Saturday, July 26, 2014

யோசிக்கவேண்டிய சில விஷயங்கள்



இல்லை போ!

""அம்மா தாயே! பிச்சை போடுங்க!'' என்று ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டின் முன் நின்று கத்தினான். 

அந்த வீட்டில் இருந்து ஒரு பெண் வந்து, ""ஒன்றும் மிச்சமில்லை போ,'' என்று சொல்லி அனுப்பினாள். 

அவனும் முணுமுணுத்துக் கொண்டே புறப்பட்டான்.

உடனே அவ்வீட்டின் உள்ளேயிருந்த அப்பெண்ணின் மாமியார் வாசற்பாடியில் வந்து நின்று கொண்டு, பிச்சைக்காரனைக் கைதட்டிக் கூப்பிட்டாள். அவனும் சோறு கிடைக்கப் போவதாக எண்ணித் திரும்பி வந்தான்.

""ஏம்ப்பா? அவள் சொன்னதும் நீ போய்விடுவதா?'' என்று அதட்டினாள் மாமியார்.

""சிறுபிள்ளை சொன்னதை நம்பித் தெரியாமல் போய் விட்டேன் தாயே! நீங்கள் போடுங்கள்,'' என்று சட்டியை நீட்டினான் பிச்சைக்காரன்.

""ஆம்! நான் தான் இந்த வீட்டு மாமியார். அவளுக்கு என்ன இங்கு அதிகாரம்? நான் தான் சொல்லணும். இப்ப சொல்றேன், இல்லை நீ போ,'' என்றாள் மாமியார்.

""ஏம்மா? இதைச் சொல்லவா அழைத்தீர்கள்? நான் என்னவோ உங்களை நம்பி... போங்கம்மா,'' என்று மனம் வெதும்பிச் சொல்லிக் கொண்டே போனான்.
பிச்சைக்காரனுக்கு இல்லை என்று சொல்கிற அதிகாரம் கூட மருமகளுக்கு இருக்கக்கூடாது என்று எண்ணும் மாமியார் களும் சிலர் இருந்தனர் என்பது இதிலிருந்தே தெரிகிறது. இதெல்லாம் அந்தக் காலம்!
.................
தன்னம்பிக்கை!

வன விலங்குகளிலே புலி, சிறுத்தை போன்றவை வாழும் குகைகள் மிகவும் நாற்ற மடிக்கும். அழுகல் இறைச்சியும், தோலும், முடியும் சிதறிக் கிடக்கும்.
ஆனால், சிங்கம் வாழும் குகையோ தூய்மையாக இருக்கும். அதற்குக் காரணம், நாளைக்கு வேண்டுமென்று இன்றைக்கே உயிர்களைக் கொன்று குகையில் கொண்டு வந்து இறைச்சிகளைச் சிங்கம் சேர்த்து வைப்பதில்லை. குகையினுள் பலநாள் படுத்து உறங்கும். இனி பசி தாங்காது என்றதும், மெல்ல எழுந்து குகையின் வாயிற்படிக்கு வந்து உடலை அசைத்து தலையை ஆட்டி, கர்ஜிக்கும்.

அந்த ஒலி எதிர்மலையில் தாக்கித் திரும்பி வரும். அங்கே காடு முழுவதும் பரவியுள்ள மானும், முயலும் இதோ சிங்கம், அதோ சிங்கம், என்று பயந்து நடுங்கிக் குறுக்கும், நெடுக்குமாக ஓடி வரும். அப்போது-
தன் குகை வாயிலண்டையிலே வருகிற ஒரு விலங்கை அடித்துத் தின்று, மீதியை அங்கேயே போட்டு விட்டு, உள்ளே போய்ப் படுத்துக் கொள்ளும்.
எந்தக் கணம் தேவைப்படுகிறதோ, அந்தக் கணமே தனக்கான உணவு தன் வாயண்டை வரும் என்ற திடமான நம்பிக்கை அதற்கு உண்டு. அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு!

பகுத்தறிவில்லாத வனவிலங்குகளுக்கு இத்தனை நம்பிக்கை இருக்கிறது. ஆனால், பகுத்தறிவு பெற்ற மனிதர்களிடம் இந்த நம்பிக்கை பல இருப்பதில்லை.

தன் அறிவை நம்புவது; தன் பலத்தை நம்புவது; தன் பொருளை, தன் சமுதாயத்தை நம்பி வாழ்வது; இது தான் தன்னம்பிக்கை!
இதைக் படிக்கிற நாம் இனியாவது நம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்துவோம்.

உன் சக்தியை உணர்ந்து கொள்!

காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அதன் அடர்ந்த பிடரி ரோமத்திற்குள் ஈ ஒன்று ரொம்ப காலமாக வாழ்ந்து வந்தது. இதனால் சிங்கத்தின் பிடரி முழுவதும் தனக்கே சொந்தம் என்ற இறுமாப்பும், அகந்தையும் அதற்கு உண்டாகி விட்டது.

இந்நிலையில் ஒருநாள் சிங்கத்தின் பிடரியில் அரிப்பு ஏற்பட்டது. அதற்காக, அருகிலிருந்த மரத்தில் தன் தலையை உரசிக் கொண்டது. ஆனால், இதனைச் சற்றும் எதிர்பாராத ஈ அந்த உரசலில் சிக்கிக் கொள்ள நேரிட்டது. இதனால் அதற்குக் கடுமையான கோபம் வந்து விட்டது.

சிங்கத்தின் பிடரியில் இருந்து ஒருவாறாகத் தப்பித்து, பறந்து வந்து அதன் முன்னால் நின்றது அந்த ஈ. எத்தனை நாட்களாக உன் பிடரி ரோமத்தில் நான் வசித்து வருகிறேன். உன் பிடரியில் அழுக்கு எதுவும் இல்லாமல் அதனைப் பாதுகாத்து வருகிறேன். இதனால் நீ நிம்மதியாக நமைச்சல் இல்லாமல் இருந்து வருகிறாய். நான் அங்கே இருப்பதால்தான் உன் பசிக்குத் தேவையான இரை அவ்வப் போது கிடைத்து வருகிறது. இத்தனை அதிர்ஷ்டம் உள்ள என்னை இப்போது தொந்தரவு செய்கிறாய். இனிமேல் ஒரு நிமிடம் கூட நான் இங்கே இருக்க மாட்டேன். உன் பிடரியை விட்டு இடம் பெயர்ந்தால்தான் உனக்குப் புத்தி வரும் என்று ஏதேதோ பேசிவிட்டுக் கோபமாக அங்கிருந்து வேறு எங்கோ பறந்து சென்றது.

சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த ஈ ஏன் இப்படித் தன் முன்னால் வந்து காட்டுக் கத்தல் கத்தி விட்டுப் பறந்து போனது என்பதும் குழப்பமாக இருந்தது.

இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில்தான் வசித்து வந்தது என்பதே இப்போது அது சொல்லித்தான் எனக்கே தெரிகிறது என்று மனதிற்குள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டது சிங்கம்.

இந்த ஈயைபோல சில மனிதர்கள் தங்களை இப்படித்தான் நினைத்துக் கொள்கின்றனர்.

................
.மன்னர் ஒருவருக்குத் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்து மக்களின் இன்ப துன்பங்களை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விநோத ஆசை ஏற்பட்டது. அதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு அமைச்சருக்கு உத்தரவிட்டார்.
அடுத்த நாளே மன்னரின் பயணம் தொடங்கியது. நாட்டின் குக்கிராமத்திற்குக் கூட அவர் செல்ல விரும்பியதால் சில இடங்களில் வாகனங் கள் எதுவும் செல்ல முடியவில்லை. கால் நடையாகவே செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இவ்வாறு தனது நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார் மன்னர். நிறைய கரடுமுரடான பாதைகளில் நடந்து சென்றதால், அவரது கால் பயங்கரமாக வலித்தது.
உடனே அமைச்சரை அழைத்து, ""இந்த நகரத்தின் சாலைகள் அனைத்தும் கரடுமுரடாக இருப்பதால் நடப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே நாட்டில் உள்ள அத்தனை சாலைகளிலும் விலங்கு களின் தோலைப் பரப்பி, நடப்பதற்கு எளிதாக இருக்குமாறு செய்ய வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.
விலங்குகளின் தோலைக் கொண்டு சாலை அமைப்பதென்றால் ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொல்ல வேண்டியது வரும். அதற்கு நிறைய செலவாகும்.
இந்த உண்மையை மன்னரிடம் சொல்வதற்கு அமைச்சர் தயங்கினார். மற்றவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்களே தவிர, யாருக்கும் மன்னரிடம் சொல்கிற தைரியம் வரவில்லை.
அப்போது வாயிற்காவலன் ஒருவன் மட்டும் தைரியமாக மன்னர் முன்னே சென்று வணங்கி, ""ஒரு கருத்தைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்,'' என்றான் பணிவாக.
உடனே மன்னர், ""சொல்'' என்றார்.
""விலங்குகளின் தோல்களால் சாலை அமைப்பது நல்ல யோசனைதான். அதற்கு நிறைய பொருள் செலவாகும். கணிசமான அளவில் விலங்குகளையும் கொல்ல வேண்டியிருக்கும். அதற்குப் பதிலாக, மிருதுவான தோலினால் ஆன காலணி ஒன்றைத் தயாரிக்கச் சொல்லி அதனைத் தாங்கள் அணிந்து கொள்ளலாம் மன்னா,'' என்றான் அந்தப் பணியாள்.
இதைக் கேட்டு வியப்படைந்த மன்னர், இந்தப் பணியாளின் யோசனையை ஏற்றுக் கொண்ட தோடு, உடனடியாகத் தனக்கு காலணி தயாரிக்க உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் உட்பட, அனைவரும் அவனை பாராட்டினர். மன்னர் அவனைப் பாராட்டி பரிசுகளை கொடுத்தார்

No comments:

Post a Comment