Friday, May 24, 2013
பரமாச்சார்யாள்
டேய் பாலாஜி உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !“
------------------------------------------------------------------------
“காஞ்சி பார்ட்டி நீங்கதானே ? ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !” “ஆமாம்.” “இருங்க வண்டி வந்திருக்குது.”
“நான் சிவராமன் இல்லைப்பா.” “சரி சிவசங்கர். வாங்க! ங்களுக்குத்தான் வண்டி.” பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்து, மூடி- ஓடிப் போய் சீட்டில் அமர்ந்தான்.“டிரைவர் உங்க பேரு என்ன ?” “பால் ராஜிங்கம்மா. “நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”
“நாளைக்கு மெள்ள தரிசனம் பண்ணிக்கறம்பா. எனக்கு அவசரம் இல்லை. நான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லை. இந்த அம்மாதான்…..இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கம் !”
“அப்படீங்களா ? சந்தோசங்க.மனித தெய்வம் சார் பெரியவரு. இதுவரைக்கும் எம்பத்தெட்டு முறை தரிசனம் பண்ணிட்டேங்க! இன்னம் பன்னண்டு பண்ணா நூறாயிரும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”“பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?
“ஆமாங்க அதனாலே என்ன சார் ?” “Funny !” என்றார் சிவசங்கர்.
“எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம். அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ - கோயிலுக்குப் போ — கடைசில — எல்லா தெய்வங்களும் ஒண்ணு தானே ….” “விபூதி வரவழைப்பாரா ?”
“அது சாய்பாபாங்க.-
இவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”
“உனக்கு நடந்ததா ?” “பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்க. அடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !” “அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார். அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.
“பெரியவர்தாங்க தெய்வம். தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குது. உங்களுக்கு என்ன வேணுங்க
“காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா!” “அம்மா உங்களுக்கு ?”
“நிம்மதி ” என்றாள். “அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”
“பால்ராஜ், பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.” “எனக்குத் தேவைப்படுதுங்க.” “லுக் அவுட் !” என்று கத்தினார்.
வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்து, தார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.
அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்க, பால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்க! பதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னி போட்டுரலாங்க. இளநி சாப்பிடுங்க.”
சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார். மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது. “இளநி சீவலாங்களா ?”
“வேண்டாம்ப்பா .” “சீவிட்டேங்களே…” பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள். “சரி, குடு” என்றார். நல்ல வேளை. இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !” பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி டைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார். “இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ. “வேண்டாம்மா.பெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.” “மயிரிழைல தப்பினம்.”
“எல்லாம் பெரியவர் ஆசிங்க !” “அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.
“நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிரலாங்க. அப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துரலாம்.”
சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”
“இல்லைங்க. அரைமணிதான் அவரைப் பார்க்க சமயம். அதுக்குத்தாங்க விரட்டிக்கிட்டே வந்தேன்.” பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன். நாம வந்தது பரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ண. ஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”
“நாம வந்ததுன்னு சொல்லாதே. நீ வந்தது! எனக்கு இதில இஷ்டமில்லை; நம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப் பரவாயில்லை. தலைவலி எனக்கு !”
அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மா, அம்பாள் பூசை செய்யறாரு சின்னவரு. வாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.” “வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.” “நான் வரலை நீ போ. நான் ரூம்ல இருக்கேன்.”
“நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.” “அதான் பால் இருக்கானே ?”
“அய்யா நான் உள்ளே வர மாட்டேங்க! வெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….” “ச்சே! உன்னோட வேதனை பாகீ !” “ப்ளீஸ்! ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதா, பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப் பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”
அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்
“மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.” “நான்தான் காரணமா சொல்லு ?”
“சரி நானும்தான் காரணம்.” பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”
சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன். ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாது. அப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன். நான் நாஸ்திகன். மதமும் ஒரு போதைப் பொருள். ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”
“சும்மா வாங்களேன் துணைக்கு!” அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!” என்றார். பாகீரதிக்கு அழுகை வந்தது. ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.
மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் -உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது. பெரியவரைப் பார்க்கச் சென்றார்கள். சிவசங்கரன் ஓரமாக நிற்க,பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க.மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”
அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்து கொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.
ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள். உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர்ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை. அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக் கழட்டிக் கொண்டிருந்தான்.இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”"தொண்ணூறுங்க ! அய்யா அமெரிக்காலருந்து வராரு”"அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ !” என்று பாகீரதியை அருகே அழைக்க,பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.
“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான். ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் ! உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ? எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”
“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”
அந்த இளைஞன் அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல,அவர் கைகளை உயர்த்தி வாழ்த்தினார்.பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது. காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்து அந்த இளைஞன், “எல்லாம் சரியாய்ப் போய்டும். கவலைப்படாதீங்கோ. பையன் பேர் என்ன சொன்னேள் ?” “பாலாஜி.” அவர்கள் வெளியே வந்தனர். சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?”
“சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !”
அவள் அடங்காமல் அழுதாள். “பாகீ ! பாகீ டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்தி அழைத்துச் சென்றார்.
பின்னால் குரல் கேட்டது.
“டேய் பாலாஜி உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !“
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment