கோபுவின் டீச்சர்கள் அன்று வீட்டில் சூழ்ந்து கொண்டார்கள். தாத்தாவிற்கு அவர்கள் சமீபத்தில் 75வது வயது முடிந்ததால் ஒரு மாலை வாங்கி வந்து போட்டார்கள்.
''சார் உங்களை ஒண்ணு கேட்கப்போறேன்''.-- பத்மா டீச்சர்
''நீங்கள் ஆங்கில புத்தகங்கள் கூட நிறைய படிப்பீர்களாமே''
''நல்ல விஷயங்கள் டிம்பக்ட்டூ வில் பேசும் பாஷையில் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாமே. நமக்குத் தெரிந்த மொழியில் படிப்பதால் சந்தோஷம் கிடைக்கிறது.
கையில் என்ன புத்தகம்
ஒ இதுவா. ஜேம்ஸ் அல்லன் என்ற ஆங்கிலேய ஞானி ஒருவன் எழுதிய ஒரு புத்தகம்.
அதில் என்ன படித்தீர்கள் சொல்லுங்களேன்.
தாத்தா தொண்டையைக் கனைத்துக்கொண்டார். ஆரம்பித்தார்.
மேலை நாட்டு வேதாந்தி ஜேம்ஸ் அல்லன் படிக்காதவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அவரது ஆங்கில எழுத்தில் நான் அதிசயித்தது அதன் வலிமையோடு கூடிய தெளிவும் ஆக்ரமிக்கும் சக்தியும்.
நம்மை வசீகரிக்கும் எண்ணங்கள் அவருடையவை. . சில வாக்யங்கள் பலம் கொண்டு நம்மை தாக்க கூடியவை. சிலது எளிமையானவை, ஆனால் எல்லாமே பிரயோசனப்படுபவை. குணத்தை நல்லதாக மாற்றக்கூடியவை. (குணமே எண்ணங்களின் மொத்த வெளிப்பாடு தானே.)
மற்றவற்றின் மீதோ ,மற்றவரின் மீதோ உன் அதிகாரத்தை நீ செலுத்த முடியாது. உன்னை வேண்டுமானால் கொஞ்சம் அடக்க முயற்சி பண்ணலாம். அடுத்த ஆசாமியின் உறுதியை நீ குலைக்கவோ கலைக்கவோ வழியில்லை. ஆனால் நம் எண்ணங்களின் தாக்கத்தால் நமது உறுதியை ஒருவாறு உருவாக்கலாம். எவன் தன் எண்ணங்களின், மனத்தின் ஓட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறானோ, அவனிடம் தான் மற்றோர் தங்களது மன அமைதிக்கு வழிகேட்டு வருவார்கள்.
ஒவ்வொரு மனிதனும் அவனது எண்ணத்தின் பிரதி பலிப்பே. சந்தோஷமாக, உடல் நலத்தோடு, வசதிகளோடு உலகில் வாழ்வது எல்லாமே ஒருவன் எப்படி தன்னை அண்டை அசல்களோடு உள்ளும் புறமும் ஒத்துப்போக வைத்துக்கொள்கிறான், அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்கிறான் என்பதைப் பொறுத்துதான் அமைகிறது. -- இதையே தான் கீதையிலும் கண்ணன் சொல்கிறான்.
உன்னுடைய மனம் என்னும் தோட்டத்தில் நல்ல எண்ணங்கள், சிந்தனைகள் என்கிற செடி கொடிகள் வளரச்செய்ய நீ தான் தோட்டக்காரன். மனத் தோட்டத்தை சீர் படுத்தாமல் விட்டு விட்டால் அதில் கெட்ட எண்ணங்கள், தீய சதிகள் என்கிற முள்ளும் காட்டுசெடியும் தான் மண்டும். நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் தான் நல்ல செயலை அளிக்கின்றன.
வாழ்க்கையில் நமக்கு என்று ஒரு லட்சியம் எற்படுத்திக் கொள்வோமே . அதற்கு உழைப்போமே. வெற்றி நம்மைத் தானே தேடி வரும். நமது எண்ணத்தின் பலத்தில் இருக்கிறது விளைவு. சந்தர்ப்பங்கள் மனிதனை உண்டாக்குவதில்லை. அவனை யார் என்று காட்டிக்கொடுக்கின்றவை தான் அவை. நீ என்ன கனவு கண்டாயோ அதை நினைவாக்கு. உன்னால் முடியும் தம்பி. நாம் சிந்தும் வியர்வை முத்துக்கள் பின்னால் நமது சொத்துக்கள். இன்றே இப்போதே உழை. நாளை என்று தள்ளிப்போடாதே. நாள் தள்ளிப்போய்விடும். எக்ஸ்பயரி டேட் ஆகிவிட்டால் தூக்கிப்போட தான் வேண்டும் நமது முயற்சிகள் தான் நம்மை உயர்த்துபவை, தாழ்த்துபவை ரெண்டுமே.
எதற்கும் எவருக்கும் நன்றி சொல்ல தயங்காதே. அதில் தான் உனது வெற்றியின் ரகசியம் அழுந்தி இருக்கிறது.
சிறிய சிறிய காரியங்களைச் செய்யும்போது தான் நீ யார், உன் பலம் என்ன என்று உண்மை வெளிப்படும். ஒரு சிறிய ஆலம் விதையில் ஒரு பெரிய மரமே ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒரு முட்டைக்குள் தான் மஹா பெரிய ராக்ஷச ஆமையே வாழ்கிறது.
த்யானம் செய்ய பழகு. உன் மனத்தை எளிமைப்படுத்தும். அமைதிப்படுத்தும். பழகப் பழக மேன்மேலும் ஆன்ம ஒளி வீச செய்யும். அகத்தின் அழகு முகத்தில் பிரகாசிக்கும். ஞானத்தின் வெளிப்பாடே அமைதி தான். அந்த அமைதி த்யானத்தின் பரிசு. சந்தேகங்களையும் பயத்தையும் எவன் வென்றவனோ அவனே தோல்விகளை எல்லாம் வென்றவன்.
தாத்தா நீ எங்க டீச்சர் கேட்டதற்கு ஒரு சொற்பொழிவே நிகழ்த்தி விட்டாய். பலே. ரொம்ப பிரமாதம்
No comments:
Post a Comment