Tuesday, May 5, 2015

அஜபா நடனம்


சிவபெருமானின் சதாசிவ வடிவத்தின் ஐந்து திருமுகங்கள் தோறும் ஐந்து ஐந்தாக 25மகேசுவர வடிவங்களில் தோன்றி விளங்குகின்றன. அவற்றில் உச்சி முகமான ஈசான முகத்தில் தோன்றியதே சோமாஸ்கந்த வடிவம்.

விஷ்ணு பகவானுக்குப் புத்திரப்பேறு அருள்வதற்காக வெளிப்பட்ட மூர்த்தமே சோமாஸ்கந்த மூர்த்தம். சச்சிதானந்த ரூபம் எனப்படும் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் கந்தன் நடுவிலும் சிவபெருமானும், உமையவளும் இரு புறங்களிலுமாக ஒரே ஆசனத்தில் அமர்ந்திருப்பர். சத்-சிவனையும், சித்-சக்தியாகிய உமையவளையும், ஆனந்தம்-கந்தனையும் குறிக்கிறது. இந்தச் சோமாஸ்கந்த மூர்த்தமே சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான திருவாரூரில் தியாகராஜ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

விஷ்ண பகவான் புத்திரப்பேறு வேண்டி சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தார். பகவானுடைய தவத்தில் திருப்தியுற்ற சிவபெருமான் அவருக்கு சோமாஸ்கந்த வடிவில் காட்சி யளித்தார். விஷ்ணு பகவானின் பிரார்த்தனைக்கு இணங்கி சிவபெருமான் அவருக்குப் புத்திரப்பேறு உண்டாகும்படி வரமருளினார். விஷ்ணு பகவான் உமையவளை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வணங்கினார். அதனால் கோபமுற்ற உமையவள், பிறக்கும் குழந்தை சில நாள்களில் இறந்துவிடும் எனச் சாபமிட்டாள். அம்பிகையின் சாபத்தைக் கேட்டுத் துயருற்ற பகவான் அவளை வணங்கி, தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். ‘இறந்த குழந்தை மீண்டும் உயிர் பெற்று உருவிலியாய் நெடுநாள் வாழும்’ என தேவி வரமளித்தாள்.

அன்று முதல் விஷ்ணு பகவான் ஒரு செம்பொன் ஆசனத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியை ஆகம விதிப்படி ஸ்தாபித்து திரிகரண சுத்தியோடு வெகுகாலம் பூஜித்து வந்தார். மனம் மகிழ்ந்த சிவபெருமான் மீண்டும் சோமாஸ்கந்த வடிவில் பகவானுக்குக் காட்சியளித்தார். பகவான் முதலில் உமையையும், ஸ்கந்தனையும் வணங்கிப் பின்னர் சிவபெருமானை வணங்கினார். அவரது ஆராதனையை ஏற்ற சிவபெருமான் தேவியின் சாபத்திலிருந்து நிவர்த்தி பெற வழிபடுவதற்கென பகவானுக்கு சோமாஸ்கந்தத் திருமேனி ஒன்றை அளித்தார்.

அதனைப் பெற்றுக் கொண்ட விஷ்ணுபகவான் அந்த சோமாஸ்கந்த வடிவத்தில் சாந்நித்தியம் உண்டாகும்படி சிவபெருமானை வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுகோளுக்கிணங்கி கயிலாயத்தில் வீற்றிருப்பது போல அந்த சோமாஸ்கந்த ரூபத்தில் நித்திய சாந்நித்யம் அடைந்து வீற்றிருந்தார். அந்த மூர்த்தமே திருவாரூர் எனப்படும் பராசக்தி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சிவபெருமான் அளித்த அந்த மூர்த்தியை விஷ்ணு பகவான் திருப்பாற்கடலுக்கு எடுத்துச் சென்று தன் நெஞ்சமென்னும் கோவிலில் இருத்தி நாகணையின் மேல் யோக நித்திரையில் ஆழ்ந்தார். விஷ்ணு பகவானின் நெட்டுயிர்ப்பின் அசைவால் அவரது நெஞ்சத்தில் வீற்றிருந்து சோமாஸ்கந்தர் அசைந்தாடிக் கொண்டிருக்கிறார். திருப்பாற்கடலின் அலைகளின் அசைவால் மகாவிஷ்ணு யோக நித்திரையில் இருக்கும் அனந்த சயனம் வலமும், இடமும் ஆடுவதுடன் அவரது யோக நித்திரையின் காரணமாக அவரது மார்பும் ஏறி இறங்குகிறது. இந்நிலையில் சோமாஸ்கந்தரும் வலம் இடமாகவும் அதே சமயம் மேலும் கீழுமாகவும் ஆடுகிறார். இதுவே ஆருர் தியாகேசனின் அஜபா நடனம் எனப்படுகிறது.
மூச்சை வெளியே விடுவதனாலும், உள்ளிழுப்பதனாலும் ஏற்படும் அசைவே அஜபா நடனம் ஆகும்.

அஜபா நடனத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் திரோபவம், அனுக்ரஹம் என்னும் பஞ்ச கிருத்தியங்களும் அடங்கியுள்ளன. பஞ்ச கிருத்ய தத்துவத்தைத் தாத்பர்யமாகக் கொண்ட அஜபா ஸ்வரூபத்தை சத்குருவின் மூலமாக உணர்ந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தாம் சுவாசிக்கும் 21600 சுவாசங்களையும் அஜபையில் ஜபிக்கப்படும் மகா மந்திரத்தை ஜபித்து ஊனக் கண்ணால் ஸ்ரீதியாகராஜரின் அஜபா நடனத்தைத் தரிசித்தால் அவர்கள் சிவஸ்வரூபமே ஆவர் எனப் புராணங்கள் கூறுகின்றன.
ஒவ்வொருவரும் அனுதினமும் இயற்றும் 21600 அஜபைகளை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்வதுபற்றி ‘அஜபா கல்பம்’ என்னும் நூல் கூறுகிறது.

கணபதிக்கு      600
பிரம்மாவுக்கு    6000
மஹாவிஷ்ணுவுக்கு   6000
சிவபெருமானுக்கு     6000
ஜீவாத்மாவுக்கு  1000
பரமாத்மாவுக்கு  1000
குருவுக்கு  1000

என அஜபைகளை தெய்வங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

திருமாலுக்கு சிவபெருமானால் அளிக்கப்பட்ட இளமுருகு உடனுறையும் அம்மையப்பராகிய சோமாஸ்கந்தத் திருமேனியை பள்ளி கொண்ட பெருமாள் தன் மார்பில் வைத்து பூஜித்ததாகவும், இதனால் ஈசன் மகிழ்ந்து தன் தேவியுடன் தோன்றி பாப விமோசனம் அளித்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

திருமால் பூஜித்த சோமாஸ்கந்த மூர்த்தியை இந்திரன் வேண்டிப் பெற்றதாகவும் பின்னர் முசுகுந்தன் அதனைப் பெற்று திருவாரூரில் ஸ்தாபித்ததாகவும் வரலாறு. இந்திரனிடமிருந்து இத்திருமேனியை முசுகுந்தன் பெற்றபோது மேலும் ஆறு திருமேனிகளைப் பெற்றதாகவும் அவை திருநள்ளாறு, திருநாகைக் காரோணம் (நாகை), திருக்காராயில், திருக்கோளிலி திருவாய்மூர், திருமறைக்காடு ஆகிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகவும் புராணங்கள் மூலம் அறிகிறோம்.

திருவாரூர் திருக்கோவிலில் தியாகராஜர் திருமேனி மூலஸ்தானத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. மூலஸ்தானத்தில் இருந்து அருள் பாலிப்பவர் வன்மீகநாதர். தியாகராஜர் (சோமாஸ்கந்தர்) தனிச் சந்நிதியில் சுகாசனமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இம் மூர்த்தத்தில் தியாகேசனின் திருமுகத்தையும், அம்பிகையின் திருமுகத்தையும் மட்டுமே நாம் தரிசிக்க முடிகிறது. மற்ற அங்கங்கள் அனைத்தும் ஆபரணங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஆபரணங்களிடையே மறைந்துள்ளன. கந்தன் உருவமும் அலங்காரத்தின் பின்னே மறைந்துள்ளது. மார்கழித் திருவாதிரைத் திருநாளில் ஈசனின் இடப்பாதத்தையும், பங்குனி உத்தரத்தில் வலப்பாதத்தையும் தரிசிக்கலாம். தியாகேசர் உற்சவ மூர்த்தியாக வெளியே வரும்போது அவர் ஆடும் நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது.

தியாகராஜர் சந்நிதியின் தென்புறச் சுவரில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள விஷ்ணு பகவான் தன் நெஞ்சத்தில் அமர்த்தி யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பதைச் சித்திரிக்கும் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வண்ண ஓவியம் காண்போர் மனத்தைக் கவர்வதாக பக்திப் பரவசமூட்டும் வண்ணம் அமைந்துள்ளது. இதில் காட்சி தரும் பகவான் பக்தர்களின் வழிபாட்டுக்குரியவராய்த் திகழ்கிறார். ஏகாதசியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தில்லைக் கோவிலுக்கும் முன்தோன்றிய சிறப்பை உடைய திருவாரூர் திருக்கோவில் சென்று தியாகேசரை வணங்கி எல்லா நலங்களும் பெறுவோம்

1 comment:

  1. அருமை அற்புதம் ஆரூரா தியாகேசா திருச்சிற்றம்பலம்

    ReplyDelete