‘வெற்றி’ நமக்கு ஒரு உற்சாக பானம் போன்றது, ஒவ்வொரு முறை வெற்றியடையும்போது நமது மகிழ்ச்சி அளவில்லாமல் செல்கிறது. ஆனால் தொடர்ந்து அதே வெற்றிக்கான நிலையினை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. அதில்தான் நமது பிரச்சனையும் உள்ளது. ஏதோ ஒரு காரியத்தினை செய்தோம், வெற்றி பெற்றோம் என்று இல்லாமல், நாம் என்ன செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்று பொருளறிந்து செய்வது தொழில் முனைவோரின் முக்கியமான பண்புகளுள் ஒன்றாகும். இங்கு வெற்றியினைப் பெற மற்றும் அதனை தக்கவைத்துக்கொள்ள சுமார் எட்டு எளிய வழிமுறைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நாம் செய்ய வேண்டியது இதனை பின்பற்ற வேண்டியது மட்டுமே. சிறிய இலக்குகள் முதல் பெரிய இலக்குகள் வரை இந்த வழிமுறைகள் பெரிதும் உதவும். இந்த வழிமுறைகளுடன் தொடர் முயற்சியும் இருந்தால், உங்களின் வெற்றியினை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. வெற்றியினைப் பெற நீங்கள் மற்றவர்களை மாற்ற வேண்டியதில்லை, உங்களை மாற்றினாலே போதும் என்பது இந்த எட்டு வழிகளின் மூலம் உங்களுக்குப் புரியும்.
1. உங்களின் வேலை நாளினை திட்டமிடுங்கள்
ஒரு செயலைச் செய்யும் முன் திட்டமிடுங்கள். இதுவரைவெற்றியடைந்தவர்களை பார்த்தால், ஒரு நாளில் என்ன வேலை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் குறைந்தது 20 நிமிடங்களாவது தங்களது திட்டங்களை வகுத்துக்கொள்கின்றனர்1. இந்த திட்டத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் போன்றவை மட்டுமல்லாது, நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நமது வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்கும்படியும் திட்டமிடுதல் வேண்டும். தினமும் செய்ய வேண்டிய வேலைகளை முறையாகத் திட்டமிடும் பழக்கம் வளர்ந்து வந்தால் நமது வேலைகளின் வெளிப்பாடான உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
2. தொடர்ந்து வேலை செய்யுங்கள்
ஒரு சுழற்சி முறையாக வேலையினை செய்யுங்கள். இந்த சுழற்சி முறைக்கான கால அளவு உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு வாரம், ஒரு நாள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சரியான கால அளவில் நாம் தொடர்ந்து செய்யக்கூடிய வேலைகளின் வெளிப்பாடு அதிகளவில் இருக்கும், இது வெற்றியினை பெறுவதிலும், அதை தக்கவைத்துக்கொள்வதிலும் பெரிதும் உதவும். அத்துடன் குழப்பமான கால அட்டவணைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும் இது உதவும்.
3. அனைத்து வழிகளையும் கவனியுங்கள்
ஒவ்வொரு முடிவெடுக்கும்போதும் நமது முடிவினை எதிர்க்கும் மற்றும் வரவேற்கும் காரணிகள் குறித்து தெளிவான கருத்தினைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் நாம் எடுத்த முடிவினை அனைத்து கோணத்தில் இருந்தும் பார்த்து அதன் மீதுள்ள குறைகள் மற்றும் நிறைகளை அறிந்துகொள்ள வேண்டும். இது பல முற்போக்கு சிந்தனைகளை வளர்க்க உதவும். முடிவினை அறிவிக்கும் முன்பு எத்தனை மாறுதல்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், ஆனால் ஒரு முடிவினை இறுதியாக எய்த பிறகு அதனை மாற்றாமல் இருப்பதுதான் சிறந்தது.
4. சிறிய இலக்குகளை நிறைவு செய்யுங்கள்
உங்களுக்கான சிறிய இலக்குகளை நீங்களே தெரிவு செய்யுங்கள். உதாரணமாக, ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அந்த வாரம் முழுக்க நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அல்லது சிறிய இலக்குகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்தந்த தற்காலிக இலக்குகளை அடைய வேலை செய்யுங்கள். சிறிய இலக்குகளை வெற்றிகரமாக முடிக்கும்போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, நம்மை அடுத்த பெரிய இலக்கிற்கு ஆயத்தப்படுத்தும்.
5. நாளைக்கான திட்டமிடலை இன்றைய இறுதியில் செய்யுங்கள்
ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்று முடித்த வேலைகளை திருப்பி பார்த்து ‘நாம் இன்று சாதித்தது என்ன?’ என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்க வேண்டும். அத்துடன் அடுத்த நாள் முடிக்க வேண்டிய இலக்குகளை ஆயத்தநிலையில் வைத்துவிட்டு அன்றைய நாளினை முடிக்க வேண்டும். இதன் மூலம் வேலையினை தொடர்ச்சியாக செய்ய முடியும்.
6. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள போதுமான காலம் எடுத்துக்கொள்ளுங்கள்
வேலை என இறங்கிவிட்டால் வெற்றி, தோல்வி அனைத்தையும் சமமாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை தோல்வியடையும்போதும் அதிலிருந்து வெளிவர போதுமான கால அளவு எடுத்துக்கொளுங்கள். ஏனெனில், தோல்விக்கு அடுத்த படியில் நாம் கால் வைக்கும்போது நமது செயல்பாடுகள், வெற்றிக்கான பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். தோல்வியடையும்போது இருக்கும் மன அழுத்தம் மற்றும் விரக்தி நம்மை, நம் தொழிலைவிட்டே போய்விடலாம் என்ற எண்ணத்திற்க்குக் கூட கொண்டு செல்லும். தோல்விக்குப் பயந்தால் ஒருநாளும் வெற்றியினை சுவைக்க முடியாது. தோல்வியிலிருந்து வெளிவருவது மிகவும் கடினமான ஒன்றாகும், ஆனால் அதன் மதிப்பும் மிக அதிகம். தோல்வியிலிருந்து கிடைத்த அனுபவங்கள் நிச்சயம் வெற்றியினைத் தேடித்தரும்.
7. வாழ்க்கையில் ரிஸ்க் எடுங்கள் :
ரிஸ்க் அல்லது ஆபத்தினை நோக்கி பயணிப்பது ஒரு சுவாரசியமான விஷயம் என்றாலும் அதில் பல பிரச்சினைகளும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வார வேலையிலும் ஒரு சிறிய அல்லது பெரிய ரிஸ்க் எடுங்கள், அந்த வேலைக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா இல்லையா என்பதை அந்த ரிஸ்க் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். வெற்றியடைந்தால் மகிழ்ச்சி, தோல்வியடைந்தால் அனுபவம் என்ற மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ளுங்கள். எப்போதுமே முடிவு நமக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்துடன் ரிஸ்க் எடுங்கள், நமது எண்ணங்கள் தான் நமது முதல் நண்பன் என்பதை மனதில் வையுங்கள்.
8. அன்றையநாள் வேலையினை அன்றே செய்யுங்கள்
ஒவ்வொரு நாள் வேலைக்கான அவசரத்தினை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள். அது விரைவாக செயல்களை முடிக்க உதவும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நீங்கள் எண்ணினால் அது உங்களின் சோம்பேறித்தனத்தினை அதிகப்படுத்தும். முடிந்தவரை விரைவாக முடிக்க வேண்டும் எனும் எண்ணம் பெரிய இலக்குகளை நோக்கிய நமது பயணத்தினை அதிவேகத்தில் செயல்படுத்தும்.
எக்காரணம் கொண்டும் துவண்டுவிடாதீர்கள், வெற்றியோ, தோல்வியோ தொடர்ந்து முன்னோக்கி நடைபோடுங்கள். உங்கள் இலக்கினை எளிதாக அடைந்துவிடலாம்.
No comments:
Post a Comment