Thursday, May 16, 2013

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பகுதி

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பகுதி
நினைவு கூர்ந்தவர் : ஸ்ரீமதி ஜானா கண்ணன், மைலாப்பூர், சென்னை

மாதாமாதம் தரிசனம் என்பது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் ஏலக்காய் மாலை, கிரீடம் இப்படி ஏதாவது கொண்டு சென்று சமர்ப்பிப்பேன்.
ஒரு தடவை, “என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் பத்து மாலை கொண்டு வராளா?” என்று அருகிலிருந்த தொண்டர் பாணாம்பட்டுக் கண்ணனைக் கேட்டார்கள். “என் கழுத்தில் எத்தனை மாலை இருக்கு - எண்ணு”.

கழுத்தில் போட்ட மாலைகளைக் கழற்றாமல் மேலே மேலே போட்டுக் கொண்டிருந்ததால், கழுத்து நிறைய மாலைகள் இருந்தன. கண்ணன் ஒவ்வொன்றாய்த் தொட்டு எண்ணிவிட்டு, கடைசி மாலை வந்த போது ‘பத்து’ என்றார்.

“போய், கையை அலம்பு” என்றார்கள், பெரியவாள் விளையாட்டுத்தனமான புன்முறுவலுடன்.

(ஆசார அனுஷ்டானங்களை அனுசரிப்பவர்களுக்குப் புரியும் - பத்து, தீட்டு, எச்சல் என்றால் என்ன என்று. சமைக்கப்பட்ட பொருளைக் கையால் தொட்டால், பத்து என்ற தூய்மைக் குறைவு ஏற்படும் என்பது ஆசார வழக்கு. ‘பத்து’ என்று கண்ணன் சொன்னதால், அந்தக் குறை விலக, கையை அலம்பச் சொன்னார்கள் பெரியவா. பெரியவாளின் குறும்புப் பேச்சு, நகைச்சுவையை எழுத்தில் அடக்க முடியாது!)

கண்ணன் சொன்னார் : “சகல ஜீவநதிகளும் பெரியவா சரீரத்தில் இருக்கு. அதனால், பத்தும் இல்லை, பதினொன்றும் இல்லை!”

ஆமாம். நமக்கும் ஒன்றுதான் இருக்கிறது - பெரியவாள்!

No comments:

Post a Comment