Tuesday, February 5, 2013
நான் கடவுளுடன் வாழ்ந்தேன். பகுதி-------6
நான் கடவுளுடன் வாழ்ந்தேன்.
பகுதி-------6
ட்யூஷன் கட்டணத்தைச் செலுத்தி விட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். மடத்தின் மேனேஜர், ஸ்ரீ விஸ்வனாத ஐயர், தொடந்து ஐந்து வருஷங்களுக்கு என்னுடைய ட்யூஷன் கட்டணத்தை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.------மொத்தம் 1100 ரூபாய்!
இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு நாள், ரத்னசாமி செட்டியார், என்னைத் தேடிக்கொண்டு, ஒரு பெரிய காரில் என் அக்கா வீட்டிற்கு வந்தார். அவரைப் பார்த்ததில் எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது . வடக்கு ஸன்னிதி தெருவில் இருந்தவர்களெல்லாம் ஊரிலேயே பெரிய பணக்காரர், இங்கே எப்படி எதுக்காக வந்திருக்கிறார் என்று தெரிய ஆவலுடன் இருந்தனர்.
குவித்த கைகளுடன் செட்டியார் என்னைப் பார்த்துக் கூறினார், “நீ என்னைப் பார்க்கக் கடைக்கு வந்தப்போ, உன்னைக் கேவலமாக நடத்தியதற்கு என்னை மன்னித்து விடு. உன் மீது பெரியவா இவ்வளவு அன்பாக இருக்கிறார் என்று அப்போ எனக்குத் தெரியல. சில நாளைக்கு முன்னால பெரியவாளை தரிசனம் பண்ணக் காஞ்சீபுரம் போயிருந்தேன். அவர் சுருக்கமாக உன்னைப் பற்றிக் கூறிவிட்டு, எனக்கு உன்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார். எல்லா பக்தர்களுக்கும் முன்னே, என்னைப் பார்த்துக் கூறினார், “ நீ ரொம்ப பணக்காரனா ஆயிட்டே. ஒரு சின்னப் பையனோட மனசை நீ எப்படி நோகடிக்கலாம்?”
“தம்பி! என்னால வாயைத்திறக்க முடியலை. ஒரு பொது இடத்தில் நான் கேவலப்படுத்தப் பட்டதாக நினைத்தேன். அது வரை நான் பெரிய பணக்காரன் என்ற எண்ணமே என்னைப் பற்றி இருந்தது. அன்றுதான் நான் எவ்வளவு ஏழை என்பதை அவர் பல பேர் முன்னிலையில் எனக்கு உணர்த்தினார். காஞ்சீபுரத்திலிருந்து நேரே உன்னைப் பார்த்து மன்னிப்புக் கேட்கத்தான் வருகிறேன். நான் உன்னுடைய எல்லா கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்கிறேன். நீ அதை ஏற்றுக்கொள்ளணும்.”
இப்படி நடப்பதை எல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. அவ்வளவு பெரிய பணக்காரரான செட்டியார் ஒரு சின்ன ஏழைச் சிறுவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்!
ஆனால் நான் புத்தியை நழுவ விடவில்லை. அவரிடம் பணிவாகக் கூறினேன், “பத்து நாட்களுக்கு முன் நான் பெரியவாளைப் பார்த்தேன். அடுத்த வாரம் மறுபடியும் போகிறேன். பெரியவா உங்களைப் போய் பார்க்கச் சொன்னால், உங்கள் கடைக்கு நானே வந்து உங்களை சந்திக்கிறேன்.”
“நீ வந்து என்னைப் பார்ப்பாய் என்று நம்புகிறேன்.” என்று சொல்லிவிட்டு, செட்டியார் புறப்பட்டுச் சென்றார்.
இது நடந்ததற்கு இரண்டு வாரங்கள் முன்பு, நான் சற்றும் எதிர்பாராத ஒருவர், ஒரு நல்ல செய்தியுடன் என்னைப் பார்க்க வந்தார். உயர்நிலைப்பள்ளியில் எனக்குத் தமிழ் ஆசிரியராக இருந்த திரு.முருகேசனார்தான் அவர். அவர் என்னைப் பார்க்க வந்தது பற்றி நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். பெரியார் ஈ.வி.ராமசாமிநாயக்கரின் தீவிர சிஷ்யர், அவர். அதனாலேயே முருகேசன் பிள்ளை என்ற தன்னுடைய பெயரை, முருகேசனார் என்று மாற்றி வைத்துக் கொண்டார். ஒரு ஆசிரியருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையுடன் அவரை வரவேற்றேன்.
முருகேசனார் சொன்னார், “நான் பெரியாரின் தீவிர சிஷ்யன் என்று உனக்குத் தெரியும். எனக்குப்
பல பிராமண நண்பர்கள் இருந்தாலும், ஒரு பிராமணருடைய வீட்டிற்கும் நான் போவதில்லை.
நான் என்னுடைய வாழ்த்துக்களை உனக்குத் தெரிவிப்பதற்காக வந்தேன். நம்முடைய பள்ளிக்கு நீ பேரும் புகழும் கொண்டு வந்திருக்கிறாய். SSLC தேர்வின், தமிழ்த் தாளில், நீ சென்னை மாகாணத்திலேயே முதலாவது மாணவனாக வந்துள்ளாய். வேறொரு ஊரிலுள்ள இன்னொரு பள்ளியின் மாணவனும் நீ எடுத்த அதே மதிப்பெண்கள் எடுத்துள்ளான் என்று இப்பொழுது தெரிய வந்தது. தருமபுரம் ஆதீனம், ஒவ்வொரு வருடமும் SSLC தமிழ்த் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாக வரும் மாணவனுக்கு 300 ரூபாய் பரிசாகக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. அவர்களுடைய மெட்ராஸ் அலுவலகத்திற்கு, நம் பள்ளியின் பிரதிநிதியாக ஒருவரை அனுப்பும்படி நம் தலைமை ஆசிரியருக்கு தந்தி கொடுத்துள்ளனர். இரண்டு மாணவர்களில் ஒருவரை சீட்டுப்போட்டுக் குலுக்கல் முறையில் (lottery) தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம். உனக்குத் தெரியும், நான் இந்த ஆதீனங்களை அதிகம் மதிப்பதில்லை என்று. ஆனால் நம் பள்ளியின் மாணவனான உன் பிரதிநிதியாக நான் அங்கு போகப்போகிறேன். பெரியாரைத் தீவிரமாகப் பின்பற்றும் நான், ஆச்சார்யாரின் தீவிர பக்தனான உனக்குப் பிரதிநிதியாகச் செல்லப்போகிறேன்.. உனக்கு இந்த பரிசு கிடைத்தால் உன்னுடைய கல்லூரிப் படிப்புக்கு மிக உதவியாக இருக்கும்.. பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் , நம் பள்ளியின் சாதனையாளர் பட்டியலில் உன்னுடைய பெயர் இடம் பெரும். நாங்களெல்லாம் உன்னைப் பற்றி மிகவும் பெருமைப் படுகிறோம். நீ என்னுடைய மிகச் சிறந்த மானவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
எனக்கும் என் அக்காவிற்கும் ஒரே மகிழ்ச்சி!
முருகேசனார் புறப்படத் தயாரானார். இந்த நல்ல செய்தியை வந்து சொன்னதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
“ இந்த பிராமணரின் வீட்டிலிருந்து ஒரு கோப்பை பால் கொடுத்தால் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டேன்.
அவர் இதற்குத் தந்த பதிலை நான் இன்றளவும் மதிக்கிறேன், “ உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஒரு மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையே உள்ள உறவாகும். வேறு எந்த ஒரு விஷயமும் இதைப் பாதிக்காது.. நீ எனக்கு ஒரு கோப்பை பால் கொடுப்பாயானால், இந்த செய்தியைக் கொண்டாடும் வகையில் அதை நான் மிக மகிழ்ச்சியுடன் வாங்கிப் பருகுவேன்.” என்றார். நன் அளித்த பாலை முருகேசனார் வாங்கிக் குடித்துவிட்டுப் புறப்பட்டார்.
இந்த சமயத்தில், இந்த வரலாறுக்கு சம்பந்தமில்லை என்று வாசகர்கள் நினைக்கக் கூடிய ஒரு வஷயத்தைக் கூற விரும்புகிறேன். தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் நான் இளவயதில் கொண்டிருந்த ‘காதல்’ தான் அது. உயர்நிலைப்பள்ளிப் படிப்பின் போது, பழந்தமிழ் இலக்கியங்களை அதிக முனைப்போடு படிப்பேன். தமிழில் உள்ள பல பக்திப் பாடல்களை மனப்பாடம் செய்திருக்கிறேன். கம்பரின் ராமாயணம், இளங்கோவின் சிலப்பதிகாரம், பாரதியார் பாடல்கள் ஆகியவைகள் என்னை அதிசயிக்க வைத்திருக்கின்றன. சிந்தனையைத் தூண்டும் திருக்குறளை மனப்பாடம் செய்தேன். நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடக்கும் ஸ்ரீ கிருபாநந்த வாரியாரின் சொற்பொழிவுகளைத் தவறாமல் கேட்பேன். கல்கி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பிரபல நாவல்களையும், மு.வரதராசனார், ஆர்.பி.சேதுப்பிள்ளை ;, கி.வா.ஜகன்னாதன், மற்றும் ராஜாஜி ஆகியோரின் எழுத்துக்களையும் விரும்பிப் படிப்பேன். பெரியவாளின் முயற்சியால் நடந்த திருப்பாவை----திருவெம்பாவை போட்டிகளில் கலந்து கொள்வேன். என்னுடைய மூன்று ஆசிரியர்களான திரு. கண்ணாயிரம் தேசிகர், திரு.திருநாவுக்கரசு ப் பிள்ளை, மற்றும் திரு.முருகேசனார் ஆகியோர், தமிழில் நல்ல புலமை உடையவர்கள்.. முருகேசனாரைத் தவிர்த்து, மற்ற இருவரும் ஆழ்ந்த தெய்வ பக்தி உடையவர்கள். இந்த மூவரும்தான் என்னைத் தமிழ் இலக்கியத்தின் அழகை ரசிக்க வைத்தவர்கள். பெரிய ஆசிரியராகப் பெரியவாளும் கூட இருந்தார். தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த நல்ல புலமையைப் பல சமயங்களில் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்; முக்கியமாக தமிழ் நாடு முழுவதிலும் 50-களில் அவர் ஏற்பாடு செய்து நடந்த பல திருப்பாவை—திருவெம் பாவை மாநாடுகளில், அவரே சில சமயம் பேசியிருக்கிறார். பல இரவுகள் அவர் நிகழ்த்திய தமிழ் சொற்பொழிவுகளைக் கேட்டே எனக்குத் தமிழில் ஒரு ஆழமான உள்நோக்கு கிடைத்தது. அவர் செய்த அந்த சொற்பொழிவுகள், தெய்வீகம் மற்றும் வேதாந்தம் பற்றியதாக இருந்ததோடு, அவை மிகவும் எளிமையான இலக்கியத் தமிழில் ஆற்றப்பட்டன. நம்முடைய அதிருஷ்டம் அவைகள் எல்லாம் நமக்குப் புத்தக வடிவில் தமிழிலும் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இப்போது கிடைத்துள்ளன.
தொடரும்…….
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment