Thursday, December 18, 2014

தியானம் எது?'

ஜென் குரு ஒருவரிடம் சீடர், 'குருவே, நீங்கள் மேற்கொள்ளும் தியானம் எது?' என்று கேட்கிறார்.குரு ," நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன், தண்ணீர் இறைக்கும் போது தண்ணீர் இறைக்கிறேன், தரை துடைக்கும் போது தரை துடைக்கிறேன் , தூங்கும் போது தூங்குகிறேன்" என்கிறார். 

நண்பர் ஒருவர் இந்தியா செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இறங்கி இருப்பது சரிதானா சார்? இங்கே ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் , அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் மக்கள்? என்று கேட்டார்.மனிதன் கனவு காண வேண்டுமா? சிறகுகளை விரிக்க வேண்டுமா? இல்லை கிடைத்ததை அனுபவித்துக் கொண்டு வாழ வேண்டுமா என்பது கேள்வி. மேலோட்டமாகப் பார்த்தால் இவை ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. ஆனால் இவை இரண்டும் ஒன்று தான். ஒரு மரத்தின் வேர்கள் எத்தனை கீழே செல்கின்றனவோ அதன் கிளைகள் அத்தனை மேலே செல்கின்றன. ஓஷோ ஒரு multi -faceted ஜோர்பா புத்தரை வரவேற்கிறார்.அவன் ஜென்னிலும் வாழ்வான்.விண்ணிலும் வாழ்வான்!

 well , அந்த ஜென் குரு சொல்வது போல சாப்பிடும் போது நாம் சாப்பிடுகிறோமா?? 

சாப்பிடுவதைப் பற்றி இப்படி சொல்கிறார் காஞ்சி பெரியவர்.


வயிற்று உபவாசம் மாதிரியே மௌனத்துக்கும் தர்ம சாஸ்திரத்திலே அனேக காலங்களை விதித்திருக்கிறது. "மௌநேந போக்தவ்யம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்குள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது இன்னொரு வேலையும் தரப்படாது.

 இப்படி விதித்த போதே ருசியையும் கட்டுப் படுத்தியதாக ஆகிறது. "இது வேண்டும். அது வேண்டாம் ; இதற்கு உப்பு போடு, அதற்கு நெய் விடு என்றல்லாம் சொல்ல முடியாதல்லவா? 

சோம வாரம், குரு வாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அனுஷ்டிக்கலாம் .சோமவாரம், குருவாரம், ஆபீஸ் இருப்பதால் ஞாயிற்றுக கிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒரு நாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஓர் example. 

மௌனமும் பட்டினியும், சேர்ந்தால் அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பார மார்க்கத்திலே நன்றாக ஈடுபடுவதை அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக    சிவராத்திரியோ, சஷ்டியோ, ஏகாதசியோ, பட்டினி கிடக்கிற போது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாசிக்கிறவர்கள் நவராத்திரி பூராவும் மௌனமாயிருப்பார்கள். 

 நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக் தேவியான சரஸ்வதிக்கு அபச்சாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ்வதியின் நக்ஷத்திரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு. தினமுமே அரை மணியாவது மௌனமாகத் தியானம் பண்ண வேண்டும். 

No comments:

Post a Comment