Sunday, March 9, 2014

கெட்டவா’—ன்னு லோகத்திலே யாருமே இல்லே



பகை பாராட்டித் தீங்கிழைக்கக்கூடிய கூட்டத்தினரின் இதயத்தை அவர் அன்பினால் அப்படியே வென்றதற்கு ரத்தின குஞ்சலங்களாக மூன்று உதாரணம் காட்டலாம்.
இதற்குப் பின்னாண்டுகளில் ஒன்று.

காஞ்சியில் ஸ்ரீசரணர் ஒரு மாலை எங்கோ புறப்பட்டார் எங்கே என்று தெரியாமலே அவரது அணுக்கத் தொண்டர்களும் உடன் புறப்பட்டனர். ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பதற்கேற்ப இப்படி அடிக்கடி நடப்பதுண்டு.

பெரியவாள் மேலே மேலே ஒரு சாலையில் சென்று கொண்டிருக்க, உடன் வந்த பாரிஷதர் தயங்கினார். அன்று அங்கே கழகப் பொதுக்கூட்டம் ஒன்று சாலையை அடைத்தே நடந்து கொண்டிருந்தது. பேச்சாளர்களில் நன்றாகவே இனபேதம் பாராட்டி ஆத்திக—வைதீகர்களைச் சாடுபவர்களும் இருந்தனர். அதுவே பாரிஷதர்களின் தயக்கத்திற்குக் காரணம்.

விஷயத்தைப் பெரியவாளிடம் கூறி, வேறு வழி செல்லலாம் என்று விண்ணப்பித்துக்கொண்டனர்..

அதிசயப் பெரியவாளோ, “நல்ல அகல ரோட்தானே! அதனால், நம்மால் அவாளுக்கு இடைஞ்சல் இல்லாமப் போக முடியுமோன்னோ?” என்று கேட்டுவிட்டு முன் வைத்த காலைப் பின் வைக்காமல் போய்க்கொண்டேயிருந்தார். சித்தன் போக்குதான்!

மேடை மீதிருந்து பேசிக்கொண்டிருந்த காரசாரப் பேச்சாளர் சற்றுத் தொலைவிலிருந்தே பெரியவாள் கோஷ்டி வருவதைப் பார்த்துவிட்டார். ‘என்னவெல்லாம் குத்தல் மொழி, கூட்டத்தினரைத் தூண்டும் வீர வாசகம் அடுக்கத் தொடங்குவாரோ என்று கோஷ்டியினர் அஞ்சினர்.

ஒலிபெருக்கியில் பேச்சாளரின் குரல் ஒலித்தது. கரகரப்புக் காரத் தொண்டையில் திடுமென ஒரு மழமழப்பு மதுரம் உண்டாக அவர் கூறினார், “மதிப்புற்குரிய சங்கராச்சாரியார் சுவாமிகள் இந்த வழியாகச்செல்கிறார். பொதுமக்கள் அவருக்கு அன்பு கூர்ந்து வழிவிட்டு அவர் சௌகரியமாகச்செல்வதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

அதோடு பேச்சையும் நிறுத்திக்கொண்டார். பெரியவாளே ஹாஸ்ய உணர்வுடன் கசப்பான உண்மைகளைச் சொல்வதில் ஒன்றாக, அவர் சொல்வதை ஆஸ்தீக உலகம் கேட்பதைவிட, நாஸ்தீகத்தலைவர்கள் சொல்வதை அவர்களைச் சேர்ந்தோர் கேட்டு அப்படியே நடப்பது மெய்தானே? அதற்கேற்ப, இப்போதும் கூட்டத்தினர் நன்றாக ஒதுங்கி நின்று பெரியவாள் கோஷ்டி செல்வதற்கு தாராளமாக வழி செய்தனர்.

அல்ல; தலைவர்கள் வாக்குக்குக் கட்டுப்பட்டுமட்டும் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அது, அவர்களின் மரியாதை பா(BH)வனையிலும், வழி செய்து கொடுப்பதில் அவர்கள் காட்டிய விரைவிலும் நன்கு தெரிந்தது. குழந்தைக்கண்ணனுடன் சென்ற வஸுதேவருக்கு யமுனைப் பிரவாஹம் வழிவிட்டாற்போலவே அன்று அந்த மக்கள் பிரவாஹம் பெரியவாளுக்கு வழி விட்டது. என்று அணுக்கத்தொண்டர் ஸ்ரீபாலு கூறுவார்!

அவர்களில் பலர் கைதூக்கிப் பெரியவாலைக் கும்பிடவும் செய்தனர் பெரியவாள் அருட்பார்வை பாலித்த வண்ணம் முன்னேறினார். அவர் சற்று தூரம் கடந்தபின்தான் ஒலிபெருக்கி மீண்டும் ஒலியைப் பெருக்கலாயிற்று.

“கெட்டவா’—ன்னு லோகத்திலே யாருமே இல்லே. எல்லாரும் அந்த ஒரே ஈச்வரன் கொழந்தைதானே?” என்று உடன் வந்தோரிடம் ஸ்ரீசரணர் கூறினார்..

ஜனகோ தேவ: ஸகல தயாளு!’ என்ற அந்த உண்மையை உள்ளுணர்வாகப் பெற்றவர்களிடம் எவரானாலும் அன்பாகத்தானிருக்க முடியும்!


No comments:

Post a Comment