Thursday, December 11, 2014

'' பொன்மானா, பொய்மானா ?''



ஸ்ரீ  மத்வாச்சார்யர்  அருளிச்செய்த  ஸ்ரீ மத்வ ராமாயணம்  ஒரு அபூர்வ  நூல்.   அதில் ஒரு  ஸ்லோகம்.     அது  ஜனகர்  விஸ்வாமித்ரரிடம்  தான்   பெற்ற சிவ தனுசுவைப்பற்றி  சொல்வது போல்  அமைந்துள்ளது.

'' தவ ஸ்ரேஷ்டரே, நான்  ஒரு சமயம் தவமிருந்து  பிரம்மாவிடம்  வரம் பெற்றேன். ''உன்  மகளை யாரும்  எந்த  முறையிலும் எப்போதும்  பலாத்காரம்  செய்யமுடியாது. மற்றும்  அவளை  விரும்புகிற  யாராலும் உனக்கு ஆபத்து வராது ''என்று அப்போது பிரமன் அருளியிருந்தான்.   எனவே எவராலும் என் பெண்  சீதா  துன்பப்படமாட்டாள்''  என்றார்.

மற்றொரு  கட்டத்தில்    பரசுராமர்  ராமரிடம்  சொல்வது  போல்  ஒரு  ஸ்லோகம்:

''முன்பு  இரண்டு   அற்புதமான வில்கள்  நிர்மாணிக்கப்பட்டன. ஒன்று  பினாக தனுஸ். அது  உமாபதியுடையது.  அதைவிட ச்சிறந்த இன்னொன்று  சாரங்க தனுஸ் அது  ரமாபதியுடையது.  தேவர்களுக்கும் மானுடர்களுக்கும்  தத்வ நிர்ணயத்தை உண்டு பண்ண  தேவதைகள் ரமேசனையும் உமேசனையும் யுத்தம்  புரிய வேண்டினார்கள். ஜெயிப்பவரே  சர்வோத்தமர் என்று  நிச்சயமாகிவிடும்.  ஹரியும் ஹரனும்  யுத்தத்துக்கு  தயாரானார்கள்.  ஹரி,  ஹரனுடைய  ஹ்ருதய கமலத்தில் அந்தர்யாமியாக இருந்து  அவரை  ப்ரேமிப்பவராக இருந்ததால், ஹரியின் முன்  ஹரன்  சிலையாக நின்றான்.  சிவன்  கண்களை  மூடி  காரணம் தேடியபோது  ஹரி  தனது  ஹ்ருதயவாசத்திலிருந்து பிரேரணை செய்வது புரிந்தது.  அதுவே ஹரனால் தனது தனுசை அசைக்க முடியாமல்  செய்துவிட்டது என உணர்ந்தார்.  இதற்கிடையில்  யுத்தம்  ஆரம்பிக்கும்  முன்பே  முடிவு   தெரிந்ததாக தேவர்கள்   ஸ்ரீ  ஹரியின்  அபார சாமர்த்தியத்தை மெச்சினர்  என்று  ஒரு கதை. எனவே  தான்  ஸ்ரீ  ராமனால்  சிவ தனுசை எளிதில் எடுத்து  முறிக்க முடிந்தது. சீதையை  அடைய முடிந்தது.
அப்படிப்பட்ட  சிவதனுசைக்காட்டிலும்  சிறந்த சாரங்க  தனுசை  பரசுராமர்  வைத்திருந்து அதை ராமனிடம்  அளிக்கிறார்.

மத்வர்   ஒரு  இடத்தில்  ஒரே  ஸ்லோகத்தில்  ராமனின்  பராக்ரமத்தையும்  கருணையும் சுருங்க சொல்கிறார்:

''யாருடைய வளர்ச்சி  ஜனங்களில்  மனதை  வசீகரித்ததோ, எவரைப்பார்த்தாலே ஜனங்கள்  மகிழ்சசி அடைந்தார்களோ,  எவர்  யாகத்தை காத்து விச்வாமித்ரரை  மகிழ வைத்தாரோ,  எவர் தாடகையை சம்ஹாரம் செய்தாரோ,  எவர்  அகலிகையை கெளதமரோடு  மீண்டும் சேர்த்து வைத்தாரோ,  சிவதனுசை  முறித்தாரோ , சீதையைக்  கைப்பிடித்தாரோ, பரசுராமரை ஜெயித்தாரோ, அவரில் இருந்த  அதுலாசூரனை கொன்றாரோ,  அயோத்யா  திரும்பினாரோ, அப்படிப்பட்ட ஸ்ரீ  ராமன்   என்னைக் காக்கட்டும். ''
இனி  அத்யாத்ம  ராமாயணம்  தொடர்வோம்.

''நாதா   இரவு முழுதும்  தூங்காத  ராவணன்  பிறகு என்ன செய்தான்  என்று சொல்லுங்கள்''  என்று  கேட்ட பார்வதிக்கு   பரமசிவன் சொன்னது: 

''ராவணன்  அறிவாளி. இரவு முழுதும்  யோசித்தவன் ஒரு தீர்மானத்துக்கு  வந்தான்.  ரத்தத்தில் ஏறி,  மாரிசனை அணுகினான்.  பெருங்கடலின் நடுவே, ராக்ஷசனாக  இருந்தும், ஒரு முனிவனைப்போல்  மரவுரி, ஜடாமுடியோடு பரமாத்மாவின்  த்யானத்தில்  மாரிசன் வாழ்ந்து வந்தான்.  ராவணனைக்கண்டு  ஆரத்தழுவினான். ''ஏன்  தனியே  வந்திருக்கிறாய், உன் முகத்தில் ஏதோ கவலை ரேகைகள்  ஓடுகிறதே? ரகசியம் இல்லையென்றால்  சொல்லேன்.

மாரிசா, உனக்குத்தெரியுமா?  அயோத்தி ராஜா  தசரதன் மகன் ராமன், இப்போது  பஞ்சவடி  காட்டில் முனிவர்களுக்கு  இடையே ஒரு  ஆஸ்ரமத்தில்  வாழ்கிறான். அவன்  மனைவி  சீதை சிறந்த  பேரழகி.  யாராலும் வெல்ல முடியாத  கர  தூஷனர்களையும்  அவர்கள்  பெரும்  படையையும்  தனி ஒருவனாகவே  கொன்றிருக்கிறான். நமது  சூர்ப்பனகையையும்  மானபங்கப்படுத்தியிருக்கிரார்கள்  அவனும்  அவன்  சகோதரன் லக்ஷ்மணனும் சேர்ந்து. அவன் செய்ததற்கு  பழி வாங்க  உன்னோடு  சேர்ந்து நான்  அவனது உயிரான  சீதையைக்  கடத்தபோகிறேன்.  நீ செய்யவேண்டியது  ஒரு  அழகிய  மான் வேடம்  கொண்டு  எப்படியாவது சீதையை மயக்கி  ராமனையும் லக்ஷ்மனையும்  அவளிடமிருத்து அப்புறப்படுத்தி அவளை த்
தனிப்படுத்துவது. இந்த  உதவியைச் செய்வாயா?

''ராவணா, ஒட்டு மொத்தமாக  அழிந்து  போக  உத்தேசமா?  யார்   உனக்கு இந்த  திட்டம் சொன்னது ?' அவனே உன்  எதிரி நம்பர்  ஒன்று.  முதலில் அவனைக்  கொல்லவேண்டும் '' என்றான் மாரிசன்.  ராவணா, கேள், விச்வாமித்ரரின் யாகத்தைக்  காக்க சிறு பிள்ளையானாலும் ராமன்  ஒரே  பாணத்தால்  நூறு யோசனை தூரத்தில்  இந்த  கடலில் என்னை  அன்று தள்ளியவன்  ராமன். எனக்கு அவன்  பராக்ரமத்தை நினைத்தாலே  நடுங்குகிறது.  எங்கும்  அவனையே பார்க்கிறேன். இதையும்  கேள்,  மீண்டும் ஒரு தடவை  தண்டகாரண்யம் சென்றபோது ஒரு  மான்  வடிவில் சென்றேன். கூறிய கொம்புகளோடு  அங்கு ராமனைத்  தாக்க எண்ணம் எனக்கு. ஒரு அம்பினால் என்னைத் தாக்கி,  தூக்கி  இந்த  கடலில் வீசப்பட்டு இந்த  கடலில் கதிகலங்கி நிற்கிறேன்'.  அன்றுமுதல் '' ரா''  என்ற  சொல்   காதில் விழுந்தாலே  போதும்  நடுநடுங்கி பயத்தில் உளறுகிறேன்.  எங்கே இங்கேயும்   அந்த ராமன்  வந்துவிடுவானோ  என்று  அவனையே  நினைத்துகொண்டிருக்கிறேனே. நீ வந்தபோது  முதலில்  ராமன்  தான்  வந்துவிட்டானோ என்று  தான்  அஞ்சினேன். கனவில் அவன் பேர் வந்தாலும்   தூக்கம் கலைந்து  பயம்  என்னை  ஆட்கொள்ளுகிறது.  இந்த  நிலையில் உனக்கு  எதற்கு  இப்படி  ஒரு  முட்டாள் யோசனை. நல்ல பிள்ளை யாக வீண் பிடிவாதத்தை விட்டு கெட்டிக்காரனாக வீட்டுக்குப் போ.  ராக்ஷச  குல  அரசன் நீ.  அவர்களை முதலில் காப்பாற்று.  உன்  எண்ணம் அரக்கர்குல நாசத்தில்  முடியும். உன் நலத்தில்  நாட்டம் கொண்டவன் நான். சொன்னபடி கேள்.  ராமன் மேல் பக்தி கொள். நல்லவன். கருணை உள்ளவன். அவன்  நினைத்தால்  என்னை  எப்போதோ கொன்றிருக்கலாம்.
ஒரு தடவை  நாரதர் சொன்னது கவனம் வருகிறது. பிரம்மா  கடுந்தவம்  புரிந்து  விஷ்ணுவை ஸ்தோத்ரம் புரிய மனமகிழ்ந்த  விஷ்ணு  ''உனக்கு  என்ன வேண்டும் சொல் ''   எம பிரம்மா  என்ன  கேட்டாராம் தெரியுமா உனக்கு?  ''பரமாத்மா,  நீங்கள்  பூமியில்  மானுடனாக அயோத்தி  ராஜா  தசரத குமாரனாக அவதரித்து  ராவநேஸ்வர்ன்   என்கிற பத்து  தலை  ராக்ஷசனை அழிக்க வேண்டும் '' என்று  பிரம்மன்
வேண்ட,  அதை நிறைவேற்ற  ராமன் புறப்பட்டு விட்டான்.  பேசாமல் திரும்பு.  வீட்டுக்கு  போய்  சௌக்கியமாக  இரு.''  என்றான்  மாரிசன்.

மாரிசா, நீ   சொல்வது புரிகிறது.  விதியை  யாரும்  வெல்லமுடியாது என்றும் எனக்கு  தெரியும்.  ராமன்  யார் என்றும் புரிந்துவிட்டது. இதில் என் பங்கு தான்  இந்த  திட்டம்.  சொல்வதைக்கேள். ஒன்று  போரில் ராமனை வெல்வேன் சீதையை அடைவேன்.  இல்லையேல்  போரில் இறந்தால் வைகுண்டம்  போவேன்.  எனவே  உடனே செல்.  ஒரு மானாக பஞ்சவடி போ. ராமனையும்  லக்ஷ்மணனையும்  எப்படியாவது  அப்புறப்படுத்து மற்றது  நான்  பார்த்துக்கொள்கிறேன். என்னைப் பயமுறுத்துவதாக  எண்ணி  மேலும்  ஏதாவது நீ  இனி சொன்னால்  உனக்கு  ராமனால்  அல்ல  என்னாலேயே  இங்கேயே  மரணம் நிச்சயம். ''

மாரிசன் தனக்கு முடிவு  நெருங்கிவிட்டதை உணர்ந்தான்.  அவனுக்கு ஒரே ஒரு வழி தான்  உள்ளது? யார் கையால்  மரணம் ?  இந்த  ராவணனால் கொல்லப்பட்டு  என்ன பிரயோசனம்? நரகம்  தான்   கிடைக்கும். பேசாமல்  ராமன் கையால்  மரணம் ஏற்பட்டால் சம்சார  சாகரத்தில் இருந்து  விடுபட்டு  மோட்சமாவது போய்ச்சேரலாம்  என  முடிவெடுத்தான்.   ராவணா  நீ  சொல்படியே  செய்கிறேன். உன்னிடத் தில் போய் வருகிறேன்  என்று  சொல்லப்போவதில்லை.  போகிறேன் என்று  சொல்வது தான்  உசிதம்.  வருவது  நிச்சயமில்லையே.  

மாரிசன் கலப்படமில்லாத  தங்க நிறத்தில், வெள்ளியினாலான அழகிய   வட்ட புள்ளிகள், நீண்ட  சீரான  ரத்ன மயமான  கொம்புகள், மணியாலான  குளம்பு , நீலமனியால்  கவரும்  கண்கள் மின்னல் ஒளி  வீச, காந்தம்   போல் கவரும்  அழகிய முகமுடைய ஒரு மானாக  உருவெடுத்தான்.  பஞ்சவடியில்  ஒரு  அழகிய  மான்  திரிந்து  ஓடியது. அங்கு இங்கு எல்லாம்  திரிந்த  அந்த  அழகிய மான்  ராமனின்  பர்ணசாலைக்கு  அருகே மேய்ந்து கொண்டு வந்து அந்த  பர்ணசலையின்  வாசலில்  மூன்று பேர் அமரிந்திருக்கும்போது  துள்ளித் துள்ளி  ஓடி  அவர்களது  கவனத்தை கவர்ந்தது.

''நாதா, அங்கே  பாருங்கள் ஒரு  அழகிய  பொன் மான்  என்னமாக துள்ளி விளையாடுகிறது'' என்று  சீதை  ராமனுக்கு  அந்த  மானைக்  காட்டினாள் .

'' நாதா  அந்த  சீதை மானைக் காட்டி  ராமனை அதன்  மீது  கவனம் வரும்படியாக  பண்ணினாள் . நீங்கள்  அந்த  மானைப்பற்றி  சொல்லியே  என் கவனத்தை ராமனின்  கதை மீது  ஆவல் தூண்ட செய்து  விட்டீர்கள் ''என்று   பார்வதி சிவனிடம் சொல்லி சிரித்தாள்.

No comments:

Post a Comment