தரிசனம் கிடைத்தது. ஸ்வாமிகள் பக்கம் விழுந்து வணங்கினார். ஆரஞ்சுப் பழங்களையும் பூச்சரத்தையும் கொடுத்தார். எது வாங்கிக் கொண்டுபோக வேண்டும் என்ற தெளிவான முடிவுகூட அவருக்கு இல்லை. ஆரஞ்சுப் பழங்களும் பூச்சரமும் தான் அவர் மனதில் பட்டது. வாங்கிக் கொண்டு போனார்.
ஸ்வாமிகள் அவரைக் கருணை பொழியப் பார்த்தார். இதழ்களில் புன்னகை. கண்களில் அருள்பார்வை. ‘வெரி குட். உன் பணி தொடரட்டும்” என்று இளைஞருக்கு ஒரு மாலை அணிவித்து ஆப்பிள் பழத்தைப் பிரசாதமாகக் கொடுத்து ஆசி கூறினார்.
மற்றவர்களுக்குத் திகைப்பு. “இவன் பெரிய மனிதனும் அல்ல. எந்தச் செல்வாக்கும் இல்லாத சாதாரண இளைஞன். இவனுக்கு ஸ்வாமிகள் பிரசாதம் அளித்து மாலை போட்டு ஆசியளிக்கிறாரே” என்று குழப்பமும் பிரமிப்பும் இருந்தன.
ஆசாரிய ஸ்வாமிகளுக்கும் அவருக்கும் மட்டும் தெரிந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியாது. இளைஞரும் யாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார். ஸ்வாமிகளும் ஆசியளித்தார். இளைஞரின் செயல்கள் அவரது ஞானக்கண்களுக்குத் தெரிந்து இருந்தது.
அந்த இளைஞர் முதுகலைப் பட்டதாரி. பெரிய கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தார். மகிழ்ச்சியான சம்பளம். அவர் வேலையில் சேர்ந்தபின் சம்பளம் வாங்கிச் சேமித்துத் தனது அக்காவுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். தம்பியை நன்றாகப் படிக்க வைத்தார். பெற்றோர் அளவான சம்பளத்தில் மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கவே கஷ்டப்பட்டார்கள். அந்த இளைஞர் பெற்றோரின் சுமையைத் தாங்கினார். நல்ல சம்பளம். ஓவர் டைம் சம்பளமும் கிடைக்கும். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அவர் வருமானத்தில் ஐந்து சதவிகிதப் பணத்தை மனிதநேயத்துடன் தர்மம் செய்தார்.
அப்போது அவருக்கு வருடத்துக்கு அறுபது ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது வரி, பிடித்தம் எல்லாம் போக! இதில் குடும்பத்துக்குக் கொடுத்தது போக வருடத்துக்கு மூன்று ஆயிரத்தை தர்ம காரியத்துக்குக் கொடுத்தார். ஒரு வருடம் ஏழைப் பெண்மணியின் பிரசவத்துக்குக் கொடுத்தார். இன்னொரு வருடம் ஒரு முதியவருக்கு மருத்துவச் செலவுக்குக் கொடுத்தார். மற்றொரு வருடம் ஏழை மாணவனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டினார். இதை அவர் விளம்பரப்படுத்தவில்லை.
அவர் வேலையில் சேர்ந்த ஐந்து வருடத்தில் குடும்பச் சுமையைத் துப்புரவாகக் களைந்து விட்டார். அவர் தம்பியும் அவர் மாதிரிதான்.
ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசித்து விட்டு வந்த அந்த இளைஞருக்குத் திருமணம் கைகூடியது. பெண்ணும் நல்ல டைப். இளைஞர் வரதட்சணையே கேட்காதது இவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது பெண் வீட்டில். பெண்ணும் படித்து வேலைக்குப் போகிறாள். அவளை இவர் கட்டுப் படுத்தாமல் சுதந்திரமாக இருக்கச் சொன்னார். இவரது பண்பு கண்டு அவள் இவர் சொன்ன சொல்லைத் தட்டவில்லை. திருமணம் முடிந்தவுடன் ஆசாரிய ஸ்வாமிகளிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றார் மனைவியையும் அழைத்துக்கொண்டு.
ஆசாரிய ஸ்வாமிகள் இந்தத் தம்பதிக்கு ஆசியளித்து பிரசாதம் கொடுத்தார். அந்த இளைஞரின் மனைவியும் கணவர் கொள்கையைக் கடைப்பிடித்தாள்!
j
No comments:
Post a Comment