Saturday, August 16, 2014

இட்லி தினுசு .......


இட்லின்னாலே எல்லோருக்கும் ரொம்ப ஈசியான டிபன்னு நெனப்பு ஆனால் அதை பொருத்தமா கரக்ட் காம்பினேசன்ல அரிசி, உளுந்து போட்டு அரைக்கணும், உப்பு கணக்கா போடணும், புளிக்காம இட்லி செய்யனும்னு இதுலே எவ்ளோ விஷயம் இருக்குன்னு நெறைய பேருக்கு தெரிந்திருக்காது.


'என்ன ஒரு இட்லி சுடமுடியாதுன்களா ஒங்களாலேன்னு' ஆஸ்பிடல் நர்சம்மா கேப்பாங்க , வீட்டுல புருஷன் கேப்பான், கல்யாணம் கார்த்தின்னா நாஸ்தால கண்டிப்பா ஒரு இட்லி சட்னி சாம்பார் இருக்கும் அதுக்குக் கூடவே வடையும் வந்திடும்.

இதுல இப்போ தமிழ்நாட்டுல கிடைக்கற ஒரு ரூபா அம்மா இட்லி ரொம்ப  பிரசித்தம். நல்ல சக்கை போடு போடறது இந்த இட்லி.

யாருக்காவது ஒடம்புன்னா உடனே மனசுக்கு வரது இட்லி தான் இது ஒரு harmless  உணவு, ஜீரணத்துக்கு ஜீரணம், லைட்டா இருக்கும், எப்டியாவது எல்லா  வீட்டிலேயும்  கிடைக்கும். 

இட்லியை வர்ணிக்கணும்னா மதுரைப்பக்கம் மல்லிப்பூ இட்லி, பூ மாதிரி வெள்ளை வேளேர்ன்னு மெத்துன்னு இருக்கும். 

சென்னைல குஷ்பு இட்லி, ( எந்த நடிகன் நடிகைக்குமே கிடைக்காத ஒண்ணு  நடிகை குஷ்புக்கு கெடச்சிருக்கு அது ஒண்ணு இட்லி க்கு அவ பேரு, ரெண்டாவது கோவில் அவளுக்கு கட்டியிருக்காங்க). இது நல்ல குண்டா இருக்கும் அவளைப் போலவே.

காஞ்சிபுரம் இட்லின்னு ஒரு வகை .


இட்லிஎல்லாரும் ஒரே மாதிரி அரைத்தாலும், வார்க்கும் விதமும் அதை பரிமாறும் விதமும் வேறே வேறே.

என் வீட்டில் என் கணவருக்கு மிகப் பெரிதாக ஹோட்டலில் கொடுப்பதைப் போல வேண்டும், பிள்ளைக்கு அதை விட கொஞ்சம் சிறியதாக, மாட்டுப் பொண்ணுக்கு அதையும் விட சின்னதாக, பேத்திக்கு பட்டன் இட்லியை விட கொஞ்சம் பெரிசாக. போறுமா என் தலைவலிக்கு? இதில் கொஞ்சம் சைஸ் கூடியோ, கொரஞ்சொ இருந்தால் அது ராத்திரி வரை என்னை முழிச்சுப் பார்க்கும்! இல்லன்னா சமையல் காரிக்கிட்ட சொல்லி அடுத்த நாள் இட்லி உப்புமா, எப்படி என் சாமர்த்தியம்?


இதுல கணவருக்கு ராகி இட்லி என்றால் அதில் வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கி, கொஞ்சம்  தோசை மிளகாய்ப் பொடிப் போட்டு உப்பு சேர்த்து வாக்கணும் , 

ரவா இட்லியாக இருந்தால் அதில் கொஞ்சம் பொடிப் பொடியாக நறுக்கி, தக்காளியை பில்லை  பில்லையாக நறுக்கி கொத்தமல்லியய்ப் பொடிபொடியாக நறுக்கி, அதை முதலில் இட்லித் தட்டில் வைத்து பிறகு ரவா இட்லியை வார்க்கணும்.

தொட்டுக் கொள்ள கலர்புல் சட்னி வேண்டும், தக்காளி, வெங்காயம் பூண்டு இஞ்சி,பச்சை மிளகாய் வைத்து அரைத்த சட்னி, தேங்காய் சட்னி, தோசை மிளகாய்ப் பொடி, உருகின நெய், நல்லெண்ணெய் .... வகையறா,


சட்னிக் கூட VIP சட்னி அது என்னன்னா கெட்டி சட்னி, நல்ல திக்கா ரொம்பக் கம்மியா தண்ணி வுட்டு அரைக்கறது, சில ஹோட்டல்ல கொடுக்கற இந்தகெட்டி சட்னிக்காகவே சிலர் ஹோட்டல்ல சாப்பிடுவார்கள்.

  வீட்டுக்கு வர விருந்தாளிகளைக் கேட்டாலே சொல்வார்கள், ''ஓ , அந்த வீட்டுலேயா ? அவங்க கெட்டி சட்னிக்காகவே அவங்க வீட்டுக்கு போகலாம்' னு சொல்வாங்க. .......

அது என்ன ஆகும்னா கொஞ்சம் கொஞ்சமா டிமாண்ட் ஜாஸ்தியாக ஆக, மொதல்ல கொஞ்சம் தயிர் கலக்குவார்கள், பிறகு கொஞ்சம் மட்டாக தண்ணீர், பிறகு மோர் பிறகு கேட்கவே வேணாம், உங்களுக்கேத் தெரிந்திருக்கும் என்ன நிலைக்கு வந்திருக்குன்னு. 

பிள்ளைக்கு எது இருக்கோ இல்லையோ, சூடாக சாம்பார் வேண்டும், தலையைப் பார்த்து சுட பண்ணினால் பிடிக்காது, சரி முன்னாடியே சுடப் பண்ணி இட்லி வார்த்து வைத்தால், சில சமயம் 'டைம் இல்லை 'என்று சாப்பிடாமலே போய் விடுவான்.தோசையை விரும்பி சாப்பிடமாட்டான்.

சரி இப்போ ஒரு சில வீட்டில் எப்படி இட்லி செய்வார்கள் என்று பார்ப்போம். 

நிறைய பேர் வந்தவர்களுக்கு வயிறார போடணும்னு, மெனக்கெட்டுக்  கொண்டு, தினுசு தினுசாக சட்னி, சாம்பார், மிளகாப் பொடி ன்னு சதிர் கட்டி அடிக்க விடுவார்கள், அவர்களுக்கு விருந்தாளிகளைக் கண்டாலே பரவசம் ஆகி விடுவார்கள்.

இட்லி நல்லா பூவா மெத்துன்னு இருக்கும் சாப்பிட்டதே தெரியாது, ஒரு இன்ப மா இருக்கும். இட்லியை வேறு நல்லெண்ணெய் விட்டே கூட சாப்பிடலாம், 
அவ்ளோ டேஸ்டியா இருக்கும். தோசையும் முழுசா இருக்கும், துண்டும் பிண்டமுமா இருக்காது, சிலர் அந்த தோசக் கல்லுடன் மல்லுக்கு நிக்கறதே  பெரிய வேதனையா இருக்கும். அவா படர கஷ்டத்தப் பாத்து ' 'போறும்மா தோசையும் வேணாம் ஓசையும் வேணாம் னு சொல்லத் தோணும்!''

சில வீட்டில் இருக்கும் தலையை எண்ணி கணக்குப் பார்த்து, ஆளுக்கு ரெண்டு என்று... ''இதில், ரெண்டுக்கு மேல மனுஷன் சாப்பிடுவானா''? அப்டின்னு சொல்லிண்டே இட்லி வார்த்தால் நப்பாசைக்கு கொஞ்சம் அதிகம் . 
சாப்பிடலாமேன்னு இருந்த ஆசையும் நெருப்புக் கோழி மாதிரி பூமியில
 பொதைச்சுக்கவேண்டியது தான்...இதுல என்ன வேடிக்கைன்னா, பெத்த பிள்ளைக்கு வார்க்கவே மூக்கால் அழுவார்கள்,  ''' அவன் பாட்டூக்கு பத்து பதினைந்து சாப்பிடுவான் யாரால முடியும்னு மொனகல் "' வேறு! 

சில வீட்டுலக் கேட்கக் கூட மாட்டார்கள்  taken for granted , அவர்களே கணக்குப் போட்டு செய்து விடுவார்கள். 

ஒரு சிலர் அந்த  இட்லி எடுக்கறதைப் பாக்கணுமே, அது  தட்டு பாதி -ஸ்பூன் பாதின்னு அரைகொறையாவே எடுத்து அது இட்லி தானா இல்ல சதுர்த்தி சந்திரனான்னு சர்ச்சை கிளப்பும், அதுவும் கையாலேயே ஒரு சிலர் எடுப்பார்கள், 

சில வீட்டிலே அந்த இட்லி தட்டே குட்டியா இருக்கும்.அடுத்த ஓடு வார்கரப்போ, மொதல்ல வார்த்ததை நன்றாக சுராண்டி திரும்ப எண்ணை தடவி வார்க்க மாட்டார்கள் .

சிலர் எக்களிட்டுண்டு வந்தாமாதிரி இட்லி வார்த்துபோடுவார்கள்.

இப்ப தெரிஞ்சுதா, நீங்க எந்த ரகங்க ?

1 comment:

  1. இப்பவே மாவு அரைச்சு புளிக்க வெச்சு நாளைக்கு இட்லி for breakfast செய்யணும் போல ஆசை ஆசையாய் இருக்கு உன் போஸ்ட்டை படித்தவுடன்.
    இட்லி பூப்போல வரணும் என்றால் அதுல பல சமாச்சாரங்கள் இருக்கு இல்லையா..? ஒரு சில பேர் சொல்வார்கள் உளுந்து முழு உளுந்தாக தோலோடு நனைக்கணும். ஆனா அறைக்கறதுக்கு முன்னாடி களையறப்போ நெறைய தண்ணி செலவு ஆகும்- அந்த கருப்பு தோலை எல்லாம் drain செய்ய. அதனால் முழு உளுந்துக்கு bye சொல்லி ரொம்ப நாளாச்சு..அப்புறம் அரிசி உளுந்து ரெண்டையும் தனி தனியாக அரைச்சு சேர்த்து கலக்கி புளிக்க விடணும். அதுல என் கைக்கு பொங்கவே பொங்காது. ஆனால் என் மாமியார் கைக்கு அப்படியே பொங்கி, எவ்ளோ பெரிய பாத்திரம் ஆனாலும் பொங்கி வழியும். அதனால் என்றும் என் மாமியார் கை இட்லிக்கே என் வோட்டு.

    After reading through your post I remembered an anecdote from நா பார்த்தசாரதி யின் 'சத்திய வெள்ளம்'. அதில் தமிழ் முது நிலை மாணவரகளுக்கு விளையாட்டாக ஒரு போட்டி வைப்பார்கள்- 'இட்லிக்கு உண்டோ இணை' என்று முடியும் வெண்பா இயற்ற வேண்டும் என. இரண்டு மாணவர்கள் உடனே இயற்றி பரிசை (ரூபாய் 10) வெல்வார்கள். இதோ அந்த வெண்பாக்கள்:

    "மங்காப் புகழ் படைத்த மல்லிகைப் பந்தலினிற்
    சங்கர்பவன்தரும் சாம்பாரும்-வெங்காயச்
    சட்டினியும் இங்கிருக்க ஏழுலகில் தேடிடினும்
    இட்லிக்க் குண்டோ இணை"

    "வட்ட நிலாப்போல் வாகான இட்டிலியும்
    தொட்டுக்கொள் தொட்டுக்கொள் என்றழைக்கும்-இட்டமுள்ள
    சட்டினியும் சேர்ந்திருக்கும் இந்நிலையில் இவ்வுலகில்
    இட்டிலிக் குண்டோ இணை"

    அறுசுவை விருந்தே என்றாலும் அது நம்ம இட்லி சட்னி போல வருமா..?

    ReplyDelete