரம்பரைக்கு) மூல வேராக திகழும் - அதாவது அந்த வம்சத்தைத் தோற்றுவித்த வரின் பெயரையே, கோத்திரப் பெயராக கொள்வர். வாழையடி வாழையாக வளர்ந்து ஓங்கிய மனித இனத்துக்கு ஒரு முன்னவர் உண்டு. அவரை நாம் நினைக்க வேண்டாமா?
ரகுவம்சத்தில் உதித்தான் ராமர்; யதுவம்சத்தில் தோன்றினார் கிருஷ்ணர்; குருவம்சத்தில் தோன்றினார்கள் கௌரவர்கள்; விஸ்வாமித்திரருக்கு கௌசிக கோத்திரம். தங்களது கோத்திரம் என்ன என்பது தெரியாதவர்கள், வீட்டுப் பெரியவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கிரஹண காலத்தில் உப்புப் போட்ட பண்டங்களில் தர்ப்பையைக் கிள்ளிப் போடுவது எதற்காக? இதுபோன்ற தருணங்களில், ஃப்ரிஜ்ஜில் வைத்துள்ள ஊறுகாய், புளிக்காய்ச்சல் மற்றும் தொக்கு ஆகியவற்றிலும் தர்ப்பையைப் போடவேண்டுமா?
- வசந்தா, சென்னை
கிரஹணத்தின் மாசுபடாமல் இருக்க தர்ப்பையைக் கிள்ளிப் போடுவதுண்டு. ஊறுகாய்க்குப் போட வேண்டாம். புளிக் காய்ச்சல் மற்றும் தொக்குக்குப் போட வேண்டும். ஃப்ரிஜ்ஜுக்கு வெளியே இருக்கும் ஊறுகாய் கெட்டுப் போகாது. புளிக் காய்ச்சல் கெட்டுப்போகும். சமைத்த பொருள்களை ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பயன்படுத்துவது, சுகாதாரத்துக்கு உகந்ததல்ல. தர்மசாஸ்திரமும் இவற்றை மாசு படிந்ததாகப் பார்க்கும். ஆனால் நம் மனம், ஃபிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்துவதையே சௌகரியமாக கருதுகிறது.
சுகாதாரத்துக்கு கேடு என்று தெரிந்தும் புகை பிடிப்பதையும், குடிப்பதையும் ஏற்றுக் கொள்கி றோம். திடீர் குளிர்ச்சியும், திடீர் வெப்பமும் தாக்கும்போது பொருளின் தரம் மாறுபடும். விஞ்ஞானமும் அதை உறுதி செய்யும். ஆனால் இதனால் ஏற்படும் தீமைகள் உடனடியாக வெளிப்படாததால், 'கெடுதி கிடையாது' என்று கருதுகிறோம்.
மேலும்... பால், மோர், தயிர், அரைத்த மாவு போன்றவற்றுக்கு மட்டுமே தர்ப்பை பொருந்தும். மற்றவற்றுக்குப் பொருந்தாது. உப்புப் போட்டு சமைத்த பொருளில் பயன்படுத்தினாலும் பலன் இருக்காது!

எனது நெருங்கிய நண்பரது குலதெய்வம் 'கால்வாய் சாஸ்தா!' ஆனால் ஜோதிடர் ஒருவர், 'நீங்கள் அம்பாளையே ஆராதிக்க வேண்டும்.முன்னோர் வழிபட்ட அம்பாளை, நீங்கள் ஆரா தனை செய்யவில்லை' என்றாராம். ஜோதிடர் சொல்வது சரியா?
- ராதா ராமமூர்த்தி, சென்னை-33
குலதெய்வத்தை நிர்ணயம் செய்வது ஜோதிடம் அல்ல. ஆராதனை செய்ய வேண்டிய வேளையை வரையறுப்பதோடு அதன் வேலை முடிந்துவிடும். இதற்கு, 'கால விதான சாஸ்திரம்' என்று பெயர்.
மனம் விரும்பிய இறை உருவத்தை நம் முன்னோர் குலதெய்வமாக ஏற்று வழிபட்டனர். அவர்கள், ஜோதிடரை அணுகி குலதெய்வத்
தைத் தேர்ந்தெடுக்கவில்லை. திருப்பதி, குருவாயூர், திருவண்ணா மலை, சிதம்பரம் ஆகிய தலங்களில் உள்ள தெய்வங்களையும் ஷீர்டி பாபா போன்ற மகான்களையும் வழிபட ஜோதிடத்திடம் பரிந்துரை கேட்பதில்லை. தர்மசாஸ்திர விஷயங்களை ஜோதிடரிடம் கேட்க வேண்டாம்.
முன்னோர் வணங்கிய தெய்வம் தங்களுக்குத் தெரியவில்லை. தாங்களாக ஒரு குலதெய்வத்தை ஏற்று பணிவிடை செய் கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெரியாத குலதெய்வத்தை வணங்காதது தவறாகாது. தாங்கள் வணங்கும் குலதெய்வம், எல்லா தவறுகளில் இருந்தும் உங்களைக் காப்பாற்றும். எல்லாத் தெய்வங்களிலும் உறைந்திருக்கும் சக்தி ஒன்றுதான். விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுப்பது தவறில்லை.

கௌளி எந்தத் திசையில் இருந்து சத்தம் எழுப்பினால், நற்பலன்விளையும்? நாம் இருக்கும் அறைக்கு வெளியில் இருந்து கௌளி ஒலி எழுப்பினாலும், உரிய பலன் உண்டா?
- ஜி.எஸ். பாலமுருகன்
வடதிசையில் இருந்து சத்தம் எழுப்பினால் நற்பலன் உண்டு. வெளியிலிருந்து வந்த ஒலி காதில் விழுந்தாலும் பலன் உண்டு. ஏழு கிழமைகள்; பத்து திசைகள்- ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபட்ட பலன்கள் உண்டு.
நினைவிலிருந்து அகன்ற பஞ்சாங்க விளக்கத்தை ஞாபகப் படுத்தினீர்கள். முயற்சியில் கிடைக்க வேண்டிய நற்பலனை கௌளியின் ஒலியால் அடைய விரும்புகிறீர்கள்!
பழைய பஞ்சாங்கங்களில், 'பல்லி சொல் லுக்கு பலன்' என்று எழுதியிருக்கும். அதைப் பார்த்தால் முழுத் தகவல் கிடைக்கும். பல வருடங்கள் முன்பு வெளியிடப்பட்ட பல்லி சொல்லுக்குப் பலன், ஒவ்வொரு வருடமும் மறு பதிப்பாக வெளி வரும். அதில் இருக்கும் தமிழ் மொழி பலபேருக்கு விளங்காது. பண்டிதரை அணுகி விளக்கம் பெற்று மகிழுங்கள்.

No comments:

Post a Comment