Sunday, August 17, 2014

குறையை தெய்வத்துகிட்ட சொல்லு

   
தெய்வத்தை  உபாசித்து  பூஜை   செய்கிறோமே அந்த   தெய்வத்தோடு  நாம்  பேசமுடியுமா என்றால்  முடியும்.  நாம்  தெய்வத்திடம்  நமது  குறையெல்லாம்  முறையிடுகிறோமே.   நிறைவை  ஓடிப்போய்  சந்தோஷமாக சொல்கிறோமா?  சிலர்  சொல்கிறார்கள்  என்பது   எனக்கு தெரியும்.  அது ஒருபுறம்  இருக்கட்டும்.  அந்த  தெய்வம்  நம்மோடு  எப்போதாவது  பேசியிருக்கிறதா?  பேசுமா?  இல்லை என்று  சொல்பவர்களே.  நன்றாக்  கேளுங்கள்  தெய்வம்  உங்களோடு  பேசும்.  இது  ஏதோ  நான்  சொல்கிறேன்  என்று  எடுத்துக்கொள்ளவேண்டாம்.  மஹா  பெரியவா  ஆணித்தரமா  சொல்கிறார்கள்.

'' அந்த  உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?
பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !

சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை  என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில்  சிமிழியின்  பிள்ளை  பெரியவாளிடம் வந்தார்.

அப்போது  பெரியவா கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். .

''தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா''

''என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?''

''மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு''

''அதுக்கு நா என்ன பண்ணறதுன்னு  சொல்லு ?''

''மனஸ் ஈடுபட பெரியவா  தான்  ஒரு வழி காட்டணும்''

'' நீ என்ன படிச்சிருக்கே?''
தான்  படித்ததை  சிமிழியின்  பிள்ளை   சொன்னார்.

''இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது''

''என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவா கிட்ட வந்தேன்''

''என்னை என்ன செய்ய சொல்றே?

''மனஸ் சாந்தி அடைய பெரியவா  அனுக்ரகம்  பண்ணணும் ''

''நீ என்ன பூஜை பண்றே?''

''அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்''

''ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?''

''ஆமாம்''

''அப்போ  நீ  உன்னுடைய இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம், விக்ரஹம், யந்த்ரம் னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவகிட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?''

மிகவும் சூடாக பதில் வந்ததும், சிமிழி பிள்ளை , அம்பாள்  உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்..

''ரொம்ப கோவிச்சுண்டுட்டேனா?    நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனைன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியேங்கறதாலதான்.   கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ  யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?   .நம்பிக்கைதான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே க்ஷேமமா இரு!  என்று அபயஹஸ்தம் கொடுத்தா பெரியவா ! 

சிமிழி பிள்ளைக்கு  அப்புறம்  குறை  இருக்க  ஞாயம் இருந்திருக்காது  என்று  எனக்கு  தோன்றுகிறது.  உங்கள்  அபிப்ராயம் எப்படி?  

No comments:

Post a Comment