Monday, June 10, 2013

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவான அன்பைப் பூரணமாக வைத்துவிட வேண்டும். பரமாத்மா நம்மைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்து விடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க முடியும்.அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒருநாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம். பரமாத்மாவிடம் அன்பை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டால் அவருக்கு வேறாக யாருமே இல்லை என்று தெரியும். மரணமடைகிற மனிதர்களாக எண்ணி, அதுவரை யாரிடமெல்லாம் துக்க ஹேதுவான அன்பை வைத்திருக்கிறோமோ அவர்களும்கூட இப்போது அழியாத பரமாத்மா ஸ்வரூபமாகவே பார்த்து அன்பு செலுத்த வேண்டும். அப்போது நம் அன்பு ஒரு நாளும் துக்கத்துக்கு மூலமாக ஆகாமலே இருக்கும்.எல்லோரையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து அன்பு செலுத்த முடியாவிட்டாலும், ஆத்ம குணம் நிறைந்த பெரியவர்கள், நல்ல ஞானமும் அருளும் நிறைந்த ஸத்குரு ஆகியோரைப் பரமாத்மாவாகக் கருதி, அன்பு செலுத்துவது சுலபமாக முடிகிறது. அப்படிப்பட்டவர்களிடம் அன்பு வைத்து ஆத்மார்ப்பணம் செய்துவிட்டால் போதும். அவர்கள் மூலமாக பரமாத்மா நமக்கு அநுக்கிரகம் பண்ணி விடுவார். நம் அன்புக்கும் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, பரமாத்மா வேஷமாகப் போட்டுக் கொண்ட ஒரு சரீரத்துக்குத் தான் அழிவு உண்டாயிற்று. இப்போது சரீரி பரமாத்மாவோடு ஒன்றாகிவிட்டார் என்ற ஞானத்தோடு பிரிவுத் துன்பத்துக்கு ஆளாகமலே இருப்போம். நம் அன்பு கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈச்வரனிடம், ஸாதுகளிடம் இந்த அன்பை அப்யசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுவே ஜன்மா எடுத்ததன் பயன்.

No comments:

Post a Comment