Tuesday, August 19, 2014

தடுத்தாட்கொண்ட புராணம்-------பகுதி 8----நிறைவுப் பகுதி.


ரா.கணபதி. 

கதை 108 பாகையும் திரும்பி விட்டதாக அந்த நான்கு நாட்களில் தோன்றினாலும் அப்புறம் அந்தத் தீவிரம் சிறுகச் சிறுகக் குறையத்தான் செய்தது. கர்ம கதியை க்ருபா கதி ஒரே வீச்சில் நசிப்பித்து விடுவதில்லையே ! ஆனால் க்ருபா வீச்சு என்று ஒன்று பரம உன்னதமாக இருப்பது தெரிந்தே விட்டது ! க்ருபா சக்தி என்பது மெய்யிலும் மெய்யாக நம் ஸ்ரீசரணர்கள் என்ற ரூபத்தில் தாற்காலிகமாகவேனும் ‘காட்டாதனவெல்லாம் காட்டி’, அப்படிக் காட்டியதாலேயே கண்டதை நிரந்தரமாக ஸித்தியாக்கிக் கொள்ளவேண்டும் என்ற விழைவுக்கு வித்திட்டு விட்டது. விழைவை விளைவாக்கிக் கொள்வதற்கு ஸாதனை முறையையும் காட்டிக் கொடுத்து, கூடவே துணை நின்று தூண்டிக் கொடுத்து, அவ்வப்போது தன்னுடைய அதிசய வீச்சையும் காட்டி, மற்றப் போதுகளிலும் கூட இவன் பாஸ் மார்க்குக்குக் கீழே விழாமல் ரக்ஷித்து வருகிறது. இதில் ‘ஸ்வய’ ஸாதனை என்பது ‘உள உளாக்கட்டை’ க்குத்தான். ஸாதிப்பது அவருடைய, அல்லது அவருடைய, அல்லது, அவராகிய க்ருபா சக்திதான் ! அதனால்தான் துணிவாகப் பாஸ் மார்க் போட்டுக் கொண்டது ! “யௌவனத்தின் அகராதியில் ‘ஃபெயில்’ என்ற வார்த்தை கிடையாது.” என்று ஓர் ஆங்கிலக்கவி சொன்னான். க்ருபையின் அகராதியில் கிடையவே கிடையாது ! 

‘தடுத்தாட்கொண்ட புராணம்’ என்று தலைப்பிட்டிருக்கிறேன். ஆயினும் அவ்வாறு ஒரேடியாக ஆட்கொள்ளப்பட்டவனின் சரணாகதப் பாங்குக்கு எட்டவே நின்று வந்திருக்கிறேன். அப்படியும் அவர் க்ருபை புரிந்து கொண்டே வந்திருப்பதில்தான் அவரது அருமை மேலும் ஓங்கித் தெரிகிறது ! ‘இத்தனை செய்தவர் இனியும் செய்யவேண்டியதைச் செய்யாது விடமாட்டார். சுதந்திர யுகத்தின் அசல் பிரதிநிதியாயிருந்த விறைப்பு வீராப்புக்காரனுக்கு பணியும் கட்டுப்பாடுமின்றி நிஜ சுதந்திரமான ஆத்ம சுதந்திரத்திற்கு வழியில்லை என்று உணர்வித்த அந்த விநயவிக்ரஹர் மனத்தின் முனைப்பே அற்றுப்போன சரணாகதப் பாங்கையும் புரிவிப்பார்,’ என்று நம்புகிறேன். ‘ஏண்டா வந்து தொலைத்தோம் ?’ என்று முதல் நாள் மாலை எண்ணியவனை மறுநாட்காலையே ‘எங்கேடா அந்த மனப்பான்மையைத் தொலைத்தோம் ?’ என்று தேட வைத்தவராயிற்றே ! அவரால் மனத்தையே தொலைக்கச் செய்து அதற்கு அதீதமான ஆத்மாவில் சாச்வதாமாகச் சேர்ப்பிக்க மட்டும் முடியாதா, என்ன?

நடக்கப் போவதைப் பற்றி இப்போது என்ன ? நடத்துபவர் அவர் என்னும்போது அதைப்பற்றி என்ன சிந்தனை ? இப்போதைக்கு, இதுவரை நடத்திக் கொடுத்திருக்கிறாரே, தகுதி பாராமல் வாரிக் கொடுத்திருக்கிறாரே, அதற்கு நன்றி, நன்றி, நன்றி. சரணாகதி செய்யாத போதும் அரணாகக் காக்கும் அந்த ஸ்ரீசரணர்களின் சீரார் சரணங்களில் நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

சரணம் பவித்ரம் விததம் புராணம்
யேந பூதஸ்தரதி துஷ்க்ருதானி |
தேந பவித்ரேண சுத்தேன பூதா
அதிபாப்மானம் அராதிம் தரேம ||

“பவித்ரமான சரணம். எங்கும் பரவியது. எதற்கும் முந்தையது. அதனால் ஜீவன் தூயோனாகித் தீவினை கடக்கிறான். அதற்கு பவித்ரமான, பரிசுத்தமான சரணத்தால் புனிதராகிப் பாபத்தையும் பகையையும் கடப்போமாக.”

சுபம்.


No comments:

Post a Comment