Tuesday, November 18, 2014

"ஒம்பொண்ணு கல்யாணத்த நான் நடத்தி வெக்கறேன்.."

"ஒம்பொண்ணு கல்யாணத்த நான் நடத்தி வெக்கறேன்.."
(நேற்று மாலை அட்மின் சுரேஷ் போஸ்ட் பண்ணின ஆங்கில
கட்டுரையின் தமிழாக்கம்  Panchanathan Suresh
(இது டிசம்பர்-2013 குருப்பில் போஸ்டானது)
ஸதாராவில் பெரியவா முகாம். அங்கு ரயில்வேயில் பணிபுரியும் ஒரு பக்தர் பெரியவாளை தர்சனம் பண்ணிவிட்டு வேலைக்குச் செல்ல எண்ணி, ரெண்டு மணி நேரம் காத்திருந்தும் தர்சனம் கிடைக்காததால், ஒரு நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பிவிட்டார். ரெண்டு மணி நேரம் கழித்து மடத்து கார்யஸ்தர் ஒருவர் இவரைத் தேடிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்துவிட்டார்.
"என்ன விஷயம்?"
"பெரியவா ஒங்கள அழைச்சிண்டு வரச் சொன்னா.."
"பெரியவா சொன்னதை அப்டியே சொல்லுங்கோ" [மஹான்கள் வேறு யாரிடமாவது நம்மைப் பற்றி ஏதாவது சொல்லியிருந்தால், அதை நம்மிடம் வந்து சொல்பவர்கள், அப்படியே verbatim சொல்லக் கேட்டால், நேரில் தர்சிப்பதை விட, பெரிய இன்பமாக இருக்கும்]
"ஸதாரா ஸ்டேஷன்ல போய்ப் பாரு. inspection பண்ணிண்டிருப்பான், அந்த ராமஸ்வாமி. வரச்சொல்லு"ன்னு சொன்னா"
உடனே மடமடவென்று வேலையை முடித்துக் கொண்டு பெரியவா முன் போய் நின்றார்.
"பெரியவா மன்னிச்சுடுங்கோ! பெரியவா ரொம்ப பிஸியா இருந்தேள். நான் ஆபீஸ் வேலையை முடிக்காம, ஹெட்க்வார்டர்ஸ் போகமுடியாது. மேல இருக்கற ஆபீஸர் சத்தம் போடுவார்....."
அவர் சொன்னதை பெரியவா சட்டை செய்யாமல், "ஒனக்கு என்ன வேணும்?.."
"எனக்கு எதுவும் வேணாம். ஒரே ஒரு கவலைதான். எம்பொண்ணுக்கு நல்ல எடத்ல கல்யாணம் ஆகணும். அப்பா ரொம்ப வருத்தப்படறார். நெறைய எடங்களுக்கு ஜாதகம் அனுப்பறார்; ரொம்பப் பேர் பதிலே போடறதில்லே; வர்றதும் பொருந்தலே;.."
"அவ்ளோவ்தானே? செரி போ! ஒம்பொண்ணு கல்யாணத்த நான் நடத்தி வெக்கறேன்.."
"சத்யமா சொல்றேளா?.." மஹா பாமரத்தனமான கேள்வி வந்து விழுந்தது. சத்ய ஸ்வரூபத்திடமிருந்து சத்யம்தானே வரும்!
பெரியவா அழகாகப் புன்னகைத்தார். திரும்பிச் செல்ல உத்தரவு கிடைத்தது.
என்ன மாதிரி தெளிவான அபயம்! "நான் நடத்தி வெக்கறேன்" .....
ஊருக்கு சென்று ரெண்டு மாசம் கழித்து, அவருடைய அப்பா அனுப்பிய ஜாதகம் பொருந்தியிருப்பதாக பம்பாயிலிருந்து பிள்ளை வீட்டார் வந்தார்கள்; பெண் பார்த்தார்கள்; கல்யாணம் முடிந்தது. ரெண்டு வருஷம் கழித்து பெரியவாளை தர்சனம் பண்ண, பெண், மாப்பிள்ளை, பேத்தி சஹிதம் கர்னூலுக்கு சென்றார்.
பெரியவாளுடைய திருவடி கீழே குழந்தையை படுக்க வைத்துவிட்டு நமஸ்கரித்தனர். அவர்களுடைய க்ஷேமலாபங்களை விஜாரித்தார். குழந்தை அப்படியே தூங்கி விட்டாள். கொஞ்ச நேரத்தில் எல்லாருக்கும் ப்ரஸாதம் குடுத்து ஊருக்குத் திரும்ப உத்தரவு குடுத்தார். அவர்கள் திரும்பி கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்ததும், பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள்...
"இந்தக் கொழந்தைய மடத்ல வெச்சிண்டு எப்டி ஸம்ரக்ஷிக்கறது?... எடுத்துண்டு போ!.."
மூன்று பேருக்கும் ஒரே வெட்கமாகப் போய்விட்டது. பெரியவாளை ரொம்ப நாள் கழித்து தர்சனம் செய்த ஆனந்தத்தில், குழந்தையை மறந்தே போனோமே! என்று. அவருடைய பெண் ஓடிப்போய் குழந்தையை தூக்கிக் கொண்டாள். அப்போது பெரியவா பக்கத்தில் இருந்த கார்யஸ்தரிடம், "ராமஸ்வாமிக்கி த்ருப்தியான்னு கேளு" என்றார்.
எதற்கு? ராமஸ்வாமிக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இந்தக் கேள்வி? அவரிடம் பதில் இல்லை. பெரியவாளே சொன்னார்.....
"அவன் பொண்ணோட பேரென்ன கேளு"
"உமா.."
"மாப்பிளை பேரு?.."
"ஸதாசிவன்..." இன்னமும் அவருக்குப் புரியவில்லை.

பெரியவா நமுட்டாக சிரித்துக் கொண்டே "சரிதானே? என்னைக் குத்தஞ்சொல்லப்...டாது ! பேர் பொருத்தம் பாத்துதான் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கேன்!..." என்றதும்தான் ராமஸ்வாமிக்கு பொட்டில் அடித்தாற்போல் "நான் நடத்தி வெக்கறேன்" என்று பெரியவா மூன்று வருஷங்களுக்கு முன் சொன்னது ஞாபகம் வந்தது. "இப்படி ஒரு ஞாபக சக்தியா? இப்படி ஒரு அனுக்ரஹமா? ஏதோ ஸுஹ்ருதம் பண்ணியிருக்கிறோம் இப்படி ஒரு அருளை அனுபவிக்க"....ராமஸ்வாமி கண்களில் நன்றிக் கண்ணீர் வழிய மீண்டும் நமஸ்கரித்தார்

No comments:

Post a Comment