Monday, December 8, 2014

'கலவை சின்னப் பெரியவாள்'

பெரியவாளுக்கு முந்தைய பட்டம் 'கலவை சின்னப் பெரியவாள்' என்று குறிப்பிட்டு இருந்தேன். அவருக்கு முந்தியவர் 'கலவை பெரிய பெரியவாள்'. இருவருமே கலவையில் ஸித்தி ஆனவர்கள் என்பதும் 66-ஆவது பட்டமான பெரிய பெரியவாளுக்குப் பின் அடுத்த பட்டம் எட்டே நாள்தான் பீடம் வகித்து வாழ்வை முடித்தவரென்றும் வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.
அந்த சின்னப் பெரியவர் தமது பூர்வாசிரமத்தில் நமது மஹா பெரியவாளின் பெரியம்மா புத்திரரே என்பதும் தெரிந்து இருக்கலாம்.
'காந்தன்' என்றே குறிப்பிடுவார்கள். மெய்யாலுமே பாலனிடம் ஒரு வசீகர காந்தம் இருந்தது. காந்தத்தோடு சாந்தமும்!
...
'அவருக்கு முழு வித்யாசமா, இங்கே எங்காத்திலேயானா அப்பா சர்க்கார் உத்தியோகம். அதுபோக பாக்கி வேளையெல்லாம் ஆத்துல சங்கீதக் கச்சேரி தான். நானா, ஸ்கூல், ஸ்கூலாத் திண்டாடிட்டு, கடைசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டு இருந்தேன். அண்ணா தான் பூர்ண வைதிகம், அண்ணா தான் பூர்ண வைதிகம்' என்று நெஞ்சார்ந்த மரியாதைத் தழதழப்புடன் கூறினார், உணர்ச்சிகளை வெகுவாகக் கட்டுப் படுத்தும் ஸ்ரீ சரணர்.

'அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே, நாங்கல்லாம் வேணும்னே அவர்கிட்ட தஸ்புஸ்ன்னு இங்க்லீஷ் ல போட்டுப் பொளப்போம். அவருக்கு இங்க்லீஷ் தெரியலை ன்னு பரிஹாசம் கூட பண்றது. அதுக்கும் அவர் பாட்டுக்குச் சிரிச்சிண்டு சாந்தமாவே இருந்துடுவார்.
நாங்க ட்ராயர், ஷர்ட், கோட்டு கூட காப் எல்லாம் போட்டுண்டு அமர்க்களப் படுத்தினாலும் அவருக்கு கொஞ்சம் கூட அந்த டிரஸ் ல சபலம் கெடயாது. பால்யத்திலேயே அப்டியொரு மனசுக் கட்டுப்பாடு, சாந்தி, தாந்தி (வெளிப் புலன் மற்றும் மனக் கட்டுப்பாடு) ரெண்டுமே ஸ்வாபாவிகமா அவருக்கு இருந்தது.
பிறிதொரு சமயம் சொன்னார், 'ஆசார்யாளோட பீடத்துல ஒக்காரணும் ன்னா எவ்வளவு விதிக்க பரிசுத்தி வேணுமோ அவ்வளவும் எனக்கு முன்னாடி இருந்தாரே, அவருக்குத் தான் இருந்தது. ஏன் பின்னே அத்தனை சுருக்க அவரை ஆசார்யாள் தங்கிட்டயே எடுத்துண்டுட்டார் ன்னு யோஜிச்சு, யோஜிச்சு பாத்திருக்கேன். முடிவா, என்ன தோணித்துன்னா, வரப் போற அவைதிக ப்ரளய சமுதாயத்துக்கு அத்தனை சுத்தரை ஆசார்யரா பெற லாயக்கில்லை - ன்னு தான் அவரை எடுத்துண்டு, என்னை அங்கே இழுத்து ஒக்காத்தி வெச்சிருக்கார் போலே இருக்குன்னு'.
அவர் சிரித்துக் கொண்டு தான் சொன்னார், கேட்டவர்களுக்குத் தான் நெஞ்சு தழுதழுத்தது.

...
'ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்' அத்துறவிக்கு பொன்னாலும் பொருளாலும் ஆக வேண்டிய தேவை - சுயபூர்த்தி - என்ன உண்டு?
ஆனாலும் ஜகதாசாரியார் என்ற முறையில் மக்களின் ஆன்ம நலனுக்காக அவர் சதா காலமும் தீட்டிக் கொண்டிருக்கும் அருமையான திட்டங்களுக்கு தனலக்ஷ்மி தேவைப் படத் தானே செய்கிறாள்? அப்படிப் பட்ட நற்பணிகளுக்கும் தான் எல்லாக் கனகாபிஷேகங்களில் பொழியப்பட்ட பொன்னும் பயனாய் இருக்கிறது. குறிப்பாக, நமது சனாதன தர்ம வ்ருக்ஷத்துக்கு வேராக அவர் கருதும் வேதக் கல்வி பரவவும் அவ்விருக்ஷத்தின் முடிவுப் பயனான பழம் என்று அவர் கூறும் திருக்கோயில்களின் திருப்பணிக்குமே கனகக் காணிக்கைகள் உபயோகப் படுத்தப் பட்டுள்ளன.
நன்றி - கருணைக் காஞ்சி கனகதாரை, ஸ்ரீ ரா கணபதி அவர்கள்

No comments:

Post a Comment