மே 06,2014-தினமலர்.
காஞ்சிபுரம் மடத்திற்கு ஒரு சமயம், வெளியூரில் இருந்து ஒரு சிறுவன் வந்தான். அவன் அங்குமிங்கும் அலைவதைக் கவனித்து விட்டார் பெரியவர்.
சிறுவன் ஒருவன் தனியாக அலைகிறானே என்று அவனைக் கவனித்தார். அந்தச் சிறுவன் ஒரு வழியாக பெரியவர் அருகில் வந்து வணங்கினான்.
""பெரியவா! என் அப்பா ஓட்டலில் வேலை செய்கிறார். குடும்ப பிரச்னையால் என்னையும் ஓட்டல் வேலைக்கே போகச் சொல்கிறார். நான் படிக்க விரும்புகிறேன். ஆனால், பண வசதியில்லை. நீங்கதான் ஏதாவது உதவி செய்யணும்!'' என்று வேண்டிக் கொண்டான்.
அவனை அன்புடன் நோக்கிய பெரியவர், ""அது சரி...நீ இங்கே படிச்சா எங்கே தங்குவே?'' என்று கேட்டார்.
அவனும், ""இந்த ஊரிலேயே எனக்கு தெரிந்தவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறேன்'' என்றான். பெரியவர் அப்போதைக்கு எதுவும் சொல்லவில்லை.
இதன் பின், தினமும் அந்தச் சிறுவன் மடத்திற்கு வந்து பெரியவரை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டான்.
ஒருநாள் காசியில் இருந்து காஞ்சிபுரம் வந்த தம்பதி,""பெரியவா! எங்களுக்கு குழந்தை இல்லை. அதனால், ஆதரவில்லாத குழந்தைக்கு உதவி செய்யலாம்னு நெனைக்கிறோம். அதுக்கு நீங்க தான் அனுக்ரஹம் பண்ணணும்!'' என்று சொல்லி வணங்கினர்.
அந்த சமயத்தில் உதவி கேட்ட சிறுவனும், பெரியவரைத் தரிசிக்க அங்கு வந்தான்.
பெரியவர் அந்த தம்பதியிடம், ""இதோ இந்தப் பையன் படிக்க ஆசைப்படறான். அவனை அழைச்சுண்டு போய் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வையுங்க!'' என ஆசியளித்து அனுப்பி வைத்தார்.
அந்த தம்பதியும் சிறுவனை காசிக்கு அழைத்துச் சென்று, நன்கு படிக்க வைத்தனர். சிறுவனும் வளர்ந்து ஆளாகி பட்டம் பெற்றான்.
அரசுத்தேர்வு எழுதி டில்லியில் தேர்தல் கமிஷனில் உயர் அதிகாரியாக பதவி பெற்றான்.
அவனுக்கு திருமணத்தையும் நடத்தி விட, அந்த தம்பதி முடிவெடுத்தனர். இதற்கிடையில் அந்த தம்பதிக்கு ஒரு மகளும் பிறந்து ஆளாகி இருந்தாள். இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க அவர்கள் விரும்பினர். அதற்கும் பெரியவரின் ஆசியைப் பெறும் நோக்கத்தில் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தனர்.
ஒரு சிறுவனாக அல்ல! முப்பது ஆண்டுகள் கழித்து தேர்தல் துறையில் பெரிய அதிகாரியாக, பெரியவர் முன் நின்று கொண்டிருந்தார் அந்த முன்னாள் சிறுவர். அவரைக் கண்டதும் ஞாபகம் வந்தவராய், ""எப்படியிருக்கே?'' என்று நலம் விசாரித்தார்.
வியப்புடன் அதிகாரியும் கைகளைக் குவித்து நமஸ்கரித்தவராய், பெரியவரின் உதவியால் தான் பெற்ற மிகப்பெரிய வாழ்வை பெருமித உணர்வுடன் எடுத்துச் சொன்னார்.
அந்த தம்பதி, அதிகாரியைத் தன் வீட்டு மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ள விரும்புவதை பெரியவரிடம் தெரிவித்தனர்
. பெரியவரும் அதற்கு அனுமதியளித்தார்.
அவர்களுக்கு ஆசியளித்து வழியனுப்பி வைத்தார்
No comments:
Post a Comment