Tuesday, November 18, 2014

பெரியவர்கள் கேட்ட குடமிளகாய்.


‘கலவையில் பிறந்த பேரொளி’ என்ற புத்தகத்தில் இருந்து சில நினைவுகள்.

Author: கவிஞர் நெமிலி எழில்மணி 


காஞ்சிப்பெரியவாளைத் தரிசிக்க தேனம்பாக்கம் சென்றேன். நான் போகும்போது மணி பன்னிரெண்டுக்கு மேலாகிவிட்டது. நான் பலமுறை சென்றபோதும் மௌன நிலையில்தான் தரிசிக்க முடிந்தது. இன்று அதுகூட முடிகிறதோ இல்லையோ என்ற ஏக்கத்துடன் சென்ற எனக்கு பேரதிர்ச்சி---இன்ப அதிர்ச்சி ! கிணற்றுக்கு அந்தப்பக்கம் சாவகாசமாக காலை நீட்டிக்கொண்டும் மந்தகாசப் புன்னகையும் தவழ இந்தப்புறம் நின்றிருந்த பக்தர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார். பத்துமணி முதல் அப்படிப் பரவசமாக அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறார் என்றனர் அருகே இருந்தவர்கள்.

உத்திரப்பிரதேசத்து அன்பர் ஒருவர் பதினெட்டுப் புத்தகங்களை இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதினவராம். பெரியவாளிடம் அவரது புத்தகங்களை மொழிபெயர்க்க அநுமதி கேட்டுக்கொண்டார். அடேயப்பா! ஸ்ரீ பரமாச்சார்யாள் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல், இந்தியிலும், ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் அமுத மொழிகளை வாரி வழங்கினார் ! என்னென்ன தத்துவங்கள் ! எப்படிப்பட்ட விளக்கங்கள்! ‘ந’ என்ற எழுத்தும், ‘ன’ என்ற எழுத்தும் எப்படி உச்சரிக்கப் படவேண்டும் என்று நாக்கை மடித்து அவர் கூறியதை எழுத்தில் வடிக்க இயலாது.

“தெலுங்கில் வருகிற உச்சரிப்பு, தமிழில் வராது, என்னது தெரியுமா?” என்று கேட்டார். யார் கூறுவது? எதைக் கூறுவது ? அவரே புன்னகையுடன் விளக்கம் தந்தார். “இடையின ‘ர’ தெலுங்கில் சேரும்; தமிழில் சேராது. ‘குர்ரம்’ என்பார்கள் குதிரையைத் தெலுங்கில். தமிழில் ‘கர்ரம்’ என்றோ ‘மர்ரம்’ என்றோ வருமா? வராது ! வல்லின ‘ற’ தான் சேரும். ‘குற்றம்’ என்றும் ‘சுற்றம்’ என்றும் வருகிறதல்லவா?” என்றார். மிகவும் சுவையாக இருந்தது.

ஓலைச் சுவடியைப்பற்றி பேச்சு வந்தது. “ஏட்டுச்சுவடி’ என்று கூறுகிறார்களே. அந்த ‘ஏடு’ என்பதின் தாத்பர்யம் என்ன?” என்று கேட்டார். என்னென்னவோ கூறினார்கள். அவருக்கு திருப்தியில்லை. அவரே கூற ஆரம்பித்தார். “வாழை ஏடு தெரியுமா? வாழை இலையின் ஒரு பகுதியை ‘வாழை ஏடு’ என்பார்கள். சுவடி எழுதப் பயன்படும் பனை ஓலையின் ஒரு பகுதியும் ‘பனை ஏடு’ ஆகிறதல்லவா? பனை ஏட்டுச்சுவடியே, ஏட்டுச்சுவடி ஆயிற்று” என்றார். விளக்கம் கிடைத்த ஆனந்தத்தை விவரிக்க இயலாது. அப்போது மணி இரண்டாகி விட்டது.

ஒரு அன்பர் சிவராத்திரிக்கு நன்கொடை வசூல் செய்து மறுநாள் அன்னதானம் செய்ததாகப் பெரியவரிடம் கூறி ஆசி வழங்கும்படிக் கூறினார். பளிச்சென்று பெரியவாள் “ஐயோ! தப்பு ஆயிற்றே!” என்றார். எல்லோரும் திகைத்தோம். “சிவவராத்திரி மறுநாள் அமாவாசை ஆயிற்றே ! எல்லோரும் ஒரு பொழுது இருந்து, பித்ருக்களுக்காக விரதம் இருக்க வேண்டிய நேரத்தில் அன்னதானமா ?” என்றார். சிவராத்த்திருக்கு மறுநாள் அமாவாசை அன்று விரதம் இருக்க வேண்டியதையும் எடுத்துரைத்தார். இவ்வளவு நேரம் இன்பத்தில் திளைத்திருந்தை மீறி என் சிற்றறிவு ஒரு எண்ணத்தை நினைத்தது. வரக்கூடாததுதான், வந்துவிட்டது.

“நம் வீட்டு மனிதர் போல் சர்வ சாதாரணமாகப் பேசுகிறரே ! சில பெரியவர்களைப்போல் விசேஷமாக ஏதாவது செய்யக் கூடதா?” என்று நினைத்து விட்டேன்.

திடீரென்று அவர் தன்னருகே இருந்தவரிடம் , “குடமிளகாய் ஒன்று கொண்டு வாயேன்” என்றாரே பார்க்கலாம் ! எங்கே போவது குடமிளகாய்க்கு என்று ஒரு கணம் அவர் விழித்தார். ‘தேடினால் கிடைக்கும்’ என்பதுபோல் அவர் புன்னகைத்தார். என்ன ஆச்சரியம் ! வந்திருந்த அன்பர்களில் ஒருவர் தமது தட்டில் கீரைக் கொத்து ஒன்று, குடமிளகாய் ஒன்று, வாழைப்பழம், கற்கண்டு, முந்திரி வைத்திருந்தாரே பார்க்கலாம் ! என்னை யாரோ பளிச்சென்று கன்னத்தில் அறைவதுபோல் இருந்தது. எங்கேயோ இருக்கிற குடமிளகாய் பற்றி அவர் எப்படி அறிந்தார்? ‘அபசாரம்’ என்று நினைத்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டேன். என் கண்களில் நீர் வழிந்தது. அடுத்து அங்கிருந்த அனைவருக்கும் ‘குடமிளகாயை அவர் எப்படிக் கண்டார்’ என்ற சிந்தனையே குழப்பிக் கொண்டிருந்தது.

ஆக “இதுபோன்ற அற்புதங்கள் ஏதாவது செய்தால் அது ஆண்டவனை மறக்கடித்து அந்த அற்புத நிகழ்ச்சி பற்றியே நினைத்துக் கொண்டிருக்கத்தான் தோன்றும்” என்று சொல்லாமல் சொல்லுகிறாரோ காஞ்சி முனிவர்? 

No comments:

Post a Comment