பாசம் தான் அனைவரையும் கட்டி அணைக்கிறது. பணம் தான் உறவைப்பிளக்கிறது என்பது எல்லோரும் தலையாட்டி ஒப்புக்கொள்ளும் விஷயமாக இருந்தாலும், அந்த பணம் தான் சிலரை ஒன்று சேர்க்கிறது. பணமா பாசமா என்பது இப்போது நமது பிரச்னை அல்ல. ஒரு கஷ்டமான நேரத்தில் யார் உதவுகிறார்கள், யாரால் துன்பம் வருகிறது என்று ஆராயும்போது தான் புரிகிறது (ரொம்ப லேட்டாக), கூடப்பிறந்தவர்களும், நெருங்கிய உறவினரும் தானே என்று நாம் அணைத்த கரங்கள் தான் நம் கழுத்துக்கு கத்தியை வீசின என்கிற உண்மை. இத்தகைய நேரத்தில் அந்த ஆபத்தில் யாரோ ஒருவரால் நாம் காப்பாற்றப்படுவோம். அவர் இறைவன் அனுப்பிவைத்த முன் பின் தெரியாதவர், அல்லது தெரிந்திருந்தாலும் அதிகம் பழகாதவர், நாம் எதிர்பாராமல் உதவி செய்த ஒரு நண்பர் அல்லது அவருக்குத் தெரிந்தவர் என்று இருக்கும். இது நிறைய பேர் வாழ்வில் நடப்பது.
இது எதைப்போல் இருக்கிறது தெரியுமா. நாம் மூன்று வேளையும் சாப்பிட்டு வளர்த்த நம் உடலின் பாகங்களிலே உள்ளே நம்மாலேயே பல வருஷங்கள் சுகமாக வளர்ந்த வியாதிகள், நோய்கள் தான் ஒரு சமயம் விஸ்வரூபம் எடுத்து நம்மையே சாய்க்க முயல்கிறது. அந்த நேரத்தில் நம்மைக்காப்பாற்றுவது எது ? எங்கோ ஒரு மலையில், ஒரு தோட்டத்தில், ஒரு மரத்தில், செடியில், உதித்த ஒரு தாவரத்தின் சாறு, சக்கை, அதன் பொடி , லேஹியம், அல்லது அதையே மிஷினில் அரைத்து மாத்திரை... இது போல் முன் பின் சம்பந்தமில்லாத ஒன்று. ஆபத்துதவியாக வந்த அந்த நண்பர்கள் சமய சஞ்ஜீவிகள் இந்த மருந்து போன்றவர்கள் - இது நான் சொல்லவில்லை ஒளவைக்கிழவி சொல்கிறாள்.
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
அப்படி எல்லாரையும் மதித்து, அன்போடு, அவர்களுக்கு வாரி வாரி வழங்கிய ஒரு நல்ல மனிதன் ஒரு நாள் நலிந்து போனாலும் பொருளின்றி வாடினாலும் அவன் குணம் மாறாதே. இருப்பதைக் கொடுக்கவும் தயங்கமாட்டான். இன்சொல் குறையாது. அன்பு குறையாது . கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று ஏற்கனவே படித்தோமல்லவா. அதே தான் இது.
கெட்ட ஆசாமிகள் பற்றி ஒரு வார்த்தை சொல்லியாக வேண்டுமே. அவனும் எப்போதும் ஒரே மாதிரிதான். நல்ல நாளிலும் உதவாதவன் நலிந்து போனால் நாயும் சீந்தாதவனாகி விடுவான்.
பாட்டியம்மாள் இதை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறாள். பொன் குடம் உடைந்தாலும் அதற்கு மதிப்பு உயரலாமே தவிர குறையாது. அதைப்பார்த்து அருகே இருந்த மண் பானை உடைந்தால் வாரி வெளியே கொட்டவேண்டியதுதான் அதன் நிலை.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?
ஒரு ஆசாமியின் உடை, பந்தா, பகட்டு, படாடோபம், வரட்டு கவுரவம் இதெல்லாம் அவனை மதிப்புக்குரியவனாக்காது.
அமைதி, எளிமை, இன்சொல், நாணயம், குறைந்த பேச்சு, இதுவே அவனை உயர்ந்தவனாக்கும். இது எதுபோலவாம்?
கற்றாழைக்கு இல்லை பெரியது. வாசனை? நறுமணம்? சிறிய துளசி இலை இருக்கிறதே அது உருவில் சின்னது தான். ஆனால் அதன் மதிப்பு, மணம் , மேன்மை எவ்வளவு உயர்ந்தது. எனவே உருவத்தைப்பார்த்து மயங்காதே. உள்ளே இருக்கும் விஷயத்தைப் பார்க்க கற்றுக்கொள் என்கிறாள் பாட்டி.
ஒரு அழகான பொருத்தமான உதாரணம் நச் சென்று சொல்கிறாள். கடல் எவ்வளவு பெரிய அளவு நீர் கொண்டது. தாகத்திற்கு ஒரு டம்ளர் குடிக்க முடியுமா? கிராமத்தில் சின்ன ஆறு. அது வரண்டுபோனாலும் ஒரு சிறு ஊற்றுக்கண் மண்ணைத் தோண்டினால் நீரைக் கொடுக்கிறதே. அதன் ருசி அவ்வளவு பெரிய கடலுக்கு உண்டா.
இது தான் நல்லவனுக்கும் தீயவனுக்கு உள்ள வேற்றுமை என்கிறாள்.
மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்
நல்ல நண்பர் யார். சமய சந்தர்ப்பவாதிகள் நண்பர்களாக இருப்பவர்கள் யார் என்று தெரிந்துகொள்வது எப்படி?பார்த்துக்கொண்டே இருப்பார்கள், எப்போது இனிமேல் ஒன்றும் தேறாது இவனிடம் என்று அறிந்துகொள்கிறார்களோ அடுத்த கணமே துளியும் மனத்தில் நன்றியின்றி பழசை மறந்து பறந்துவிடுவார்கள். இவர்களா நண்பர்கள், உறவினர்கள் ?
இதை யோசித்த கிழவி ஒரு தக்க உதாரணம் கொடுக்கிறாள். இதோ பார் அந்த குளத்தை. ஒரு காலத்தில் எவ்வளவு நீர் இருந்தது. அப்போதெல்லாம் எத்தனை பறவைகள் வரும், மீன்கள் நிறைய, இருக்கும். மழையில்லை, வானம் வரண்டது. வெப்பம் ஏறியது. எங்கும் அனல். குளம் சுண்டி விட்டது. இனி பறவைகள் அங்கு எதற்காக வரப்போகிறது. அகப்பட்டதை எல்லாம் எடுத்துக்கொண்டாகிவிட்டதே. குளம் தனியாகி விட்டதா? இல்லை. கண்ணுக்கு லட்சியமாக இல்லாமல் அப்போதும் இப்போதும் சாஸ்வதமாக குளத்தில் இருப்பது அதன் அடியில் மண்ணில் வளர்ந்த, படர்ந்த கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற செடி கொடிகள் தான். குளத்தில் நிறைய நீர் இருந்தபோதும் இப்போது வரண்ட நிலையிலும் துணையாக உள்ளது அவைதான். நேசத்தை நட்பை வறட்சி மாற்றவில்லையே.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
No comments:
Post a Comment