Tuesday, October 7, 2014

என் முன்னோர்கள் கஷ்ட ஜீவனம்


முன்பே  ஒரு  முறை    என் முன்னோர்களில்  ஒருவரான  ரெட்டைப்பல்லவி  தோடி  சீதாராம  பாகவதர் பற்றி  விவரித்திருக்கிறேன். 
அவரை மீண்டும்  இன்று  காணலாம்.

இதற்கிடையே,  ரெண்டு மாத  கால  பயணத்துக்குப்  பிறகு,  மூட்டை  முடிச்சுகளோடு,  கர்ப்பவதி  மனைவி  லக்ஷ்மி அம்மாளோடு   கனம்  வித்வான்  கணபதி சாஸ்த்ரி  மணலியிலிருந்து  தஞ்சாவூர் வந்து சேர்ந்தார்  அல்லவா?   அனைத்து  உறவினர்களும் ஆவலோடு  அவர்களை வரவேற்றனர்.  சென்னப்பட்டினம் பற்றிய  விஷயங்களை  ஆவலோடு  கேட்டனர்.  தஞ்சாவூரிலிருந்து  ஒருவர்  சென்னபட்டினம் போய்  வருவது இப்போது  அமெரிக்க பிரயாணம்   போன்றது அக்காலத்தில்.  கணபதி சாஸ்திரிகள்  ராமாயண  பிரசங்கம்  செய்து  பெற்ற  பரிசுகளைக் கண்டு  ஆச்சர்யப்பட்டனர்.   பாவம்  கணபதி சாஸ்திரிகளுக்கு  மட்டும்  பெரிய  தொகையான  1500ரூபாய்  நஷ்டமடைந்தது  மகா  துக்கத்தை  அளித்தது. ஏக்கம்  அதிகமாக  இருந்தது.  அதை நினைத்து  உடல்  துர்ப்பலமானது. 

 ஒரே  சந்தோஷம்   ஸ்ரீ  ராமர்  கிருபையால்  ஒரு  புத்திர  ஜனனம் ஏற்பட்டு  கொஞ்சம்  கவலையை  மறக்கலானார்.   இந்த புத்திரன்  தான்  நமது  வம்சத்தை  வளர்ப்பவன்.  மிக்க  அழகுடன்  விளங்குகிறான்.  இவன்  நமக்கு  ஸ்ரீ  ராமன்  கொடுத்த  பிரசாதம்.   நமது குலம்  இவனால் மிகப்பெருமை  பெறப்போகிறது  என்று  மகிழ்ந்தார்.  ஜோசியர்களையும்  கண்டு  ஆலோசித்தார். அவனுக்கு  சீதாராமன்  என்று  பெயர் சூட்டினார்.  சீதாராமனின்   நான்கு வயது  காலத்தில்   கணபதி  சாஸ்திரிகள்  சிவலோக ப்ராப்தி அடைந்தார்.  அவருக்கு  அப்போது  54  வயது. 

 வயதான சாஸ்திரிகளின்  தாயார்   தாயம்மாவும்,   மனைவி  லக்ஷ்மியம்மாளும்   எப்படியோ  கஷ்டப்பட்டு  குழந்தை  சீதாராமனை  வளர்த்தார்கள்.   புருஷ சகாயம்  அற்ற  அந்த நிர்கதியான  குடும்பம்  ஆதாரம்  ஒன்றுமில்லாமல்  தவித்தது. ஊராரும்  பந்துக்களும்  அவர்களுக்கு  கொஞ்சம்  உதவினார்கள். இதைத்தவிர  குதிரை  வைத்யநாத  அய்யர் சஹதர்மிணி வயதான  கிழவி  வேறு.  மூன்று   விதவைகள் அந்த வீட்டில்   என்ன  செய்ய முடியும்.

சீதாராமனுக்கு   ஆறு  வயதாகி விட்டது. அவர்கள்  ஜீவனம்  ஒவ்வொரு  நகையாக  விற்று  வரும்  பணத்தில்  நடந்து வந்தது.  நகைகள்  எல்லாம்  மறைந்து விட்டதால்   சென்னப்பட்டினத்தில்  சின்னையா  முதலியார்  கொடுத்த   முத்து  ஹாரத்தின் மீது  கை  சென்றது. . 

அந்த  காலத்தில்  இப்போது  போல்  பாங்குகள்,  லாக்கர்கள்,  இரும்பு  பீரோக்கள்,  மர  பெட்டிகள், தோல்  பைகள்  ட்ரங்கு  பெட்டிகள்  ஒன்றும்  கிடையாது.  ஒவ்வொரு வீட்டிலும்  முட்டு முடிச்சு பானை  என்று  ஒன்று ஒரு  சிட்டு  சட்டி இருக்கும்.  இது  தான்   சேப்டி   லாக்கர்.    அதை  கண்ணில்  படாமல்  எங்காவது  ஒளித்து  வைத்திருப்பார்கள்.   வீட்டில்  நெல் குதிர்,   கட்டுப்பெட்டியும்  (பூட்டுபோட்டது) இருக்கும். அதில்  ஜாக்ரதையாக இந்த  முட்டு  முடிச்சு  பானையை  வைத்திருப்பார்கள்.  தலை முறை  தலைமுறையாக  வரும்   அந்த வெகுநாளைய  சாமான்கள்  சில   ஓட்டையும்  ஓடிசலுமாக  இருந்தது.  அவற்றை  மெழுகு  லப்பம்   துணி  இவற்றால்   அடைத்து உபயோகித்தார்கள்.   எது  விலை உயர்ந்ததோ அந்த புடவைகள்,  வேஷ்டிகள், வெள்ளி  தங்க  சாமான்கள்  இதில் தான்  வைத்திருப்பார்கள்.  பொற்காசுகளையும்,   நகைகளையும்   துணி  மூட்டை  கட்டி   இந்த  முடிச்சுகளை  ஒரு  சிறு பானையில்  போட்டு  அதை  இந்த  பெரிய  பெட்டிகளில்,  குதிர்களில்  அடியில்  கண் படாதவாறு  துணிகளுக்கு இடையே செருகி  வைப்பார்கள்.  இந்த  சிறு பானைகளுக்கு  தான்  முட்டு  முடிச்சு  பானைகள்  என்று  பெயர்.   அடிக்கடி  புழங்காததால் சில  பெட்டிகள்  பானைகளில்   தேள்  குடும்பம்  வசிக்கும்.  கவனிக்கவில்லை  என்றால்  கொட்டி விடும்.  

எனக்கென்னவோ  சிலர்  வீடுகளில் இன்றும்  இத்தகைய  பழைய  கட்டுபெட்டிகளோ,  முட்டு முடிச்சு  பானைகளோ  எங்காவது  ஒரு மூலையில்    இருக்கலாமோ  என்று ஒரு நப்பாசை.    இருந்தால்  யாராவது  அவற்றை  படம்  பிடித்து  போடலாமே.  இக்காலத்தவர்  தெரிந்து கொள்ளவேண்டாமா.?  

முத்து  ஹாரம்  விற்க வேண்டி வந்தது  அல்லவா?  அதை  எப்படி  எடுத்துக்கொண்டு போவது? யாரிடமாவது  காட்டினால் அபகரித்து கொண்டு போய்  விட்டால்?   முட்டு முடிச்சு  பானையோடு கொண்டு போனால்?  செட்டியார்  நம்மை  ஏமாற்றி விட்டால்?  அதன்  விலை  என்ன  என்று  கூட  தெரியாதே?  எதிர்  வீடு  கோவிந்தன் ,  அதுத்த வீடு ராசு, சாம்பமுத்து,  எல்லோரையும்  கன்சல்ட்  பண்ணினார்கள். அவர்கள்  முத்து  ஹாரத்தை பார்த்து விட்டு பயந்தார்கள்.  

''இதெல்லாம்   ராஜாக்கள்  போட்டுக்கிற  நகை யாச்சே.   இதை கடைக்கு  கொண்டு  போனால்  செட்டியார்  எதுரா உனக்கு  இது  என்று கேட்பாரே?''   நான்  இதை  உங்களுதுன்னு  சொன்னா  கூட்டிண்டு  வா  என்பான்.   நீங்க யாருமே   வாசப்படி  தாண்டி  வெளியே  வரமாட்டீளே ''

மூன்று  பெண்களும்  மண்டையை  உடைத்துக்கொண்டார்கள்.  ராசு  சொல்றது என்னவோ  வாஸ்தவம்  தானே.  என்ன  பண்ணலாம்? 
கடைசியாக  ஒரு முடிவெடுத்தார்கள்.   பாக்கு  வெட்டியால்  முத்து  ஹாரத்தை  வடம்  வடமாக அறுத்தார்கள்.   துண்டு  துண்டாய்   4  விரல்கடை  நீளம் நறுக்கி அதை  ஒரு  துணியில் முடிந்து  வைத்தார்கள். 

மழை நாளில்  வற்றல்  வடாம் காயம் வைப்பது போல்  இந்த  துண்டு  நகைகளை முறத்தில்  துணி மூட்டிலிருந்து அவிழ்த்து கொட்டி உலர்த்தி  எடுத்து  துடைத்து  வைப்பார்கள்.   எண்ணத்தெரியாது . எத்தனை  முத்துகள், துண்டுகள் என்று  கணக்கு  தெரியாது. பாவம்  அக்காலத்தில் இத்தகைய  பெண்கள் எத்தனையோ  பேருக்கு  கணக்கு படிப்பு எல்லாம்  கிடையாது.  கொஞ்சம் கணக்கு  தெரிந்தவர்கள்  நூற்றில்  ஒருவரோ  இருவரோ தான். 

No comments:

Post a Comment