கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூர் பனஸ்வாடி ‘வேல் பூஜை அன்பர்கள்’ நடத்திய மூன்றாம் ஆண்டு விழா வைபவத்தில் கலந்து கொண்டு அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் (பெங்களூர் அல்சூர் ஏரி அருகே உள்ள ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் திருமடத்தில்) சொற்பொழிவாற்றினேன்.
இரு தினங்களும் திரளான பக்தர்கள் கூட்டம். இந்த நிகழ்வின் இரண்டாம் நாள் வைபவத்தை என் முகநூலில் பதிவிட்டேன். முருக பக்தர்களது உருக்கமான வரவேற்பும் உற்சாகமும் என்னை நெகிழ்வடைய வைத்து விட்டது.
திங்கள் காலை சென்னை திரும்பினேன். அன்று மதியம் திருச்சியில் உள்ள எனது நண்பர் (மங்கள் ஹோம் பில்டர்ஸ்) திரு முரளி அழைத்தார். அவரது ப்ராஜெக்ட் பூர்த்தி ஆகி, வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர், வேல் ஒன்றை பரிசாக அளித்ததாகச் சொல்லி, எப்படி வழிபட வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
அவராக அன்பளிப்பாக வந்த வேல் பற்றி என்னிடம் ஏன் கேட்க வேண்டும் என்று நான் யோசித்தேன்.
அடுத்த நாளான இன்று காலை பெரியவா அதிஷ்டானம் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் சென்றேன். அற்புதமான தரிசனம். அதன் பின் ஓரிக்கை சென்றேன்.
ஓரிக்கை பெரியவா திருச்சந்நிதியில் மூலவர் பெரியவா விக்கிரகத்துக்கு முன்னால் திருப்பாதுகைக்கு அருகில் ஒரு சிறிய பெரியவா விக்கிரமம் (இதுதான் அனுஷத்தின்போது தேரில் வலம் வருமாம்). அவர் தோளில் ஒரு சிறு வேல் சார்த்தி இருந்தார்கள். எனக்கு ஆச்சரியம். இதற்கு முன் இந்த விக்கிரகம் என் கண்ணில் பட்டதும் இல்லை. அதுவும் வித்தியாசமாக வேல்!
சனி மற்றும் ஞாயிறில் பெங்களூரில் வேல் பூஜை அன்பர்கள் வைபவம்.
அடுத்த நாள் திங்கட்கிழமை வேல் பற்றி நண்பர் முரளியின் விசாரிப்பு.
நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை ஓரிக்கை பெரியவாளிடம் ஒரு வேல்.
எனக்கு ஆச்சரியம். தொடர்ந்து வேல்!
ஓரிக்கையில் பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் திரு கணபதியிடம் ‘என்னது… பெரியவாளிடம் வேல் இருக்கு?’ என்று கேட்டதற்கு, ‘வாங்கோ… பிள்ளையார் சந்நிதிக்கு’ என்று கூட்டிச் சென்று பிள்ளையாரிடமும் ஒரு சிறு வேலைக் காண்பித்தார்.
ஆச்சரியம் விடவில்லை.
எனது வேல் அனுபவங்களை நெகிழ்வுடன் அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
ஓரிக்கை கணபதி சொன்னார்: ‘‘பெரியவா கிட்ட வேல் இருக்கிறது பத்தி பலரும் கேக்கலை. உங்களைக் கேக்க வைக்கறார்.
நீங்க எப்படி வேல் அனுபவங்களைச் சொல்றேளோ, அதுபோல்தான் இங்கும். ஓரிக்கை அடிக்கடி வர்ற ஒரு பக்தர் பழநி செல்வதாகச் சொன்னார். அங்கே ஏதாவது வாங்கிண்டு வரணுமா என்று கேட்டார். பழநிலேர்ந்து வேல் வாங்கிண்டு வாங்கோ. பெரியவாளுக்கு சமர்ப்பிங்கோ’ என்று சொன்னேன்.
பழநியில் தரிசனம் முடிந்து அவருக்கு வேல் வாங்கி இருக்கிறார். வேல் வாங்கி வரும்போது (ஒன்றுக்கு இரண்டு வேல் வாங்கி இருக்கிறார்) அவர் ஓட்டி வந்த கார் மிகப் பெரிய விபத்தை சந்தித்து, காரில் இருந்தவர்களுக்கு எந்த வித சேதமும் இல்லாமல், கார் அப்பளம் ஆகியுள்ளது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
விபத்தின் அதிர்ச்சியில் இருந்து கொஞ்சமும் விலகாமல், அந்த பக்தர் சிலிர்ப்புடன் வந்து இந்த இரண்டு வேலையும் இங்கே சமர்ப்பித்தார். ‘இந்த வேல்தான் என்னை காப்பாத்தி இருக்கு’ என்று உருகினார்.
அவர் வாங்கி வந்து சமர்ப்பித்த இரண்டு வேல்களில் ஒன்று பெரியவாளிடம்; இன்னொன்று விநாயகரிடம்.
உங்களையும் வேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏதேனும் முருகன் கோயிலுக்குச் சென்று தரிசிக்குமாறு பெரியவா சொல்றார் போலிருக்கு’’ என்று முடித்தார்.
தரிசனம் முடிந்து டிராவல்ஸ் காரில் தாம்பரம் திரும்பிக் கொண்டிருக்கும்போது வாலாஜாபாத் அருகே முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பெரிதாக எழுதி இருந்த வாசகம்:
சக்தி வேல். கூடவே, வேலின் படம் வேறு!
சக்தி வேல். கூடவே, வேலின் படம் வேறு!
சுவாமிமலைக்குக் கூடிய விரைவில் பயணப்பட வேண்டும்.
எங்கூர் முருகன். எனக்கு ரொம்பவும் பிடித்த ஸ்வாமிநாதன்… குருஸ்வாமி…
No comments:
Post a Comment