காஞ்சி மஹா பெரியவர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தனர் அந்த தம்பதியினர். காஞ்சி மஹானை வணங்காமல் எந்த செயலையும் ஆரம்பிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் மீது அவர்களுக்கு பக்தி.
இந்நிலையில் ஒரு நாள், அந்த பெண்மனி கர்ப்பிணி ஆனாள். குழந்தை எந்த பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று அவர்கள் மஹானை வேண்டாத நாளே இல்லை.
ஒரு நாள் இரவில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் கனவில் நரசிம்மர் தோன்றி, பிறக்கப்போகும் குழந்தைக்கு தனது பெயரை சூட்டுமாறு உத்தரவிட்டார்.
ஆனால், கர்ப்பிணிப் பெண்ணோ, ‘எங்களுக்கு எல்லாமே காஞ்சி பெரியவர்தான். அவர் எப்படிச் சொல்கிறாரோ அதைத்தான் செய்வோம்’ என்று தெய்வத்திடமே வாதிட்டாள் கனவில்.!
நரசிம்மரும் அந்த பெண்ணை அவளது வழிக்கு விடவில்லை. ‘எனது பெயரைத்தான் வைக்க வேண்டும்’ என்று அவரும் உறுதியாக இருந்தார்.
அப்போதே கனவும் கலைந்து விட்டது. விழித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இறைவன் இட்ட உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என்ற பயம் ஏற்பட்டது. இருந்தாலும், தான் கண்ட கனவு பற்றி கணவரிடம் கூறினாள்.
தொடர்ந்து, இருவரும் காஞ்சி மஹானை கேட்ட பிறகு, அது பற்றி முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்தனர்.
அடுத்த மாதமே அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதை உறுதி செய்ய இருவரும் குழந்தையுடன் காஞ்சி மஹா பெரியவரை பார்க்கச் சென்றனர்.
மஹான் காலடியில் குழந்தையை கிடத்தியவர்கள், மஹான் என்ன சொல்லப் போகிறார் என்பதை கேட்கும் பொருட்டு அமைதியாக நின்றனர்.
கை, காலை உதைத்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த ஆண் குழந்தையைப் பார்த்த மஹா பெரியவர், “பொதுவாக ஒரு குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகள் செய்வார்கள். அதன் பிறகுதான் பெயர் சூட்டுவார்கள். ஆனால், இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான். அப்படித்தானே நரசிம்மா ?” என்று கேட்க, குழந்தையின் பெற்றோர் அதிசயித்துப் போய் நின்றனர்.
தாங்கள் கண்ட கனவு பற்றி மஹா பெரியவரிடம் எதுவும் சொல்லாத நிலையில், அவரே கனவில் வந்த நரசிம்மர் கூறியபடி குழந்தையை ‘நரசிம்மா’’ என்று அழைத்ததால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி, அப்படியே சாஷ்டாங்கமாக மஹா பெரியவரின் காலில் விழுந்தனர்.
No comments:
Post a Comment