Wednesday, August 13, 2014

தடுத்தாட்கொண்ட புராணம்.பகுதி3.

ரா.கணபதி.


முகாம் கட்டிடத்துள் பார்த்தபோது எங்களுக்கு முன்னதாகச் சென்றவர்கள் முற்றத்தில் நமஸ்கரிப்பது தெரிந்தது. இந்த ஸாஷ்டாங்க நமஸ்கார ஸமாசாரம் அன்றைய ஸ்வதந்திர விறைப்பு குணத்திற்கு அடியோடு ஏற்காத ஒன்றாக இருந்தது ! இப்பேர்ப்பட்ட விறைப்பு வீரனுக்கு தனக்கு இஷ்டமில்லாத ஒருவர் முன் அப்படி விழத்தான் வேண்டுமென்பது சொல்லி முடியாத மானபங்க உணர்ச்சியை ஏற்படுத்தியது. ‘யாரோ கிழவர் நம்மைச் சிறுமைப் படுத்துகிறாரே !’ என்பதில் அந்த ஒருவர் மீது இதுவரை பொதுவாக இருந்த மாற்று மனப்பான்மை சொந்த ஹோதாவில் --- ஹோதா சரிவதில் --- ஓங்கி வளர்ந்தது !

ஆக, பக்தி ச்ரத்தைகளை ஸமூலம் துடைத்துப் போட்ட மனநிலையிலாக்கும் ஸ்ரீ சரணர்களின் முதற்காட்சி பெற உள்ளே நுழைந்தேன் !

முற்றத்தை அடுத்த கூடத்தில், வெளிச்சம் போதாத ஒரு மூலையில் அவர் அமர்ந்திருந்தார், விபூதி, ருத்ராக்ஷம் எதுவுமின்றி, ஒரு சாயம் போன காவித் துணி ‘பேருக்கு’ அவர் மேல் தொற்றிக் கொண்டிருக்க அமர்ந்திருந்தார். மங்கல்தான் எனக்குத் தெரிந்தது. மங்கள மூலம் என்ற விழிப்பு ஏற்படவில்லை. நீறு பூத்த நெருப்பு என்று காணாமல் வெறும் நீற்றை மட்டுமே --- திருநீறாகத் தெரியாத வெறும் சாம்பலையே கண்டேன். ஆம். அந்த உருவம் இந்த விறைப்பு---வீராப்புக்காரனை கொஞ்சங் கூட ‘இம்ப்ரெஸ்’ செய்யவில்லை ! அவர் எப்படித் தெரிந்தாரென்றால்……

இதுவரை எழுதி வந்திருப்பதைப் படிக்கும்போதே பக்த கோடிகளில் சிலருக்கு என்னை அடித்தாலென்ன என்று தோன்றியிருக்கலாம். அடுத்து எழுதியிருப்பதைக் குறித்தோ இன்றைய எனக்கே அன்றைய என்னை ஒரு போடு போட்டாலென்ன என்று தோன்றுகிறது.

அன்று அவர் எப்படித் தெரிந்தாரென்றால், கோவில் வாசலில் கப்பரையை வைத்துக் கொண்டு ஆண்டிப்பட்டாளம் உட்கார்ந்திருக்குமே, அதிலிருந்து பிரித்துச் சொல்லமுடியாத ஓர் அநாமதேயமாகத்தான் !

பொதுவாக உருவத்தைப் பார்த்தபின் முகத்தைப் பார்த்தேன்.

அவரும் பார்த்தார்.

‘குறு குறு’ என்றிருந்தது.

கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.

என்ன வெட்கம் ? அந்த ஒரு பார்வையே மின்வெட்டாக உள்ளே புகுந்து என்னுடைய விறைப்பு -- வீராப்பு மனப்பான்மைக்காக என்னை வெட்க வைத்து விட்டதா என்ன ? இல்லை, இல்லை ! அப்படியெல்லாம் அசாதாரணமாக ஒன்றும் நடந்து விடவில்லை ! ஆனாலும் அவர் பார்ப்பதில் வெட்கம் ஏற்படவே செய்தது. வெற்றுடம்பைப் பார்க்கிறாரே என்பதாலா ? சொல்லத் தெரியவில்லை.

எங்களுக்கு ‘ஜஸ்ட்’ முன்னால் உள்ளே சென்ற ஒரு முக்காட்டுப் பாட்டி பாத்திரத்தில் கொண்டு வந்திருந்த சீடை, முறுக்குகளை ஒரு பிரப்பந்தமுக்கில் காலி பண்ணி, தமுக்கை ஸ்ரீ சரணர்களுக்கு முன் அதிவிநயமாகக் கூனிக் குறுகிக்கொண்டு ஸமர்ப்பித்து விட்டு முற்றத்தில் நமஸ்கரித்தாள்.

கல்லு கல்லாகத் தெரிந்த அந்தச் சீடை, முறுக்குகளைப் பார்க்கவே சிரிப்பு வந்தது. அதோடு பரிதாபமாகவுமிருந்தது. ‘பெரியவா, பெரியவா என்று இந்த மாதிரி அசட்டுப் பாட்டிகள் ஏதோ பெரிதாக நினைத்துக்கொண்டு, தங்கள் இல்லாமையிலும் பக்ஷணம், பணியாரம் என்று அடுப்படியில் வெந்து கொண்டு பண்ணி எடுத்து வருகிறார்களே ?’ என்று. போனால் போகிறதென்று ஸ்ரீசரணர்களிடமும் பரிதாபப் பட்டேன். இம்மாதிரி ‘பக்ஷண பயங்கரங்களைச் சாப்பிடுகிறாரே என்று ! அவருடைய கடும் ஆஹார நியமம் அறிந்திராத எனக்கு அந்த பக்ஷண வகைகள் பரிஜனங்களுக்கே போகுமென்பது தெரியவில்லை. அவரே அசட்டு பக்தைகள் கொண்டு வந்து கொடுக்கும் மூன்றாந்தர பக்ஷணங்களை மொக்கிக் கொண்டு தாமும் ஒரு சங்கராச்சாரியார் என்று பேர் பண்ணி வருவதாக நினைத்தேன். நமஸ்கரித்தெழுந்த பாட்டி ஒடுங்கி, ஒதுங்கி நின்றாள். அவளைப் பற்றி ஸ்ரீசரணர்களுடனிருந்த பாரிஷதர் அவரிடம் ஏதோ சொன்னார். என்ன பதில் சொல்லப் போகிறாரென்று ஸ்ரீசரணர்களின் முகத்தைப் பார்த்தேன்.

அவர் பதில் சொல்லவில்லை.

என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

தொடரும்……………………………………. 

4 comments:

  1. அருமையான ஆரம்பம்!!

    ReplyDelete
  2. அருமையான ஆரம்பம்!!

    ReplyDelete
  3. அருமையான ஆரம்பம்!!

    ReplyDelete
  4. அருமையான ஆரம்பம்!!

    ReplyDelete